• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

காவல் நான் காதல் நீயடி 34

kodi sundar

Well-known member
அத்தியாயம் 34




"நந்துப்பா"

இப்படி சத்தமாகக் கார்த்திக் அழைத்த பின்பு தான், அவரும் ரிஷியும் இயல்புக்கு வந்தனர். என்றபோதும் நந்தா அவரையும் மீறி,

"வெற்றி"
என்று முணுமுணுத்தார்.

"என்ன நந்துப்பா, அப்பா'வ நினைச்சிட்டீங்களா?"

என்று களங்கமில்லாமல் கேட்டவனை மற்ற இருவரும் அன்புடன் பார்த்தனர்.

"அவனை மறந்தாதானே நினைக்கிறதுக்கு?"

என்ற நந்தா தன்னை மீட்டுக்கொண்டு சொன்னார்..

"இப்படி ச்சில்லுன்னு கடல்காற்று படுற மாதிரியா வெளிய உட்காருவீங்க? உள்ள போங்க"

அவர்கள் வழமையே இதுதானே. பதில் சொல்லாமல் உள்ளே சென்றனர் நண்பர்கள். மூவரும் ஹாலில் அமர, நந்தகுமார் சொன்னார்..

"நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டா அங்க ரெண்டு பிள்ளைங்களும் தனியா இருப்பாங்களே?"

ரிஷிதர் சிரிக்க,

"அதெல்லாம் இருப்பா. நல்லா தூங்கிட்டு இருப்பா"

என்றான் கார்த்திக்.

எனில், அப்படித்தானா என்றால் இல்லை. கார்த்திக்கின் நினைவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் வர்ஷினி. இப்போது இரவாக இருக்க, இன்று அதிகாலையில் நடந்தது என்னவெனில்...

குளித்து முடித்து, பாவாடை ரவிக்கையுடன் வெளியே வந்தவள், சும்மாவேணும் சேலையை மேலே போட்டுக் கொண்டு கார்த்திக்கை உலுக்கி எழுப்பினாள்.

'ஏங்க டைம் ஆகுது. பள்ளிக்கூட விழாவுக்குக் கிளம்ப வேணாமா எழுந்திருங்க"

அசைந்து, குப்புற படுத்துக் கொண்டவன்,

"தினேஷ் கரெக்ட் டைம் எழுப்புவான், நீ உன் வேலையைப் பாரு" என்றான்.

"போங்களேன் எனக்கென்ன?"

என்றவள், சேலை முனையை இடுப்பில் சொருகிக் கட்ட ஆரம்பித்தாள். சரியாக தினேஷின் ஃபோன் அடித்து பாடல் கேட்டது...

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

கார்த்திக், வர்ஷினி இருவரும் சிரித்து விட்டனர்.

"முழிச்சிட்டேன்டா பெரிய மனுஷா"

என்று தினேஷிடம் சொன்னவன், எழாமல், திரும்பிப் படுத்து மனைவி சேலை கட்டுவதைக் காலாட்டிப் பார்த்திருந்தான். இடை மறைத்து, சேலையை இழுத்து இடுப்பருகே அவள் ஊக்கு குத்துவதைப் பார்த்து,

"ஏன் கீத்து இப்படி தினம் நாலஞ்சி பின் குத்திப் புடவை கட்ட உனக்குக் கஷ்டமா இல்லையா?"

என்றான். வர்ஷினி சிரித்தாள்.

"நம்ம கேரெக்டர் என்னன்னு, பார்த்தவுடன் தீர்மானிக்கிறது முதல்ல நாம உடுத்துற உடை தான். அதுக்குக் கொஞ்சம் மெனக்கெடுறதுல தப்பு இல்ல மாமு"

"ஓஹோ"

என்று புருவம் தூக்கியவன் அவளையேப் பார்த்திருக்க, வர்ஷினிக்கு கூச்சம் வந்ததில்,

"என்ன இங்கப் பார்வை? திரும்புங்க அங்க"

என்றாள்.

