• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

காவல் நான் காதல் நீயடி 35

kodi sundar

Well-known member
அத்தியாயம் 35




கார்த்திக்கின் பிடியில் நடந்து கொண்டிருந்த வர்ஷினி, அவன் உள்ளங்கையை நெருடினாள். அவன் திரும்பிப் பார்த்து, முகமசைத்து என்னவென்று கேட்டான். கடற்கரையை காட்டி,

"வாங்க, அலையிலக் கொஞ்ச நேரம் நிப்போம்"
என்றாள்.

அவன் சம்மதிக்க, இருவரும் சென்றார்கள். கார்த்திக் கரையிலே நின்றுவிட, வர்ஷினி கடலை நோக்கி ஓடினாள். ஒவ்வொரு அலைக்கும் சந்தோஷமாகக் கூவி அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தவள், கொஞ்ச நேரம் செல்ல, கார்த்திக்கையும் அழைக்க எண்ணி திருப்பிப் பார்த்தாள். அவன் கைகளைக் கட்டிக்கொண்டு, கடலுக்குள் மூழ்கும் சூரியனை அமைதியாகப் பார்த்திருந்தான்.

வர்ஷினியும், அவனையேப் பார்த்து நின்று விட்டாள். அவளின் கற்பனை சிறகடித்துப் பறந்தது. உண்மையில், இவன் ராஜ உடையில் எப்படியிருப்பான்? எத்தனை யோசித்தும் அவள் கண்ணுக்குள் வந்தது காவல் உடை அணிந்த கார்த்திக் மட்டுமே. கண்களைத் தட்டி முழித்தவள், அவனைப் பார்க்க, வெள்ளை சட்டையில் இருந்தான். முறைத்தாள் அவனை.

அந்த நேரம் அவளைப் பார்த்தவன், கேட்டான்..
"ஏய்! என்ன?"

"என்னது என்ன, உங்க யூனிஃபார்ம் எங்க?" அதட்டினாள்.

"அடேங்கப்பா அதட்ற?"

"ஆமா அதட்றேன்"

"எங்க, கிட்ட வந்து அதட்டுப் பார்ப்போம்"

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருக்குமா அலைகள்? வர்ஷினியை கடலுக்குள் இழுக்க,

"அச்சோ கார்த்தி'பா"

என்று கத்தினாள். ஓரெட்டில் முன்னே வந்து அவளைப் பிடித்துக் கொண்டான். அவன் முழங்கையில், தன் இருகைகளையும், கோர்த்துக்கொண்டு, அவனை நெருக்கி நின்று கொண்டாள். கேட்டான்..

"அதென்னடி கார்த்தி'பா?"

"அது காதல், பாசம், உரிமை... எல்லாம்"

கார்த்திக் சிரித்தான்.

கேட்டாள்...
"கூப்பிட்டுக்கவா?"

"உனக்கு இல்லாமலா கீத்து?"

என்றான் இதமாக. இன்னும் வேறு காரணம் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டான்.

பின்னர், இருவரும் மணலில் அமர்ந்தனர். இப்போது நிலவு தன்னைக் காட்டிக்கொண்டு ஒளிர்ந்தது. இருவரும் மௌனமாக அதை ரசித்தனர். எப்போதும் நமக்குள் எழும் அதேக் கேள்வி தான். இதோ இவனும் கேட்டான்...

"ஏன் கீத்து நிலவு ஆணா, பெண்ணா?"

"ரெண்டும் தான்"

"அதெப்படி?"

"அது ஒரு கதை"

கதை என்றவுடன் கார்த்திக் சிரித்தான். அவள் சிணுங்க,

"சொல்லு கீத்து கேட்போம்"

என்றான் குமிழும் சிரிப்புடன்.

சொன்னாள்..

"சந்திரனுக்கு அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்து ஏழு மனைவிகள். எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பா இருந்தானாம். ஆனா கடைசி மனைவி ரேவதி மேல மட்டும் அவனுக்கு மிகுந்த காதலாம். அவகூட அதிக நேரம் இருப்பானாம். இதனால மற்ற மனைவிங்களுக்கு அவன் மேல கோபமாம்"

"ஓஹோ"

"அவன் கிட்ட சண்டை போட்டாங்களாம். அவனுக்குத் தன் தவறு புரிஞ்சாலும், ரேவதி மேல உள்ளக் காதலைக் கட்டுப் படுத்தவே முடியலையாம். திரும்பத் திரும்ப அவகிட்ட தான் போனானாம்"

"...."

