kodi sundar
Well-known member
அத்தியாயம் 371
ரிஷிசக்தியின் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, மும்பைக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் கார்த்திகேயன். கடந்த இரண்டரை ஆண்டுகளில், இப்படி சென்னைக்கும், மும்பைக்குமான பயணங்களின் எண்ணிக்கைக் கணக்கிலடங்காது. குமரன் கூட சமத்தாக டாட்டா காட்டி விடுவான். ஒவ்வொரு முறையும் முறைப்புடன் வழியனுப்பும், வர்ஷினியை நினைத்து சிரிப்பு வந்தது அவனுக்கு. ஜன்னல் வழி பார்த்தவாறு கடந்துவிட்ட மூன்று ஆண்டுகளை நினைத்துப் பார்த்தான் கார்த்திக்.
கைக்குழந்தையாக குமரனைக் கையில் ஏந்திக் கொஞ்சிய நாட்கள்... பிள்ளை நினைவு வந்துவிட்டால், பணியிலிருந்தும் ஓடி வந்து விடுவான் கார்த்திக். குமரனும்.. தந்தை ஒளிந்திருந்தாலும் அறிந்து கொண்டு, கைகால் உதைத்து ஆர்ப்பரிப்பான். அதைக் காண்பதில் கார்த்திக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்.
இரவில் பிள்ளைக்குப் பசியாற்றி இவனிடம் கொடுத்து விடுவாள் வர்ஷினி. மகனைத் தூங்கவைக்க கார்த்திக் பாடும் தாலாட்டு, குமரனை மட்டுமல்ல, வீட்டில் அனைவரையும் தூங்க வைத்தது.
"ஆரிரோ, ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு"
என்று கார்த்திக் பாட ஆரம்பித்தால், டைகர் கூட ஹாலில் சுருண்டு விடும். இப்படியெல்லாம் அருமை பெருமையாக வளர்த்தப் பிள்ளை,
"அப்பா, அம்மா"
என்று அழைப்பான் என்று காத்திருக்க, குமரன் முதலில் அழைத்ததோ...
"அத்த"
சக்திக்குப் பெருமை தாங்கவில்லை. அவனை அத்தையென்று திரும்ப, திரும்ப சொல்லவைத்துக் கேட்டவள், குமரனை வாக்கர் சீட்டில் அமரவைத்து, அவன் முன்னே டான்ஸ் ஆடிக் கொண்டாடினாள். அவள் ஆட்டத்தைக் கண்டு, பிள்ளையும் குதியோ குதியென்று குதிக்க, அன்றிரவு யாரும் தூங்கவில்லை.
"பாரு சிபு, அவன் என்ன'தான் கூப்பிடுறான்"
என்று ரிஷியின் மார்பில் சாய்ந்து அழுதாள் சக்தி. அத்தை, சித்தி என்று விளிக்கப்படும் பட்டங்களும் பெருமை வாய்ந்ததுதான் அல்லவா?
பொதுவாக பெண் பிள்ளையின் உடல் வளர்ச்சி அத்தையைக் கொண்டும், ஆணினது தாய்மாமனைக் கொண்டும் இருக்கும் என்பார்கள். இங்கு, சக்திக்கும், குமரனுக்குமான பிரியம் அலாதியானது.
குமரனின் மூன்று மாதத்தில், வர்ஷினி புது பள்ளிக்கூடத்தின் பொறுப்பை ஏற்க சென்றுவிட, குமரனைப் பார்த்துக் கொண்டது, மங்கையும், சக்தியும் தான். ரிஷி ஷூட்டிங் கிளம்பியவுடன், அண்ணன் மகனைக் காண வந்துவிடும் சக்தி, அவனை வளர்த்தவிதம் என்பது ஒரு ஹைக்கூ கவிதை.
அவளும் சிறு பிள்ளையாக மாறிப் போட்ட ஆட்டங்கள், குமரனுக்கு இணையாக நந்தகுமாரின் மார்பில் சாய்ந்தாடிய அழகெல்லாம் தென்றல் கதைகள். வீட்டிலிருந்தால் தினேஷும் இவர்கள் ஆட்டத்தில் சேர்ந்து கொள்வான்.
இப்போது அதை நினைக்கையில், விமானத்தில் பறந்து கொண்டிருந்த கார்த்திக், லேசாகப் புன்னகைத்தான். கூடவே, வர்ஷினி முதல் நாள் பள்ளிக்குச் சென்றதையும் நினைத்துப் பார்த்தான்...