"என்கிட்டயிருந்து இன்னும் எதைக் காப்பாத்திக்கப் போற கீத்து?"

என்றான்.

"ச்சே பேச்சைப்பாரு"

என்றவள் பல்லில் லேசாக கடித்துப் பிடித்திருந்த சாரிபின்னை எடுத்து, அவன் மேல் விட்டெறிந்தாள். அதையெடுத்து முத்தமிட்டு சொன்னான்..

"கொடுத்து வச்சது. உன் கூடவே இருக்கு"

"ஏன் நீங்களும் என்கூட தான இருக்கீங்க?"

எழுந்து நின்று சோம்பல் முறித்தவன்,

"ரிஷி படத்தை முடிக்க, ரெண்டு நாள் அங்க இருக்கணும் கீத்து"

அவன் சொன்னதுதான், வைத்த கொசுவத்தை, வயிற்றுக்குள் அவசரமாக சொருகியவள், இரண்டெட்டில் அவனருகே வந்து அவனை அணைத்துக் கொண்டாள். முகர்ந்தான் அவளை.

"ஏய்! கோகுல் சாண்டல் பொண்ணு, என்னாச்சு?"

"கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வாரத்தில இருபது நாள் வெளிய தங்குறீங்க"

"ஹாஹா. என்ன கணக்கு இது டீச்சர் மேடம்?"

"மம்ம்ம்ம்? காதல் கணக்கு"

என்றவளைத் தானும் அணைத்துக் கொண்டவன், அவளை சமாதானம் செய்யும் வகையில், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவள் வயிற்றருகே கொசுவத்தை சேர்த்துப் பிடித்து, அந்த சாரிப்பின்னைக் குத்தினான்.

"ஸ்ஆ" என்றாள்.

"ஏய் என்ன குத்திருச்சா?"

"இல்ல"

"பின்ன?"

பதில் சொல்லாமல் கண்சிமிட்டி அவள் சிரிக்க,

"ஆஹான்?"
என்றவன், அவள் வயிற்றில் மூக்குரசி விளையாட,

"போங்க போங்க குளிச்சிட்டு வாங்க"
தோள் பிடித்துத் தள்ளி விட்டாள்.

இப்போது அதுவே கார்த்திக்கிற்கும் நினைவு வர லேசாக சிரித்துக் கொண்டவன், நந்தகுமாரைக் கேள்வியாகப் பார்த்தான். அவர் சொன்னார்...

"நாளைக்கு கடைசி நாள் ஷூட்டிங். நீங்க ரெண்டு பேரும் கவனமா இருந்துப்பீங்க'ல?"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்"

"இல்ல கார்த்தி, நாளைக்கு நைட் கபிலன் வெளிநாடு போறான்...

என்று இழுக்க,

"தெரியும்'பா. ஆனா அவனை வெளிநாடு அனுப்பி விட்ற பிளான் எனக்கில்லை. அங்கப் போயும் அவன் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது செஞ்சு போலீஸ் கிட்ட மாட்டுவான். அவன் பிள்ளைக்கு தான் எந்த பாதுகாப்பும் இல்லை. அதான் அவன் மனைவிக்கு ஃபோன் பண்ணி, அவனை நாளைக்கு நேர்ல சந்திச்சி பேச சொல்லியிருக்கேன்"

"உனக்கு எதுக்கு கார்த்தி இந்த வேலை?"

என்றார் நந்தகுமார்.

"எனக்கென்ன'ன்னு இல்லாமல் நாம் செய்யும் சின்ன மெனக்கடல்கள், ஒருத்தரோட வாழ்க்கைக்கு, இன்னொரு வாய்ப்பைத் தரலாம் இல்லையா?" என்றான்.

