எபி 10

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்


அத்தியாயம் 10



தன் எதிரில் அமர்ந்திருந்த கணவன் மனைவி இருவரையும் அதிர்ச்சியாக நோக்கினார் சுப்பு ரத்தினம்.

“என்ன சொல்றீங்க நீங்க?”

“துக்கம் நடந்த வீட்டுல ஒரு சுப காரியம் நடத்திடனும்னு நம்ம முன்னோர்கள் சொல்லிருக்காங்க! இறந்த மனுஷன தூக்கிப் போட்ட மறு நிமிஷமே, வந்தவங்களுக்குச் சாப்பாடு போடறதில்லையா! அதோட எட்டாம் துக்கம், பதினாறாம் துக்கம்னு சொந்தங்க கூடி ஒன்னா நின்னு படையல் போட்டு, ஒன்னா சாப்பிட்டுத் துக்கத்த மறக்க முயற்சிக்கறது இல்லையா! பிறக்கறவன் இறந்தேதான் ஆவான். அவன் பிறந்தப்ப எப்படி கொண்டாடறமோ, அதே போல இறக்கறப்பயும் கொண்டாடனும்ங்கறததான் சாங்கியம், படையல்னு நம்மாளுங்க வேற ரூட்டுல சொல்லிக் குடுத்துட்டுப் போயிருக்காங்க சுப்பு! பையன் போனது துக்கம்தான்! அதுலயே கிடந்து உழன்று மனசயும் உடம்பையும் கெடுத்துக்காம, சுப காரியம் ஒன்னைப் பண்ணிடுவோம்!” என எடுத்துச் சொன்னார் அருள்மணி.

“இல்ல அருளு! என்னால இன்னும் நடந்தத ஏத்துக்கிட்டு, சகஜமாக முடியல! இப்போ போய் எப்படிடா, பொண்ணு வாழ்க்கைய பத்தி நினைக்க!” எனத் தளுதளுத்தார் சுப்பு ரத்தினம்.

“நீ ஆம்பள! நாலு இடம் போற, வர! அதே உன் வீட்டம்மாவ பாரு! எப்படி ஓஞ்சிக் கிடக்கறாங்கன்னு. இந்தத் துக்கம் அவங்க மனச அழுத்தி டிப்ரெஷன்ல விட்டுடும்! நிச்சயம், கல்யாணம்னு எடுத்து செய்யறப்ப அவங்க மனசும் கொஞ்சம் தேறி வருமில்லையா!”

அருகில் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்தார் சுப்பு ரத்தினம். கண்கள் சிவந்து கிடக்க, முகம் ஒளி இல்லாமல் வாடிப் போய் கிடந்தது. கணவரின் பார்வையைத் தாங்கி நின்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டு விழுந்தன.

“அழாத ரங்க நாயகி!” என எழுந்து போய் அவர் அருகே அமர்ந்து கையை அழுத்திக் கொடுத்தார் சங்கரி.

“அக்கா!” என வாய் விட்டுக் கதறிய ரங்க நாயகி சங்கரியின் தோளில் சாய்ந்து கொண்டார்.

சங்கரிக்கு அவ்வளவாய் ரங்க நாயகியைப் பிடிக்காது என்றாலும், துக்கத்தில் இருப்பவரைத் தள்ளி விடுவது பாவமில்லையா. அவர் தேறிக் கொள்ளும் வரை அசையாது அமர்ந்திருந்தார் சங்கரி.

“கலங்காத! ஆறுதல் சொல்லி ஆற்றுப் படுத்தக் கூடிய துக்கமில்ல இது! கடந்துதான் வரனும்! காலம்தான் எல்லாத்துக்கும் மருந்து” என்ற சங்கரியின் குரலில் வேதனை இருந்தது.

பார்வையோ அவர்கள் எதிரே மாட்டி வைக்கப்பட்டிருந்த தில்லை நாயகியின் போட்டோவின் மேல் இருந்தது.

சற்று நேரம் அவ்விடமே அமைதியாகி விட்டது. மீண்டும் அருள்மணிதான் பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

“சக்தி உன் ரெண்டாவது பொண்ணை ஆசைப்படறான்! எங்களுக்கு எல்லாமே அவன்தான்! அவன் ஆசைக்கு என்னைக்குமே நாங்க குறுக்க நின்னதில்ல! உன் வீட்டுப் பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தா, எங்களுக்கும் பொண்ணாவே இருப்பா! அருமையா பார்த்துப்போம்டா!”