"கோபம் தாங்காம அவனுடைய மூத்த மனைவி சாபமிட்டாளாம்...

"பெண்களோட மனசைப் புரிஞ்சிக்காத நீ பெண்ணாய்க் கடவது"ன்னு.

அதை ஏற்றுக் கிட்ட சந்திரன் சொன்னானாம்...

"என் காதலை மறைக்க முடியாம தான் உங்க சாபத்துக்கு நான் ஆளாகிட்டேன். இனி நான் உலகத்தில் உள்ள எல்லாக் காதலுக்கும் சாட்சியா இருப்பேன்"னு. இதான் சந்திரன் ஆணும் பெண்ணுமான கதை"

என்று கூறி முடிக்க, கார்த்திக், அடக்கி வைத்த சிரிப்பை, மொத்தமாகக் கொட்ட வர்ஷினி அவனை முறைக்க கார்த்திக் சொன்னான்..

"உன்னை மாதிரி அறிவாளியைக் கட்டலனா என் வாழ்க்கை என்னாகியிருக்கும் கீத்து?"

வர்ஷினி அவனை அடிக்க, அவள் கைகளைப் பிடித்து, தன் கைக்குள் வைத்துக் கொண்டான் கார்த்திக்.

"ரொம்பக் கிண்டல் பண்றீங்க. நான் ஒரு டீச்சர். நியாபகம் வச்சிக்கோங்க"

"ஹாஹாஹா. நான் டீச்சர்'னு சொன்னா மட்டும் திட்டுவ?"

"ஆன், நான் சொல்வேன். நீங்க சொல்லக்கூடாது"

இவர்கள் இங்கு இப்படி செல்ல சண்டைகள் செய்ய, அங்கே ரிஷி, சிபிதாஸ் படத்தின் கடைசி காட்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு சக்தியிடம் வந்தான். அவன் வந்தது கூட தெரியாமல், அவள் குனிந்து அமர்ந்திருந்தாள். கூப்பிட்டான்..

"சகி"

நிமிர்ந்து பார்த்தவள்,
"சிபு எல்லாம் முடிஞ்சுதா?"

"நீ பார்க்கலயா சகி"

"இல்ல சிபு. என்னால முடியல"

அத்தனை ஜாலியாக கட்டைவிரல் உயர்த்தி, சம்மதம் சொன்னவளின் இப்போதையத் தவிப்பு புரிய, மனைவியை அணைத்துக் கொண்டான் ரிஷி.

"உன்னைக் கஷ்டப்படுத்தி நான் நடிக்கணும்'னு இல்ல சகி. நீ சொல்லு எல்லாம் நிறுத்திடறேன். நானும் அப்பா மாதிரியே ப்ரொடியூசர் ஆகிடறேன்"

சக்தி சிரித்தாள்.

"இப்படி ஈஸியா பெரிய முடிவை எடுக்க உன்னால தான் முடியும் சிபு. ஆனா வேணாம். இதெல்லாம் எனக்குப் புதுசு தான? இந்த மாதிரி சீன் மட்டும் நான் பார்க்கல. சரியா? உன் அழகுக்கு நீ என்னைக்கும் ஹீரோ மட்டும் தான்"

"அப்போ நான் ஹீரோயினை..

என்று அவன் இழுக்க, அவன் வாயைப் பொத்தி,

"மூச்"
என்றாள்.

என்றவளை தோளில் கைபோட்டு வெளியே அழைத்து வந்தான் ரிஷி. தூரத்தில் கார்த்திக், வர்ஷினி தெரிய இருவரும் அங்கே சென்றார்கள். வர்ஷினி சும்மாவேணும் உம்மென்று இருக்க, கார்த்திக் இன்னமும் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.

"டேய்! என்னடா?"
என்றான் ரிஷி கோபமாக.

கார்த்திக் சொன்னான்..
"அதுவா? கீத்து ஒரு கதை சொன்னா...
என்று அவன் இழுக்க,

"என்ன கதை?"

என்றனர் இருவரும் ஆர்வமாக. கார்த்திக் சொல்லத் தொடங்க, ரிஷி தடுத்து,

"வர்ஷி நீ சொல்லு"
என்றான்.

அவளும் சொன்னாள். அவள் சொல்ல, சொல்ல ரிஷியும், சக்தியும் நிலவையேப் பார்த்திருந்தனர்.