"இதான் கார்த்தி, உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்குது"

என்று மனதில் நினைத்துக் கொண்ட ரிஷி அமைதியாகப் பார்த்திருந்தான்.

"இதனால அவன் கோபம் உன் பக்கம் தான் திரும்பும், கவனமா இரு"

என்ற நந்தா எழுந்து கொண்டார்.

சொன்ன மாதிரியே கபிலனின் மனைவி மீரா, காலையிலேயே அவன் வீட்டை வந்தடைய அடியாட்கள் அவளைத் தடுத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த கபிலன் முகம் சுளித்தான். மனைவி வந்ததும் பிடிக்கவில்லை, அடியாட்கள் அவளை மிரட்டுவதும் பிடிக்கவில்லை அவனுக்கு. உள்ளே அழைத்து வந்து என்னவென்று கேட்டான். அதற்குள் மகன் வந்து தாயை அணைத்துக் கொள்ளக் கோபமாக வந்தது கபிலனுக்கு.

"கபி நீ எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டுப்போ"

"தாராளமா வா. ஆனா என்னை ஏன் எதுக்குன்னு எதும் கேட்கக்கூடாது"

"அதெப்படி? நாம வாழுற வாழ்க்கை ஒண்ணு தான். அதை நல்லவிதமா வாழ வேணாமா?"

"அப்போ உனக்கு என் வாழ்க்கையில இடமில்ல"

"நான் இங்கயிருந்து போக மாட்டேன்"

"போக வேணாம், இங்கேயே இரு. உன்னை நேசிச்சதுக்கு இந்த வீட்டை உனக்குத் தரேன். நீயே வச்சிக்கோ"

என்றவனை வேதனையுடன் பார்த்தாள் மீரா. அவள் கேட்பது வீடில்லை. நேர்மையாக வாழும் வாழ்க்கை என்று இவனுக்கு எப்படிப் புரிய வைக்க?
~~

இங்கே ஷூட்டிங் ஆரம்பித்தது. மிச்சமிருந்த ஸ்டண்ட் சீன் எல்லாம் முடித்து, மதிய உணவுக்குப்பின் கொஞ்சம் ஓய்வெடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ரிஷி, ஹீரோயினைத் தூக்கிக்கொண்டு நடக்க சுபம் போட வேண்டும் அவ்வளவே. முன்னம் ஒருநாள் சக்தி வந்ததால், ரிஷியால் நிறுத்தப்பட்ட காட்சி. எல்லோரும் அதற்குத் தயாராக கார்த்திக், போலீஸ் வேலை பார்த்திருந்தான்.

ஹீரோயின் செட்டுக்கு வர, கார்த்திக்கின் முகம் மாறியது. அப்பெண் இடை தெரிய, தொடை தெரிய, மேலெல்லாம் தெரிய நடந்து வர, ரிஷி அப்பெண்ணைத் தூக்கினால், அங்கங்கு தொட வேண்டியதிருக்கும். கார்த்திக், ரிஷியை முறைக்க,

"இந்த விஷயத்தில நான் தலையிட்டா, பெரிய விஷயமா மீடியா வரைக்கும் போகும் கார்த்தி"

என்றான் அவன்.

"அப்ப நான் கேட்குறேன்டா"

என்று கார்த்திக் சொல்ல, இவ்விருவர் மீதும் பெரும் அபிமானம் கொண்ட டைரக்டர்,

"சார் என்ன விஷயம்?"

என்று வந்தார். ஹீரோயின் உடையைக் கைகாட்டினான் கார்த்திக்.

"சார் இதெல்லாம் சகஜம். பாலிவுட்ல'லாம் இதான் போடுறாங்க"

"உங்க வீட்லப் போடுறாங்களா?"

"சா...ர்?"

"மக்கள் ரசனையை இவ்ளோ ச்சீப்பா காட்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா, ஆன்?

"...."