தாடையைத் தடவியபடி நண்பனை ஏறிட்டுப் பார்த்தார் சுப்பு ரத்தினம்.

“பெரியவளுக்குப் பண்ணாம எப்படிடா சின்னவளுக்கு!” என்றவரின் குரலில் மிகுந்த வருத்தம் இருந்தது.

‘அவளுக்குக் கல்யாணத்தப் பண்ணறதும், வர புருஷனுக்குக் கருமாதிய பண்ணறதும் ஒன்னுடா! என் மகனப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டா ராங்கி!’ என மனதில் நினைத்துக் கொண்ட அருள்மணி சம்பிரதாயமாகக் கூட நானும் சேர்ந்து மாப்பிள்ளைப் பார்க்கிறேன் எனச் சொல்லவில்லை.

“நீங்க சொல்றதும் சரிதான்ணா! பெரியவளுக்கு நல்லது செய்யாம, சின்னவளுக்கு எப்படி கல்யாணம் நடத்தறது!” என்ற சங்கரியை அனைவருக்கும் முன்னால் திட்ட முடியாமல், இறுக்கமாய் அமர்ந்திருந்தார் அருள்மணி.

“மாப்பிள்ளைலாம் ரெடிமா! எங்க தூரத்துச் சொந்தத்துல பையன் இருக்கான்! வந்து.. இவளோட சில பல பழக்கங்கள் தெரிஞ்சும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்! இவதான் பிடி குடுக்க மாட்டறா! மேஜரானப் பொண்ண கையக் கால கட்டியாமா கல்யாண மேடையில உக்கார வைக்க முடியும்” என ஆதங்கமாகச் சொன்னார் சுப்பு ரத்தினம்.

அந்த நேரம் மாடியில் இருந்து இறங்கி வந்தாள் சிவரஞ்சனி. நேராக டைனிங் ஹாலுக்குப் போகப் போனவளை வரவேற்பறைக்கு வரும்படி அழைத்தார் சுப்பு ரத்தினம்.

“வாட் இஸ் த மேட்டர் நைனா? யாரு இந்த லேடி அண்ட் லேடன்?” எனக் கேட்டவள், வீட்டுற்குள்ளேயே சன் கிளாஸ் போட்டிருந்தாள்.

‘அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடைப் பிடிப்பானாம்! இது கிழிக்கற கிழிப்புக்கு, வீட்டுக்குள்ளயே சன் கிளாஸ் வேற! விளங்கிடும்!’ என மனதிற்குள் நொடித்துக் கொண்டார் அருள்மணி.

“என்னோட நண்பன் அருள்மணிமா! இவங்க அவனோட வைஃப் சங்கரி! நம்ம சக்தி அமரனோட பேரண்ட்ஸ்”

“சக்தியோ, பக்தியோ! எனக்கு யாரையும் தெரியாது!” என்றவள், சன் கிளாசை கழட்டி இருவரையும் அலட்சியமாகப் பார்த்தாள்.

கண்ணுக்குக் கீழே கரு வளையம் அப்பட்டமாகத் தெரிந்தது. கண்கள் இரண்டும் சிவந்து வேறு கிடந்தது. எழுந்து அவளை நெருங்கிய சங்கரி,

“நல்லாருக்கியா கண்ணு? சின்னதுல பார்த்தது” எனக் கன்னம் வழித்தார்.

“டோண்ட் டச் மீ!” எனச் சத்தம் போட்டவள், நகர்ந்து தூரமாய் நின்றுக் கொண்டாள்.

“சங்கரி! இங்க வந்து உக்காரு நீ” என மனைவியை அழைத்த அருள்மணியின் குரலில் அழுத்தம் இருந்தது.

கணவருக்குக் கோபம் என, அவரது தொனி வழிக் கண்டுக் கொண்ட சங்கரி அவர் அருகே போய் அமர்ந்து கொண்டார்.

“தப்பா எடுத்துக்காதம்மா தங்கச்சி! தூங்கி எழுந்து இன்னும் சாப்பிடலையா, அதான் கோபமா இருக்கா!” என மகளுக்காகச் சமாதானம் சொன்னார் சுப்பு ரத்தினம்.

‘வயசு புள்ள எழுந்து வர நேரத்தப் பாரு! இவள பார்த்தா சீதேவி சீ போன்னு போய்டுவா!’ என மனதிற்குள்ளே கறுவினார் அருள்மணி.