உண்மை தானே, காதலை சண்டையிட்டுப் பெற்றுக் கொள்ள முடியாது. ஏன் எதற்கு எப்படி வந்தது என்று சொல்லவும் முடியாது. இவ் அலைகளைப் போல், வீசும் காற்றைப்போல் கட்டுப்படுத்த முடியாத உணர்வு அது. அதற்கு இந்த நிலவே சாட்சி.
~~

அடுத்தநாள், வர்ஷினிக்கு விடுமுறையிருக்க, கார்த்திக்கும் வீட்டில் இருந்து கொண்டான். காலையில் நந்தகுமார், செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க, தினேஷும், இவனும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"ப்ரோ, உனக்கு நியாபகம் இருக்கா? வர்ஷினி சாரி அண்ணி, முதமுறை நம்ம வீட்டுக்கு வந்தப்ப நான்தானே அவங்கள உனக்கு ஜோடின்னு சொன்னேன்"

"ம்ம்ம், ஆமாடா. ரிஷியை சந்திக்கிப்போறத கூட சொல்லிட்டியே. அதெப்படிடா தினேஷ், என் லைஃப்ல நடக்கிறத நீ முன்னமே சொல்லிட்ற?"

தினேஷ் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

"சரி சொல்லு, இன்னைக்கு என்ன நடக்கும்?"

"வேறென்ன அண்ணா? அப்பா சென்டிமென்ட் தான்"

என்றவன், நந்தாவைக் காட்ட, அவரும் செ.தாளை மடித்து விட்டு நிமிர இருவரும் சிரித்தனர். சென்டிமென்ட்டுக்குத் தயாராகி, நிமிர்ந்து அமர்ந்தனர்.

நந்தா அழைத்தார்..

"கார்த்தி, கபிலன் எப்படி இருக்கான். கேட்டியா?"

"அவன் ஒழுங்கா இருந்துதான ஆகணும்? அவன் பையன் தான் ஜாலியா வயலை சுத்தி விளையாடுறானாம்"

"கூட, நம்ம சைட் ஆள் யார் இருக்கா?"

"எத்திராஜை அனுப்பி இருக்கேன்"

"அவரா?"

நந்தகுமார் யோசனையுடன் கேட்க, தினேஷின் முகம் சுண்டியது.

"அவருக்கென்ன நந்துப்பா? பஷருக்கு அடுத்து எனக்கு நம்பிக்கையான ஆள் இப்போ அவர் தான்"

என்றவன், தினேஷ் அறியாமல், நந்தகுமாரிடம் கண்காட்டினான். புரிந்து கொண்டவர்,

"ம்ம்ம் மாறிதான ஆகணும்? நம்ம வீட்டுக்கு சம்மந்தி ஆகப் போறவராச்சே"

என்க, தினேஷ் முகத்தில் மலர்ச்சி.

"அப்பா"

என்று சந்தோஷத்தில் கத்தினான்.

"படவா, போலீஸ் வீட்டுப் பெண்ணயே சைட்டடிச்சிருக்க. உன்ன லாத்தியால ரெண்டு போட்டா என்ன?"

"ஹாஹாஹா, நந்துப்பா"

என்றான். நந்தகுமார் அவனை அன்புடன் பார்க்க,

"அப்பா சென்டிமென்ட் இன்னைக்கு உனக்குதான்டா"

என்றான் கார்த்திக் மெதுவாக.

"இரு ப்ரோ இன்னும் டைமிருக்கு"

என்றான் தினேஷ்.

மங்கையும், வர்ஷினியும் காலை உணவை சாப்பாட்டு மேஜையில் கொண்டு வந்து வைத்தனர். மங்கை அழைக்க மூவரும் சென்று அமர்ந்தனர். இட்லியைப் பிட்டவருக்கு, சக்தியின் நினைவு வர, நந்தா சொன்னார்...

"சக்தி இருந்தா, நந்துப்பா எனக்குன்னு கேட்பா" என்றார்.

உடனே வர்ஷினியும், தினேஷும் ஒன்றுபோல சொல்லினர்..

"நந்துப்பா எனக்கு?"

நந்தாவும், மங்கையும் சிரிக்க, கார்த்திக் அமைதியாக இருந்தான். நந்தா அந்த இட்லித் துண்டை அவன் வாயில் வைத்தார்.