"கேட்டுப்பாருங்க பசங்க கிட்ட. பொண்ணுங்க சேலை, தாவணி, சுடிதார், ஜீன்ஸ் போட்டா பிடிக்கும்'னு தான் சொல்வாங்க. இப்படி உடையை எவனும் சொல்ல மாட்டான்"

"....."

"அதென்ன பொண்ணுங்க'னா இப்படி ட்ரெஸ் பண்ணனும். ஆம்பளைங்க'னா குடிக்கணும். அதான் உங்க சினிமாவா? யார் திருப்திக்கு படம் எடுக்கிறீங்க? நீங்களும் படிச்சவர் தான, ஒரு நல்லக் கதையும், நல்லப் படமும் எடுக்க முடியாதா?"

"இது இது நல்ல படம் தான் சார்"

"அப்போ எதுக்கு இப்டி ட்ரெஸ்? நிறையப் படம் நடிச்சி முன்னணில வரணும்ங்கிற அந்தப் பெண்ணோட நியாயமான ஆசையைத் தப்பா யூஸ் பண்ணிக்கிறீங்களா?

"இல்ல கார்த்திக் சார்"

"என் வைஃப் சொல்வாங்க.. நாம போடுற ட்ரெஸ் தான் நம்ம கேரெக்டர சொல்லும்'னு"

அவன் அப்படி சொன்னது தான், அந்தப்பெண் உடைமாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமில் நுழைந்து விட்டது. டைரக்டர் திரும்பி செல்ல, ரிஷிகார்த்திக் இருவரும் அமர்ந்து கொண்டனர். ரிஷி விளையாட்டாக கேட்டான்..

"என்னடா தங்கச்சிப் புருஷா, உன் தங்கச்சிக்காக என் கற்பைக் காப்பாத்திறியா?"

"கற்புங்கிறது பெண்ணைத் தொடறதுல இல்லடா. அவளை வச்சிக் காப்பாத்திறதில இருக்கு"

"சரிங்க மச்சான்"

அவன் முடியை செல்லமாக ஆட்டிய கார்த்திக்,

"ஷூட்டிங் முடிஞ்சவுடனே நான் கிளம்புறேன் ரிஷி. வேலையிருக்கு"

"ஆன், அதெப்படி? வர்ஷி, சக்தியை வர சொல்லியிருக்கேனே, இன்னைக்கு நம்ம வீட்ல தான் கொண்டாட்டம்"

"நீ கூத்தாடியேதான்டா ரௌடிப்பயலே"
 
இருவரும் இப்படி பேசிக் கொண்டிருக்க, நடந்தவை எல்லாம் கேட்டபடி கபிலன் உள்ளே நுழைந்திருந்தான். அவன் முகத்தை மாஸ்க் மறைத்திருந்தது. சிரித்துக் கொண்டான் கபிலன்.

"கார்த்திகேயன், நீ ரொம்ப நல்லவன். ஆனா அதான் பிரச்சினையே. நான் சின்ன வயசுலயிருந்து கஞ்சாவுல ஊறி வளர்ந்தவன். என் பொண்டாட்டியை விடுவேனே ஒழிய, இதை விட மாட்டேன். ஆனா நீ தடையாயிருக்க. உனக்கேத் தெரியும்... போதை மருந்து கடத்தலுக்கு சென்னை முக்கியமான கேந்திரம். இங்க உன்ன மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆபீசர் இருக்கக்கூடாது.