“இப்ப இங்க என்ன மாநாடு நடக்குது?” எனக் கேட்டாள் ரஞ்சனி.

“மஞ்சுவ சக்திக்குக் கேட்டு வந்திருக்காங்க!” எனச் சொன்னார் ரங்க நாயகி!

“அப்ப நான் என்ன தக்காளித் தொக்கா? எனக்குக் கல்யாணம் பண்ணாம அவளுக்குப் பண்ணிடுவீங்களா?” என எகிறியவள்,

“தகப்பா! எனக்கு யாரையோ பார்த்து வச்சிருக்கன்னீங்களே, அவன் பேரு என்ன, முத்தையாவோ சொத்தையாவோ! அவன உடனே பேசி முடிங்க! அந்த மஞ்சுவுக்கு முன்ன இந்த ரஞ்சுவோட கல்யாணம் நடக்கனும்! யார் கிட்ட!” எனச் சொல்லி சாப்பிடும் இடத்துக்கு நடந்து விட்டாள்.

சுப்பு ரத்தினத்தின் முகம் சட்டென மலர்ந்து விட்டது!

“பிறகென்ன! உங்க பெரிய மகத்தான் ஓகே பண்ணிட்டாளே! நிச்சயத்த நடத்திடலாமா?” எனக் கேட்டார் அருள்மணி.

“ரெண்டு நிச்சயத்தையும் ஒரு மாசத்துல ஒன்னா முடிச்சிடலாம்! சக்தி சொன்ன மாதிரியே வீட்டோட வச்சிக்கலாம்! கல்யாணத்த வேணும்னா கிராண்டா பண்ணிடலாம்”

இவர்கள் நால்வரும் அமர்ந்து மேற்படி விவரங்கள் பேசிக் கொண்டிருக்க, காலேஜ் முடித்து வீட்டிற்கு வந்தாள் சிவமஞ்சரி. அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்து விட்டது சங்கரிக்கு.

“பொண்ணு நம்ம பையனுக்குப் பொருத்தமா இருக்காங்க! ஜோடி பொருத்தம் அம்சமா இருக்கு!” எனக் கணவர் காதில் கிசுகிசுத்தார் இவர்.

“யாரோட செலெக்‌ஷன்! என் பையனோடதுடி! அப்படித்தான் அம்சமா இருக்கும்” என்ற அருள்மணியின் குரலில் அப்படி ஒரு பெருமை.

இவர்களைப் பார்த்ததும், சிரித்த முகத்துடன் அருகே வந்தாள் மஞ்சரி.

“வாங்க மாமா! வாங்க அத்தை!” என்றவள்,

“டூ மினிட்ஸ் குடுங்க! நான் போய் ரிப்ரேஸ் பண்ணிட்டு வந்துடறேன்” என உள்ளே விரைந்தாள்.

மீண்டும் அவள் வந்த போது கையில் சிற்றுண்டித் தட்டு இருந்தது. காபியையும் சிற்றுண்டியையும் நால்வருக்கும் கொடுத்தவள், சங்கரியின் அருகே போய் அமர்ந்து கொண்டாள். சங்கரி அவளுடன் பேச்சுக் கொடுக்க, இவளும் பதில் கொடுக்க எனப் பார்க்கவே பாந்தமாய் இருந்தது அந்தக் காட்சி.

அவளுக்கும் சக்திக்கும் நிச்சயம் செய்ய தேதி குறிக்க வந்திருக்கிறார்கள் எனக் கேள்விப் பட்டதும் அவள் முகம் சிவந்து விட்டது.

“அதுக்குள்ள என்ன அத்தை அவசரம்! தம்பி இறந்து இன்னும் வருஷம் திரும்பல! நான் என் படிப்பக் கூட இன்னும் முடிக்கல” எனத் தயங்கினாள் பெண்.

அவளது அழகையும், நாணத்தையும் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தார் சங்கரி.

‘பையன் ஏன் வழுக்கி விழுந்தான்னு இப்பல்ல புரியிது! எங்க இவ கிடைக்காம போயிடுவாளோன்னுல அவசரப்படுத்தறான்!’ என எண்ணிக் கொண்டார் அவர்.