"நாங்கக் கேட்டா அவருக்குத் தரீங்க?"

வர்ஷினி சண்டைக்கு வர,

"அதான?"
என்றான் தினேஷ்.

"கேட்காத பிள்ளைக்குத் தான் ஏக்கம் இருக்கும்"

என்று விட்டார் நந்தா.

அடுத்த நொடி, மங்கை, வர்ஷினி, தினேஷ்.. கார்த்திக்கைப் பார்க்க, அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிடுவது நோக்கமில்லை. வெறும் பாவனை. அன்புடன் அழைத்தார் நந்தா..

"கார்த்தி"

"சொல்லுங்க"

என்றான் நிமிராமல்.

உண்மை சொல்ல வேணுமெனில், கார்த்திக்கின் பலம் வர்ஷினியும், ரிஷியும் என்றால் பலவீனம் என்றென்றும் நந்தகுமார் தான். அவர் அவனையேப் புன்சிரிப்புடன் பார்த்திருக்க, சட்டென்று எழுந்துக் கைகழுவ சென்று விட்டான். பின்னால் ஓடினான் தினேஷ்.

"ப்ரோ, பார்த்தியா? அப்பா சென்டிமென்ட் எப்பவும் உனக்கு தான்"

"போடா"
என்றான் செல்லமாக.

சற்று நிமிடத்தில், கார்த்திக்கும், வர்ஷினியும் தங்களின் அறைக்குள் சந்தித்தபோது, வர்ஷினி அவனைக் குறுகுறுவெனக் குறும்பாகப் பார்த்தாள்.

"ஏய் என்ன?"

"ஒண்ணுமில்லயே"

"அப்போ இதென்னப் பார்வை, ஆன்? என் தம்பி அழகா அப்பா சென்டிமென்ட்'னு சொல்றான். உனக்கு மட்டும் கிண்டலா இருக்கா, எப்பவும் இதே மாதிரி பண்ற. மவள உன்ன?"

என்றவன், அவள் அருகே செல்ல, வர்ஷினி விலகி ஓட, எட்டி அவள் சுடிதார் துப்பட்டாவை பிடித்து விட்டான்.

"அச்சோ, இது சேலை இல்ல, கிழிஞ்சிடும். விடுங்க" என்றாள்.

"முடியாது. நீ சொன்னா தான் விடுவேன்"

"அது... நீங்க மாமா கூட பேசிட்டு வரும்போது'லாம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பீங்க. உங்களை இயல்பாக்க தான் இப்படி பண்றேன்"

"அடேங்கப்பா! உனக்கு எவ்ளோ அறிவுடி தங்கம். உன்னப் பெத்து வளர்த்த மகராசனை நான் பார்க்காம போய்ட்டேனே?"

அவன் அப்படி சொன்னதுதான், தந்தையின் நினைவில், அவள் கண்கள் இருண்டு கண்ணீர் வரத் தொடங்கியது. இருபத்து மூன்று வயது பெண்ணான அவளுக்கு மட்டும் தந்தைப்பாசம் இருக்காதா என்ன?

"ஹேய் அம்மு"

என்று அருகில் சென்று அணைத்துக் கொண்டான். எவ்வளவுத் தட்டிக் கொடுத்து தேற்றியும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. கார்த்தி'பா என்று அவள் அழைத்தக் காரணம் இப்போது புரிந்தது அவனுக்கு. குனிந்து காதில் சொன்னான்..

"கீத்து, கார்த்தி'பா சொல்லு"

சொல்லவில்லை அவள். எனவே அவன் பாடினான்..

"நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்"

அக்குரலும், குரலிலிருந்த உண்மையும் அவளை வருட,

"கார்த்தி'பா"

என்று அவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டாள் வர்ஷினி. இதமாக சொன்னான்..

"அழாத பொண்ணு, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதில் என்னை நாலு அடி அடிச்சிடு"

"ம்ம்ம்ம்"

"என்ன ம்ம்ம்?"

"நாலு அடி அடிக்கிறேன்"

"என்ன, அடிப்பியா?"

"சொன்னீங்க தான?"

"அட, என்ன வளர்த்து வச்சிருக்கார் உன் அப்பா, ஆன்?

இம்முறை வர்ஷினி சிரிக்க, அவனுக்கு நிம்....மதி.
~~
 
தந்தை பிரியாவை ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில், தினேஷ் தன் பைக்கில் பிரியதர்ஷினியுடன் பறந்து கொண்டிருந்தான். கேட்டாள்..