தூங்கும் மகனுக்கு கண்ணீருடன் முத்தமிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள் வர்ஷினி. ஆனந்தன் அவளுக்கு வாகன ஏற்பாடு செய்திருக்க, அதை ஓரம் நிறுத்திவிட்டு, மனைவியைத் தானே அழைத்துச் சென்றான் கார்த்திக். பள்ளியில் வர்ஷினி ஆசைப் பட்டதுபோல், நுழைவு வாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும்,
பள்ளி வளாகத்தின் முன் புறத்தில், எழுத்தாணிப் பிடித்து எழுதும் வள்ளுவர் சிலை அமைக்கப் பட்டிருந்தது. சிலைமுன் நின்று வணங்கிய வர்ஷினி, பெறப்போகும் கல்வியால், மாணவர்கள் மேன்மை அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அப்படி அவள் வேண்டியதை, மாணவர்கள் பார்த்துவிட்டு, தாங்களும் வேண்டிக் கொள்ள, பின்னர் அதுவே அன்றாட வழக்கமானது எல்லோருக்கும்.
பிரேயருக்காக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நின்றிருக்க, வர்ஷினி மைக்கில் பேசினாள். அவளை விட்டுவிட்டுக் கிளம்பப்போன கார்த்திக், போகாது நின்று, அவள் பேச்சைக் கேட்டான். அது...
"ஒரு மொழியின் சிறப்பு என்பது அது எத்தனை ஆண்டு தொன்மை வாய்ந்தது என்பது மட்டும் கணக்கல்ல. அதன் மூலம் உருவான இலக்கிய நூல்கள் தான் அதன் பெருமைக்கு சான்று. அந்த வகையில் திருக்குறள் தமிழுக்கு கிரீடம்"
என்றபோது, மாணவர்கள் கைத்தட்ட வர்ஷினி மேலும் தொடர்ந்தாள்...
"கேரளாவில் ஒருவர் திருக்குறள் பற்றி அறிந்து, அதைப் படித்து வியந்தவர், வள்ளுவருக்கு கோயில்கட்டி இன்றுவரை பூஜை செய்கிறாராம். மாணவர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது, இங்கு வள்ளுவர் சிலைமுன், தினம் ஒரு திருக்குறள் எழுதப்படும். அதில் எந்தக் குறள் உங்களை ஈர்ப்படைய செய்கிறதோ அதை உங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்து தினமும் பாருங்கள், படியுங்கள். காலப்போக்கில், அந்தக் குறளில் உள்ளதே உங்கள் வாழ்விலும் நடக்கும் விந்தை அறிவீர்கள்"
பெரிய வகுப்பு மாணவர்கள் ஆச்சரியமாக விழி விரித்துப் பார்த்தனர் வர்ஷினியை. உடனே செய்துவிடும் ஆவல் தெரிந்தது அவர்கள் கண்களில். இன்னுமும் கொஞ்சம் பேசிமுடித்த வர்ஷினி தன் அறைக்குச் சென்றுவிட, கார்த்திக் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
"நீங்க சொன்னது நிஜமா?" என்று வர்ஷினியிடம் கேட்டுக்கொண்டு நின்றான் செந்தில். அவன்தான் இந்தப் பள்ளியின்,
"ஆல்இன்ஆல் அப்பா டக்கர்"
வர்ஷினியின் உதவியாளனும் கூட.
"வேணும்'னா நீயே செக் பண்ணிக்கோ"
"அப்போ நீங்க உங்க நோட்டுல எந்தக் குறள் எழுதி வச்சீங்க?"
வர்ஷினி சொன்னாள்..
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"
செந்தில் விழித்தான்..
"எனக்குன்னு ஒரு குறள் கிடைக்காமயா போகும்? கண்டுபிடிக்கிறேன்"
என்றுவிட்டு அவன் நகர, வர்ஷினி சிரித்துக் கொண்டாள். குமரன் வயிற்றில் இருக்கும்போதே "எம்ஏ" முதலாண்டை முடித்தவள், அடுத்த ஆண்டில் பட்டம் பெற்றிருந்தாள்.
இந்தப் பள்ளிக்கூட நினைவுகளில், கார்த்திக்கிற்குத் தானாக கபிலன் நினைவு வந்தது. இவன் இப்படி மும்பைக்கு வர, கபிலனின் பிள்ளையும் ஒரு காரணம்.
கபிலனின் குடும்பத்தை செங்கல்பட்டு அனுப்பி வைத்தப்பின், கார்த்திக் மீது கோபமாக தான் இருந்தான் கபிலன். தானே பிழைத்து, தானே வாழ்ந்த கபிலனுக்கு, யாரோ ஒருவர் உழைப்பில் சோறுண்ண, ஒருசிறிதும் பிடிக்கவில்லை.