அவளையும் கன்வின்ஸ் செய்து அடுத்து வரும் மாதத்தில் நிச்சயத் தேதியைக் குறித்தார்கள். நாட்களும் பர பரவென ஓடி, நிச்சயத் தினமும் வந்து சேர்ந்தது. அமைச்சரின் வீட்டில்தான் நிச்சயத்தார்த்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

மதியத்தில் இருந்து பெண்கள் இருவருக்கும் அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. ஏற்கனவே ஊசி மூலம் கொஞ்சமாய் போதை ஏற்றி இருந்த ரஞ்சனி, எந்தச் சேஷ்டைகளும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். கிளி பச்சை வர்ணத்தில் அவளுக்குப் பட்டுக் கட்டி, நகைகளும் அணிவித்து விட்டிருந்தனர். மஞ்சரியோ பிங்க் வர்ண பட்டில் அப்சரஸ் போல ஜொலித்தாள்.

இரு மாப்பிள்ளை வீட்டில் இருந்தும் ஆட்கள் வந்து விட, பெண்கள் இருவரும் வரவேற்பறைக்கு அழைத்து வரப்பட்டனர். தனித் தனியாய் இரு ஜோடிகளையும் நிற்க வைத்து சாங்கியங்கள் செய்தார்கள். பின் மாப்பிள்ளை வீட்டினர் கொடுத்த சீர் தட்டுப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
மஞ்சரிக்காகக் கடை கடையாய் ஏறி இறங்கி மஜந்தா வர்ணத்தில் பட்டுச் சேலை ஒன்றை வாங்கி இருந்தான் சக்தி அமரன். அந்தச் சேலைக்கு ஏற்றவாறு நகைகளும், காலணியும் கூட இருந்தது அந்தத் தட்டில். பெண்கள் இருவரும் சேலை மாற்றி வரப் போனார்கள். மஞ்சரியின் தட்டை வைத்திருந்த அழகு நிலையப் பெண் ரஞ்சனியின் அறைக்கும், ரஞ்சனியின் தட்டை வைத்திருந்த பெண் மஞ்சரியின் அறைக்கும் போய் விட்ட்டார்கள். தவறை உணர்ந்து மஞ்சரி ரஞ்சனியின் அறைக் கதவைத் தட்ட, அதற்குள் அந்த மஜாந்தா சேலையைக் கட்டி இருந்தாள் ரஞ்சனி.

“அக்கா! இது எனக்கான சேலை”

“கியா?” எனக் கேட்ட ரஞ்சனி, கட்டிலில் சோர்வாய் அமர்ந்து கொண்டாள்.

“என்னோட சாரிய நீ தப்பா கட்டிட்டக்கா! கழட்டிக் குடு” எனச் சங்கடமாய் கேட்டாள் மஞ்சரி.

“சாரில என்னடி உன்னோடது என்னோடது! எல்லாமே நம்மோடது!” எனத் தத்துவம் பேசிய ரஞ்சனி,

“நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி” எனக் கட்டிலில் சரிந்து பாட ஆரம்பித்தாள்.

“அச்சோ! ஹையாகிட்டாளே! இப்ப என்ன பண்ண!” என முனகிய மஞ்சரி, தாயை அழைத்தாள்.

“அறிவு இருக்காடி உனக்கு! தட்டு மாறுனது கூடவா தெரியல! இப்ப அவ உடம்புல இருந்து சேலைய உருவவா முடியும்! கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவாளே” எனக் காய்ந்தார் ரங்க நாயகி.

“என்னம்மா செய்யறது?” எனக் கையைப் பிசைந்தாள் இவள்.

“உன் கிட்ட இதே கலருல ஒரு சேலை இருக்குல்ல, அதை கட்டிக்கோ இப்போதைக்கு! உன் சங்கரி ஆண்ட்டி கிட்ட நான் சொல்லிக்கறேன்” என வெளியே போனார் அவர்.

முன்னறைக்கு வந்த மஞ்சரியை முறைத்தபடி நின்றான் சக்தி அமரன்.

“எவ்ளோ ஆசையா உனக்குன்னு வாங்கனேன் அந்த சாரிய! அதைக் கட்டுனா நீ பளிங்கு சிலை போல இருப்பேன்னு எவ்ளோ ஆவலா பார்க்கறதுக்கு வேய்ட் பண்ணேன்! இப்படி பண்ணிட்டியே மஞ்சு! உங்கக்கா உடம்புல அதைப் பார்க்கறப்ப, அப்படியே பத்திட்டு வருது எனக்கு! மஜந்தா சேலைல மாரியாத்தா மாதிரி நிக்கறா! டிஸ்கஸ்ட்டிங்”

“சாரி சக்தி! இப்படியாகும்னு நான் நினைக்கவே இல்ல!” என்றவளுக்குக் குரலடைத்தது.