நாங்க யாரும் கொலை செய்ய மாட்டோம். நண்பனோ, பகைவனோ கஞ்சாவைத் தான் தருவோம். உனக்கும் அதையேத் தந்திட்டு நான் கிளம்புறேன் கார்த்திகேயன். நீ மூச்சடைச்சி உன் அப்பா கிட்ட போவியோ, இல்ல கோமாவில கிடப்பியோ உன் அதிர்ஷ்டம்"

என்று மனதுக்குள் சொல்லிவிட்டு,

ஒரு டம்ளர் நீரில், தான் கொண்டு வந்த "கேட்டமைன்" எனும் போதை மருந்தை முழுதும் கொட்டி, டம்ளரை டிரேயில் வைத்து,

"சார் வாட்டர்"

என்று போய் நின்றான். யாரும் தப்பாக நினைக்க வாய்ப்பில்லை. இவ்வளவு நேரம் கார்த்திக் டைரக்டரிடம் வாதித்தான் தானே.. தாகம் எடுத்திருக்கும். அதற்காகக் கொண்டு வந்ததாகத் தான் தோன்றும். ஆனால் கார்த்திக்கை அவன் முழுதாக அறிந்திருக்கவில்லை.

ரிஷியிடம் பேசிக்கொண்டே லேசாகத் திரும்பி, தண்ணீரை தான் பார்த்தான். அவன் பார்வை கூர்மையாகி, அவன் கண்டு கொண்டான் என்று தெரிந்த அடுத்தநொடி, ரிஷியின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான் கபிலன்.

அங்கிருந்தோர் அனைவரும் பதற, ரிஷியின் முகத்தில் சிஞ்சித்தும் அதிர்வில்லை. பின்னே கார்த்திகேயன் இருக்க பயமேன்?

"டேய், நீதான் கபிலனா, என் கார்த்திய பத்தி இன்னுமா உனக்கு தெரியாம போச்சு?"

என அவன் மனதுக்குள் நினைத்துக்கொள்ள,

அவ் நினைப்பை சரிசெய்ய கார்த்திக், தன் நீளக் காலால் ஒரு எத்து எத்தினான் கபிலனின் காலில். இத்தனைக்கும் அது நந்தகுமார் சுட்டதில், கொஞ்சம் டேமேஜான கால் இல்லை. ஆரோக்கியமான இன்னொரு கால். ஆனால், அதற்கே அவன் கொஞ்சம் மடங்கி குனிய, ரிஷியை இழுத்துக் கொண்டான் கார்த்திக். பின்பு,

இருவ்ருக்கும் மல்யுத்தம் போல் சண்டை. விடுவாரா டைரக்டர்? அக்காட்சியைப் படம்பிடிக்க சொல்ல, ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. கபிலனும் சரிக்கு சரி மல்லுக்கு நின்றான். அவன் கையில் கத்தியிருக்க, அது கார்த்திக் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பயம் அனைவருக்கும்.

ஒரு கட்டத்தில் கபிலன் ஆக்ரோஷமாகத் தாக்க முனைய, அவன் கத்தி, கார்த்திக்கின் தோளை உரசி சென்றது. அப்போது உள்ளே நுழைந்தனர் வர்ஷினியும், சக்தியும். வர்ஷினி முதலில் திகைத்து, பின் பயந்து,

"கார்த்தி'பா"
என்று கூவினாள்.

அவள் பயத்தைக் கண்டு, இனி சண்டை போதும் என்று நினைத்த கார்த்திக், அடுத்தநொடி, கபிலனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான். அங்கிங்கு அசைய முடியா நிலை. கபிலன் முறைத்துக் கொண்டு நிற்க, பெண்கள் இருவரையும், ரிஷி தன்பக்கம் இழுத்துக் கொண்டான். கார்த்திக் சொன்னான்..

"உன்ன நான் ஏர்போர்ட்'ல மீட் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். நீ இங்கேயே வந்துட்ட. நீ வெளிநாட்டுக்குப் போகத் திட்டம் போட்டா, நான் விட்ருவேன்னு நினைச்சியா கபிலா? உன்னோட இன்டர்நேஷனல் சீக்ரட் ஃபோன் நம்பர்லயிருந்து, இப்போ வச்சிருக்கிற டம்மி நம்பர் வரை எங்கக் கண்காணிப்புல இருக்கு. உன் மனைவி பிள்ளையைத் தவிர, உனக்கு உதவக் கூடிய அத்தனை பேரையும் நாங்க பிடிச்சாச்சு. சந்தேகம் இருந்தா இப்போ பஷர் வருவார். கேளு. இனி உனக்கு ரெண்டு சாய்ஸ் தான். அரெஸ்டாகி உள்ளப் போறது, இல்ல திருந்தி வாழுறது"