கார்த்திக்கின் கண்காணிப்பில் இருக்கிறோம் என்பதே, அதிக கோபத்தைத் தந்திருக்க, மீண்டும் சென்னைக்குத் திரும்பவும், அவன் விரும்பவில்லை. அவன் உணர்வை புரிந்துகொண்ட மீரா,
"நான் வேணும்'னா வேலைக்குப் போறேன் கபி" என்றாள்.
"வேணாம்"
என்றவன், எத்திராஜின் உதவியுடன் தன் சொத்துக்கள் சிலவற்றை இவ்வூருக்கு மாற்றிக் கொண்டான். அழகாக ஒரு வீடு, கூடவே, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் விற்கப்படும், ஒரு பெரிய கடையும் அமைத்துக் கொண்டான். மனைவியை கல்லாவில் அமரவைத்து, இவன் ஓடியாடி வேலை செய்ய, சில மாதங்களில், உழைப்பு பிடிபட்டு விட்டது, வாழ்க்கை புரிபட்டது. மீராவோடும் கொஞ்சம் இணக்கமாக வாழத் தொடங்கினான்.
என்றபோதும், என் வாழ்க்கைப் பாதையை மாற்ற இவன் யார் என்ற கோபம் கார்த்திக் மீது இருக்கத்தான் இருந்தது அவனுக்கு. இந்நேரத்தில், பள்ளிக்குச் சென்ற கபிலனின் மகன் கடத்தப்பட்டான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. செய்வதறியாது கபிலனும், மீராவும் பதறி விழிக்க,
செய்தியறிந்து விரைந்து வந்தான் கார்த்திக். செங்கல்பட்டு போலீஸோடு இணைந்து தானும் தேடினான் பிள்ளையை. விடாத காவலர்களின் முயற்சியில் அடுத்தநாள் மதியம் பிள்ளை கிடைத்தது. எந்நிலையில், எப்படியென்று ஏன் சொல்வது...
"அங்கிள், அன்னைக்கு நீங்களும், இன்னொரு அங்கிளும் என்னோடு விளையாடினீங்க. ஆனா இவங்க அடிச்சாங்க"
என்றபோது கார்த்திக், பிள்ளையை அணைத்துக் கொண்டான். கொண்டு வந்து, மீராவிடம் ஒப்படைத்தவன்,
"கண்டுபிடிக்கலைனா, இவனும் இன்னொரு கபிலனா வளர்ந்திருப்பான்"
என்று சொன்னபோது, கபிலன் தலை குனிந்து விட்டான். கார்த்திக் மீதிருந்த கோபம் பஞ்சாகிப் பறந்துபோனது அவனுக்கு. திரும்பி சென்ற கார்த்திக்கை நன்றி புன்னகையுடன் பார்த்தான் கபிலன்.
சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு, தொடர்ந்தன அதே பணிகள்...
ஆம்! பேட்டை முனியம்மா போன்றோர் பிடிபட்டாலும், பிள்ளைக் கடத்தல் நின்று விடவில்லை. நாடெங்கும், பிறந்த குழந்தையிலிருந்து, வளர்ந்த பிள்ளை வரை கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள், அடுத்த குரூப்புக்கு கைமாறி, அடுத்து சில மணி நேரங்களுக்குள் மாநில எல்லையைக் கடந்து சென்று, மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்பட, அந்த மெயின் கும்பல், பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டிருந்தது.
இப்படிக் கடத்தப்பட்ட பிள்ளைகள் அவரவர் வயது, தோற்றத்துக்குத் தக்க வகையில், பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர்கள், உடலுறுப்பு திருட்டு, பாலியல், போதை மருந்து கடத்தல் போன்றவற்றிற்கு பயன் படுத்தப்பட்டனர். இப்படி பிள்ளைகளை பறி கொடுப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்க, இதுபற்றிய ஒரு அறிக்கை தயார் செய்து, மேலதிகாரியிடம் ஒப்படைத்தான் கார்த்திக். விளைவாக, அதைக் கண்டுபிடிக்க, பதவி உயர்வுடன் மும்பைக்கு மாற்றப்பட்டான்.
வர்ஷினி திகைத்தாள்.
பத்து மாதக் குமரனை இடது மார்பிலும், மற்றொரு பக்கம் வர்ஷினியையும் தாங்கி, சமாதானம் செய்திருந்தான் கார்த்திக். மூச்சு தேம்பி அழுதாள் அவன் மனைவி.