"எங்க போறோம் தினு?"

"சொல்றேன். காதலுக்கு ஒரு தாஜ்மகால் பார்த்திருப்ப. ஆனா நட்புக்குப் பார்த்திருக்கியா? இப்போ பார்க்கப் போற"

"சரி, நாம எதுக்கு அங்கப் போகணும்?"

"சொல்ல மாட்ட பின்ன, தினம் ஹெல்மெட் போட்டு முகத்தை மறச்சிக்கிட்டு காலேஜ் வாசல்ல வந்து நிக்கிறேன்'ல?"

"சரி அதுக்கு?"

"அதுக்கு தான், என் மச்சான்.. ஜாலியா இருடா தினேஷ்'னு சாவி குடுத்து அனுப்பி வச்சிருக்கார்"

"என்னது ஜாலியா இருக்கவா?"

"ஓ! பிரியா... ஃப்ரியா பேசிட்டு தான் இருக்கப் போறோம். யார் தொந்தரவும் இல்லாம"

"ம்ம் அப்போ சரி"

இருவரும் கடற்கரை வீடு வந்தனர். அவன் சாவியை நுழைக்க, கதவு தானாக திறந்து கொண்டது.

"என்ன எவனாவது களவாணி வந்துட்டானா?" என்றபடி உள்ளே நுழைய,

"ஹேய்"

என்று கத்திக் கொண்டு குதித்தனர், சக்தியும், நிஷாவும். அருகில் வர்ஷினி. ஒரு நிமிடம் திகைத்துப் பின், சுதாரித்துக் கொண்டவன்,

"யம்மா தாயே ஓவரா குதிக்காத. குழந்தை இப்பவே பிறந்திற போகுது"

என்றான் நிஷாவிடம். கிண்டலோடு சேர்ந்த அவன் அக்கறையில் நிஷா சிரித்துவிட்டு சொன்னாள்...

"என்ன சொல்லு தினு டியர். பிரேம விட உனக்கு தான் என்மேல பாசம்"

என்று கண்ணடிக்க, ப்ரியா முழித்தாள்.

"இவ வேணும்னே பேசுறா ப்ரியா. இவளை நம்பாத" என்றவன்,

"ஆமா நீங்க எங்க இங்க?" என்றான்.

"அத என் கிட்ட கேளு அண்ணா. சிபு உன்கிட்ட சாவி கொடுக்கும்போது நான் பார்த்துட்டனே. நிஷா கிட்ட சொன்னேன். அவ தான் இந்த பிளான் சொன்னா"

"ச்சேச்சே ஆண்களுக்குன்னு ஒரு பிரைவசியே இல்ல"

என்றவன் தொப்பென்று சோஃபாவில் விழுந்தான். பிரியா இன்னும் முழித்துக் கொண்டு நிற்க, மூன்று பெண்களும் சிரித்தார்கள்.

"அண்ணா"

"சொல்லு"
என்றான் விரக்தியாக.

"நீயும், பிரியாவும் மாடிக்குப் போங்க"

எதுக்கு?

"அட போ மச்சான்"
என்றாள் நிஷா.

"ஒண்ணும் வேணாம்"

"தினேஷ், போய் தான் பாருங்களேன்"

என்று வர்ஷினி சொல்ல, அவளுக்கு மதிப்பு கொடுத்து, ப்ரியாவுடன் சென்றான். மேல்படியிலேயே இருவரும் வியந்து போய் நின்றுவிட்டனர். மாடி முழுக்க அலங்கரிக்கப்பட்டு, சாப்பாட்டு மேஜையில் மாலை சிற்றுண்டி விதவிதமாக வைக்கப்பட்டு மெழுகு வர்த்தி ஏற்றும் வசதியுடன் இருக்க, தினேஷ் வேகமாகக் கீழே திரும்பினான்.

"அண்ணா நீ வர வேணாம். நாங்க கிளம்புறோம்" என்றாள் சக்தி.

"ஆமாடா மச்சான். என்ஜாய். இந்த ஏற்பாடு செய்ய தான் நாங்க, இங்க வந்தோம்"

என்றாள் நிஷா. வர்ஷினி அவள் இணக்கத்தைப் புன்னகையிலேயே காட்ட, பிரியா மலைத்துப் போனாள்.