"என்ன சுட்டுடு கார்த்திகேயன்"

"சுடணும்'னா ஆரம்பத்திலேயே செஞ்சிருப்பேனே, உன்னைத் திருத்தணும்'னு முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு கபிலா. காரணம் உன் பையன். உன் மனைவிக்காக செய்யாதத உன் பிள்ளைக்காக நீ செஞ்சிதான் ஆகணும்" என்க,

அப்போது பஷர், கபிலனின் மனைவி, பிள்ளையோடு உள்ளே நுழைந்தான். தன் தந்தையைப் பார்த்துவிட்டு பிள்ளை,

"அப்பா"
என அழைக்க, கபிலன் சும்மாயிருந்தான்.

"வாடா குட்டிப்பையா"

என்றான் கார்த்திக். குழந்தை இவனிடம் தாவியது. பின்னே! அவனைக் கடத்தும்போது, பஷரும், இவனும் காட்டிய விளையாட்டுக்கள் எத்தனை? குழந்தைகள் தன்னோடு, தனக்கு நிகராக விளையாடுபவர்களை மறந்து விடுவதில்லை அல்லவா!

குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் கேட்டான்...

"தம்பிக்கு ஸ்கூல் இல்லையா?"

"இல்ல, லீவ்"

"குட், தம்பி என்ன படிக்கிறீங்க?"

தன் அம்மாவை ஒருமுறை பார்த்துவிட்டு சொன்னது...

"போலீசுக்குப் படிக்கிறேன்"

கார்த்திக் சிரித்தான்.

"படி, உன் அப்பா இனிமே தன் நியாயமான உழைப்பில உன்னப் படிக்க வைப்பார். நல்லாப் படி"

இவர்கள் இப்படிப் பேசுவதை அனைவரும் ரசித்துப் பார்க்க, கபிலன் மட்டும் உம்மென்று இருந்தான். குழந்தையை வெளியே கூட்டி செல்ல ஜாடை காட்டிய கார்த்திக், கபிலனிடம் சொன்னான்..

"அன்னைக்கு என் தம்பியை கம்பத்திலக் கட்டி வைக்க சொன்ன. உன்ன நான் அப்படி'லாம் செய்யப் போறதில்லை. "பஷர்" என்றான்.

"சார்"
என்றவன் வெளியே போய் ஒரு பையனை அழைத்து வர, அவன் கல்லூரி மாணவன் வினோத். முன்னம் போதைக்கு அடிமையானவன்.

அட எத்தனை பேர் தான் வருவீங்க என்பது போல் படப்பிடிப்புக் குழுவினர் பார்க்க, கார்த்திக் தன் பணியை, இல்லை பேச்சைத் தொடர்ந்தான்..

"இதோ இந்தப் பையன் ஊர் செங்கல்பட். நீ உன் குடும்பத்தோடு அங்க தான் போற. நல்லா சந்தோஷமா இரு. என் ஆளுங்கள கூட அனுப்புறேன். உனக்குப் பிடிச்சா இவங்க அப்பாவுக்கு விவசாயத்துல உதவியா இரு. இல்லைனா நீ படிச்சவன். ஒரு நல்ல வேலை கிடைக்கும். அத வச்சிக் குடும்பத்தோடு நிம்மதியான வாழ்க்கை வாழப் பாரு"

"....."