"கீத்து, நீ தான சொல்வ? நம்ம ரெண்டு பேரோடது, மாத சம்பளம் வாங்குற சாதாரண பணியில்ல. சமூகப் பணின்னு"
"ஆமா சொல்வேன். அதுக்காக, நீங்க எங்களை பிரிஞ்சி போவீங்களா?"
"நான் என்னோட கடமையை செய்யணுமே கீத்? பிள்ளைக் கடத்துறவன கண்டு பிடிச்சி, தப்பை தடுக்க வேணாமா, நீயே சொல்லு?"
"......"
"நீ வாடான்னு கூப்பிடு, அடுத்த மூணு மணி நேரத்தில உன் முன்னாடி நிப்பேன். ப்ராமிஸ்"
"நீ வாடா" என்றாள் அழுது கொண்டே.
மரியாதையற்ற ஒருமை வார்த்தை தான். ஆனால் அப்போதிருந்த மனநிலைக்கு இந்த முரட்டுப் பேச்சு தேவைப்பட, கார்த்திக் தன் மனைவி பிள்ளையை ஒருசேர அணைத்துக் கொண்டான்.
இப்படி வர்ஷினியை சமாளித்து விட்டவன், ரிஷியிடம் மாட்டிக் கொண்டான். வீட்டில் அனைவரும் இருக்க, ஏதோ ஊரில் ஷூட்டிங்கில் இருந்தவன், கோபத்துடன் வந்து நின்றான். எப்போதும்,
"கார்த்தி"
என்று குழைபவன் தான். இப்போது ஆத்திரத்தில் பேசினான்...
"என்னடா நினைச்சிட்டு இருக்க, கேட்க ஆள் இல்லைன்னா? வர்ஷிய ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்த முடியாதுடா"
"ரிஷி"
"என்ன? இருபத்து அஞ்சு வருஷம் தனிமையில வாழ்ந்தது போதாதா உனக்கு? இன்னும் அந்த சொகுசு கேட்குதா?"
"என்ன'லாம் பேசுறடா ரௌடி?"
"அப்படி தான்டா பேசுவேன்"
"சொன்னா கேளு ரிஷி"
"உன்னை இனிமே தனியா விடறதா இல்ல கார்த்தி"
ரிஷியின் அருகில் சென்றான் கார்த்திக். அவன் முறைத்துக் கொண்டு நிற்க, அவன் முன்னுச்சி தலைமுடிக்குள் கைநுழைத்து இறுகப் பற்றினான். ரிஷி தட்டிவிட தான் நினைத்தான். ஆனால், அப்படி செய்துவிட மனமின்றி, நண்பனின் ஸ்பரிசத்தை அனுபவித்து நின்றான். கார்த்திக் சொன்னான்...
"நீ இருக்கும்போது எப்படிடா நான் தனியா இருக்கிறதா ஆகும்?"
உருகிப்போனான் ரிஷி..
"கார்த்தி"
"ஸ்கூல் படிக்கும்போதே என்னைத் தேடி வந்தவன் நீ. இப்ப வர மாட்டியா என்ன?"
"வருவேன் கார்த்தி"
என்றுவிட, அவன் முடிக்கற்றையை ஒரு ஆட்டுஆட்டி விட்டு நிமிர்ந்தான் கார்த்திக். சுற்றிலும் நந்தா, மங்கை, தினேஷ், சக்தி, வர்ஷினி நிற்பதைக் கண்டு சொன்னான்...
"எனக்கென்னடா இனி? உங்க ஆறு பேர் அன்பும் எனக்கிருக்கு. இப்போ குமரன் பிறந்துட்டான். அப்புறம் உன் பிள்ளைங்க, தினேஷ் பிள்ளைங்க. இனி நான் பெரிய குடும்பஸ்தன்டா. என் கடமையை முடிச்சிட்டு ஓடி வந்திருவேன்"
என்றுவிட்டுத் தன் கேப்பை மாட்டிக்கொண்டு அவன் கிளம்ப, அவன் பின்னால் எல்லாரும் சென்றனர். மங்கை மட்டும் அப்படியேத் தூணில் சாய்ந்து நின்று விட்டார். வெற்றியின் நினைவு வந்தது அவருக்கு... தன் மகனுக்குக் கொள்ளைப் பாசம் வேண்டும் என்று கேட்டானே வெற்றி? அது இப்போது கார்த்திக்கிற்குக் கிட்டி விட்டது, ஒரு தந்தையின் வாக்கும் ஜெயித்து விட்டது. மங்கையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
மகன் செய்யப்போகும் பணி வெற்றியடைய வேண்டும் என்று வெற்றியிடம் வேண்டிக் கொண்டார் மங்கை.
~~~