அவர்கள் சென்றுவிட, அவளின் தோற்றம் கண்டு தினேஷ் சிரித்தான்.

"என்ன பிரியா?"

"எப்டி நீங்க'லாம் இவ்ளோ ஒற்றுமையா இருக்கீங்க?

"சிம்பிள், உறவுல கொஞ்சம் நட்பும் கலந்துட்டா எல்லாம் சாத்தியம்"

அன்றைய மாலைப்பொழுது இருவருக்கும் ஜெகத்ஜோதியாக இருந்தது. உணவுண்டார்கள், கொஞ்சம் இதழுண்டார்கள், கொஞ்சம் பேசிக் கொண்டார்கள்.
அவளை முத்தமிட்டு விட்டு,

"என் வீட்டைப்பார் என்னைப் பிடிக்கும்"
என்று பாடி சிரித்தான் தினேஷ்.

இங்கே பீச்சில் ஜாலியாக பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் மூன்று பெண்களும். சக்தி சொன்னாள்..

"நிஷ், நீ பிரேம் அண்ணாவ ஊர்ல விட்டுட்டு, தினேஷ் அண்ணாவ சைட் அடிக்க இங்க வந்தியா?"

"என் பிரேம் மேல இருக்கறது காதல். அதுக்கு இதோ என் குழந்தை சாட்சி. ஆனா, மாமா பையங்கள சீண்டுறது, சைட் அடிக்கிறது என் உரிமை. அத எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்"

உடனே வர்ஷினி கேட்டாள்...

"அப்போ நீ சக்தியோட பெரிய அண்ணாவையும் சைட் அடிப்பியா?"

"அவர் தான் முதல்ல"

வர்ஷினி முறைக்க, சக்தி சொன்னாள்..
"வர்ஷி இவ சும்மா சொல்றா"

"என்ன சும்மா சொல்றேன், இன்னும் அவர் ஆல்பத்தை நான் திருப்பிக் கொடுக்கல. தெரியும்'ல? அப்பப்போ பார்த்து ரசிக்க நானே வச்சிக்கிட்டேன்"

"உன்ன?"

என்றபடி வர்ஷினியும், சக்தியும் அவளை அடிக்க வர, நிஷா ஓடினாள்.

"யம்மா தாயே ஓடாத. குழந்தை இப்பவே பிறந்திடப் போகுது"