"இப்போ நான் சொன்னதில ஏதாச்சும் தப்பா போச்சு... உன் மகனை உன் மனைவிக்கிட்ட ஒப்படச்சிட்டு என் அப்பா சொன்னமாதிரி உன்னை வேறக் கேஸ்'ல அரெஸ்ட் பண்ணி, நீ வெளிய வராத மாதிரி உள்ளப் போட்ருவேன். பஷர் கூட்டிட்டுப் போங்க"

வேறு வழியேயின்றி தலை கவிழ்ந்து மனைவி பிள்ளையோடு, பஷரின் பின்னால் சென்றான் கபிலன். அவன் தலை நிமிர்ந்து நடக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.. என்பதே கார்த்திகேயனின் நம்பிக்கை.

அவன் அருகே வந்தனர் ரிஷி, சக்தி, வர்ஷினி. ரிஷி கேட்டான்..

"எப்படி கார்த்தி, ஒரு போலீஸா இருந்துகிட்டு இவ்ளோப் பெரிய மன்னிப்ப அவனுக்குத் தந்திருக்க?"

"பின்ன என்னடா? குடிகாரன் பிள்ளை குடிகாரனாகவும், கடத்தல்காரன் பிள்ளை கடத்தல் தாதாவாகவும் ஆகுறது சட்டமா என்ன? அந்தக் குட்டிப் பையன் சொன்னான்'ல போலீஸ் ஆவேன்னு. அவன் அப்படி ஆகுற வரை நான் கவனிச்சிட்டே இருப்பேன்டா"

"கார்த்தி"
என்று நண்பனை அணைத்துக் கொண்டான் ரிஷி.

"சார்! அந்த சீனை இப்பவாவது முடிச்சிடலாமா?"

டைரக்டர் தயங்கித் தயங்கி கேட்க, வாய்விட்டு சிரித்து நண்பனை அனுப்பினான் கார்த்திக்.

"என்ன சீன், என்ன சீன்?" என்று சக்தி முன்னே வர,

"போச்சுடா"
என்றார் டைரக்டர்.

கார்த்திக் தன் தங்கையின் தோளில் தட்டி தூர காட்டினான். அங்கே நாகரீகமாக, ஆனால் ரசிக்கும் வகையில் ஹீரோயின் உடையிருக்க, சக்தி தம்ப்ஸப் காட்டினாள்.

ரிஷி நடிக்க செல்ல, சக்தி அதை வேடிக்கைப் பார்க்க நிற்க, மற்ற அனைவரின் பார்வையும் கூட அங்கே திரும்பியது. கார்த்திக் தன் மனைவியிடம் வந்தான். எக்கி அவனை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி.

"போலீஸ்காரன் பொண்டாட்டி இப்படியா பயப்படுறது?"

என்று கேட்டவன், அவள் கைப்பிடித்து, செட்டை விட்டு, வெளியே வந்து கடற்கரை வீட்டை நோக்கி நடக்க, அவனையேப் பார்த்தபடி நடந்தாள் வர்ஷினி.

சண்டையிடும் வீரம் கொண்டவன். மன்னிக்கும் நியாயம் கொண்டவன். உண்மையில் இவன்... தான் வென்ற இடமெல்லாம், தோற்றவருக்கே விட்டுக் கொடுத்து வந்த, அந்த ராஜராஜ சோழ வம்சத்தவன் தானோ? என யோசித்தாள் அந்தத் தமிழ் ஆசிரியை...

ஆம்!
கார்த்திகேயன்
கடம் கொண்டான்..
கடாரம் கொண்டா...ன்.

தொடரும்...
 
கபிலன் சாப்ட்டர் முடிஞ்சிதா? ஆனாலும் அவனுக்கு மன்னிப்பு அநியாயம்.😡
 
கபிலன் சாப்ட்டர் முடிஞ்சிதா? ஆனாலும் அவனுக்கு மன்னிப்பு அநியாயம்.😡
கார்த்திக்கோட விளக்கம் அவன் சார்பாக சொல்வான் பாருங்க 🤗💜
 
Back
Top