என்று தினேஷைப் போலவே சொல்லி சிரித்தார்கள் இருவரும்.
~~~

நாட்கள் நகர்ந்து வாரங்களாகி மாதம் தொட்டது.

டேபிளில் சாய்ந்து நின்றபடி, கடைசி பத்து நிமிட வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. இது அவளாக எடுக்கும் தன்னம்பிக்கைப் பாடம். பிள்ளைகள் ஆர்வமாகக் கவனிக்க,

"தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்.

இதுக்கு அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம்"

"மிஸ் நீங்க சொல்லுங்க" கத்தினர் பிள்ளைகள்

"எதற்காகவும், யாருக்காகவும் நம்ம இயல்பை, கம்பீரத்தை இழக்கக்கூடாது,
நம்மை நாமே தாழ்வாக நினைக்கவும் கூடாது. சரியா?"

வேகமாகத் தலையாட்டியப் பிள்ளைகள்,

"மிஸ் நான் புலி, மிஸ் நான் யானை"

என்று கத்த, வர்ஷினி சிரித்தாள்.

அப்படி சிரித்துக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் திடீரென்று உடம்பு உதறி, நடுக்கம் வந்து தலை சுற்றியது. இதோக் கீழே விழப்போகிறோம் என்று அவள் நினைத்துக் கண் சொருகித் தள்ளாட... இல்லை அவள் விழவில்லை. பிள்ளைகள் ஓடி வந்து பிடித்துக் கொண்டனர்.

அவளின் ஒட்டுமொத்த பளுவையும் தாங்கிக் கொண்டவர்கள், அவளை நகர்த்தி சென்று தங்களின் பெஞ்ச்சில் அப்படியேப் படுக்க வைத்தனர்.

"மிஸ், மிஸ்"

என்று கன்னம் தட்ட கீதா எழவில்லை. தண்ணீர் தெளித்து, அவள் முகம் தடவி, காற்று வீசி அவர்கள் சேவகம் செய்ய, சற்றைக்கெல்லாம் விழித்து விட்டவள், பிள்ளைகள் கை உதவியுடன் மெதுவாக எழுந்து அமர்ந்தாள். ஒருசில நாளாக, அவளுக்குள் இருந்த சந்தேகம் உறுதியானது.

"என்னாச்சு மிஸ்?"

கார்த்திக்கிடம் தான் முதலில் சொல்ல வேண்டும். ஆனால், குழந்தை உருவானதை குழந்தைகளிடம் சொல்லாமல் என்ன தான் இப்ப? எனவே அவர்களிடம் சொன்னாள். குழந்தைகள் குதித்து ஆர்ப்பரித்தனர். ஆளுக்கு ஒரு கேள்வி கேட்க, அத்தனைக்கும் புன்னகையுடன் பதில் சொன்னாள். பள்ளி முடிந்த கடைசி மணி அடித்தது.

இங்கே கார்த்திக் அவளுக்காகக் காத்திருந்தபடி, ஃபோனில் பேசிக் கொண்டே திரும்பியவன், திகைத்தான். கிட்டத்தட்ட நாற்பது பிள்ளைகள், அவளைத் தாங்கிக்கொண்டு வர, தேவதை போல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

"கீத்து, என்னாச்சு?"

"எங்க மிஸ்... என்று ஒரு பிள்ளை ஆரம்பிக்க, கண் காட்டினாள். அது வாய் மூடிக் கொண்டது.

காரில் சென்று கொண்டிருக்க, மீண்டும் கேட்டான்..
"என்னாச்சு கீத்?"

"அது, பசங்களுக்கு ஏத்த மாதிரி பாரதியோட ஆத்திச்சூடில ரெண்டு வரி சொல்லிக் கொடுத்தேன். அதுல அவங்க ஜாலியாகிட்டாங்க. அதான்"

"அப்ப எனக்கு ஏத்த மாதிரி ஒண்ணு சொல்லு. நானும் ஜாலியாகுறேன்"

அவனுக்கு ஏற்றதை, அவளுக்கு வேண்டியதை, பாரதி சொன்னதை, இப்போது வர்ஷினி சொன்னாள்...

"பாட்டினில் அன்பு செய்"

"ஆஹான்? பாடிட்டா போச்சு"

வீடு வந்தனர். அந்தநேரம் யாரும் ஹாலில் இல்லாது போக, இருவரும் தங்களின் அறைக்குள் நுழைந்தனர். முன்னறையில், வெற்றியின் புகைப்படத்தின் முன்னே கார்த்திக்கை நிறுத்தினாள் வர்ஷினி. கேட்டான்..

"என்ன கீத்து?"

தன் கையை அவன்முன்னே நீட்டி ஒவ்வொரு விரலாகத் தொட்டு சொன்னாள்..

"வெற்றிச் செல்வன்..
கார்த்திகேயன்..
குமரன்..

"என்ன குமரனா?"

வியப்புடன் கேட்டான். பதில் சொல்லாமல் அவனையேப் புன்னகையுடன் அவள் பார்த்திருக்க, நாலைந்து வினாடி தான்.. என்னவென்று புரிந்துவிட, அசையாது நின்று விட்டான் கார்த்திக்.

எத்தனை இரவுகள் சுகித்திருக்கிறான்? நினைவெல்லாம் இன்பத்தில் இருந்திருக்க, குழந்தையை யோசித்திருக்கவில்லை. அவனின் நிலையை உணர்ந்து, வர்ஷினி அவன் மீது சாய்ந்து கொள்ள,

"ஏய், கீதவர்ஷினி, இங்க என்னமோ பண்ணுதுடி"

என்று இதயத்தைத் தொட்டுக் காட்டினான். புன்னகையுடன் அவன் சட்டை பட்டன் இரண்டை கழட்டிவிட்டு, அங்கு தடவிக் கொடுத்தாள் வர்ஷினி.

அறைக்குள் சென்றனர். கேட்டான்..
"நான் இப்பவே என் பிள்ளையைப் பார்க்கணும்"

வர்ஷினி சிரித்தாள்.
"அதுக்கு இன்னும் ஒன்பது மாசமிருக்கு"

"ம்ஹூம் நான் பார்ப்பேன்"

அடமாக சொன்னவன், அவள் முன்னே முட்டிபோட்டு, அவள் சேலையை விலக்கி, கொசுவத்தைக் கொத்தாகப் பிடித்து கொஞ்சம் கீழே இறக்கினான்.

குழந்தைக்கும், தாய்க்கும் பாலமாக இருக்கப்போவது, தொப்புள்கொடி தானே? அதை நேசத்துடன் பார்த்தவன், முத்தமிட்டான், ஆசை தீர தீர முத்தமிட்டான்.. ஆசை தீரவேயில்லை.

அதன் பின் நிகழ்ந்தவைகள்.. விவரமறிந்து தினேஷ் குதித்தான்..

"அண்ணா நான் சித்தப்பா ஆகிட்டேன்"

மங்கை, இருவரையும் நிற்கவைத்து சுத்திப் போட்டார். பின், நந்தகுமார்?

அவரும் ஒரு நிமிடம் அசையாது நின்று விட்டார்.

"கார்த்தி எங்க?"

கார்த்திக் அவர் முன் சென்று நிற்க,

"நீயே எனக்கு இன்னும் குழந்தை. உன் பிள்ளைய நான் என்ன சொல்ல?"

என்க, தினேஷ் சொன்னான்...

அப்பா, நீங்க என்ன சொல்றது? அதுதான் உங்களைத் தாத்தான்னு சொல்லும்"

அனைவரும் சிரிக்க, மகனை அணைத்துக் கொண்டவர், வர்ஷினியையும் ஆசீர்வதித்தார். விஷயம் தெரிந்தது தான், ஷூட்டிங் பாதியில், சக்தியை அழைத்துக் கொண்டு வந்து விட்டான் ரிஷி. நண்பனைத் தூக்கி சுற்ற,

"டேய் ரௌடி"
என்றான் கார்த்திக்.

"கார்த்தி ட்ரீட் குடு"

"என்னடா வேணும்?"

"நான் வேறென்ன கேட்பேன் கார்த்தி? கடற்கரை வீடு, உன் பேர் போட்ட டீஷர்ட், ச்சில்லுன்னு காற்று, உன் பாட்டு, அதைக் கேட்டு நான் தூங்கணும்"

என்றவனின் முன்னுச்சி முடியைப் பிடித்து ஆட்டி சிரித்தான் கார்த்திக்.

இரவு வந்தது. வெளியே சென்றுவிட்டு வந்த கார்த்திக், கையில் வீணையோடு திரும்பி வந்தான்.

"ச்சோ, எதுக்கு கார்த்தி'பா? அதான் எங்க வீட்ல இருக்கே, அதை எடுத்துட்டு வந்திருக்கலாமே?"

என்றாள்.

"அது அங்கப் போகும்போது தேவைப்படும்"

என்றவன் வர்ஷினியைக் கைநீட்டி அழைத்தான். அவள் அவன் மீது சாய்ந்துகொள்ள, கேட்டான்..

"சொல்லு கீதாப் பொண்ணு, உனக்கு என்ன வேணும்?"

அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள்..
"பாட்டினில் அன்பு செய்"

செய்தான்...

"காதலடி நீ யெனக்கு
காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,
வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே!"

இந்த பாட்டை பாம்பே ஜெயஸ்ரீ பாடக் கேட்க வேண்டும்.. கண்ணீர் வரும். இதோ கார்த்திக் பாடினால், அந்த பாரதியே வருவார்..

அவன் குரலில் மயங்கிக் கொண்டே வர்ஷினி, வீணையை மீட்டினாள். அந்த வீணையொலி கார்த்திக்கை மயக்கி, தினேஷைத் தொட்டு, அலையென தவழ்ந்து சென்று, நந்தா, மங்கையை அடைந்தது.

நந்தகுமார் கண்களை மூடிக் கொண்டார். அவர் மனதில் கார்த்திக்கின் பிள்ளையை மார்பில் போட்டுக் கொள்ளும் சுகம்...

"அன்பு என்பது
ஒரு வட்டம்
அது சுழன்று கொண்டே
இருக்கும்"

தொடரும்...
 
வாவ் 🥳 அருமை 🥰

குட்டி போலீசா? குட்டி டீச்சரா?😂😂😂

தினேஷ் திருமணத்திற்கு வெயிட்டிங் 💞💖💞
 
வாவ் 🥳 அருமை 🥰

குட்டி போலீசா? குட்டி டீச்சரா?😂😂😂

தினேஷ் திருமணத்திற்கு வெயிட்டிங் 💞💖💞
ஆமா நடக்கும் நடக்கும் 🤗💜
 
Back
Top