அவளது வருத்தத்தில் சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டான் சக்தி!

“விடு மஞ்சும்மா! நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை டாக்குக்குத்தான் கிடைக்கனும்னு விதி இருந்தா யாரால அதை மாத்த முடியும்? லீவ் இட்! லெட் அஸ் எஞ்சாய் திஸ் மோமண்ட்!” என்றவன் அவள் கையில் மோதிரத்தைப் போட்டு விட்டான்.

சுப்பு ரத்தினத்தின் உறவான முத்தையாவும் ரஞ்சனியின் தள்ளாடியக் கரம் பற்றி மோதிரத்தை அணிவித்தான். நிச்சயத்தார்த்த நிகழ்வு முடிய, மணமக்களை வைத்துப் போட்டோக்கள் எடுத்தார்கள். ரஞ்சனி இங்கும் அங்கும் அசைந்தபடியே இருக்க, இன்னொரு நாள் போட்டோஷூட் வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி விட்டார் சுப்பு ரத்தினம்.

வந்திருந்தவர்கள் எல்லோரும் சாப்பிடப் போக, கீழ் தளத்தில் கொஞ்சம் உட்புறமாக இருந்த பாத்ரூமுக்குப் போனான் சக்தி அமரன்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவனின் மார்பில் மோதி நின்றாள் சிவரஞ்சனி.

“வாட் த ஹேல்!” எனக் குமுறினான் சக்தி.

“ஹெல்லு பெல்லு, சிதறிப் போகும் பல்லு! ஒழுங்கு மர்யாதையா அவள வேணாம்னுட்டு, என்னைக் கட்டிக்க! இல்லைன்னு வை!!!” என மிரட்டினாள் சிவரஞ்சனி.

மிரட்டினாள் எனச் சொல்வதை விட மிழற்றினாள் எனலாம்.

“என்னடி செய்வ?” எனக் கோபமாகக் கேட்டான் சக்தி அமரன்.

“ஜட்டி மேட்டரில் போலீஸ் டெட் பாடி!! அப்படின்னு கேப்ஷன் போட்டு போஸ்ட் போடுவேன்! போஸ்ட்டர் ஒட்டுவேன்! இன்ஸ கொன்னது நீதான்னு ஊருக்கு உரக்கச் சொல்வேன்! எனக்கு இந்த ஸ்வீட் எனெர்ஜி(சக்தி) வேணும்! அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன் நான்”

“இன்ஸ நான் கொன்னேன்! அதை நீ பார்த்த! குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு! கஞ்சாக்காரி பேச்சு காலையானா போச்சுன்னு உன்னைப் போல ஆளுங்களுக்குத்தான் சொல்லி வச்சிருக்காங்க! எந்தக் கோர்ட்டுல வேணும்னாலும் போய் சொல்லு! புத்தியுள்ள எவனும் உன்னைப் போல குடிகாரி பேச்ச நம்ப மாட்டான்! ச்சீ! வழி விடு!”

அவனைப் போக விடாமல் இறுக்கமாய் இன்னும் ஒட்டிக் கொண்டாள் சிவரஞ்சனி!

“ஐ லவ் யூ சக்தி! புரிஞ்சுக்கோ!”

“அதை பின்னாடி நிக்கறாரு பாரு உங்கப்பா, அவர் கிட்ட சொல்லு! ரெண்டு பொண்ணையும் எனக்கே கட்டி வைப்பாரு!” என்றவன்,

“டார்ச்சர் பண்ணுறா மாமா என்னை! உங்களுக்காகத்தான் பொறுத்துப் போறேன்! இல்லைனா பளார்னு அப்பிருவேன் அப்பி!” என அவளைத் தன்னிடமிருந்து பிரித்து சுப்பு ரத்தினத்தின் பக்கம் தள்ளி விட்டவன், விடுவிடுவென நடந்து விட்டான்.

அடுத்தச் சில தினங்களில் திலகனின் கொலைக்கான துப்பு ஒன்று கிடைத்திருந்தது சக்திக்கு!



(உயிராவாயா???)

அடுத்த எபி லேட்டாகலாம் டியர்ஸ்!! அட்ஜஸ்ட் கரோ!!!
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 10)


அய்யய்யோ..! இந்த வநிஜீ என்ன சொல்ல வராங்கன்னே தெரியலையே..? சக்திக்கு மஞ்சரியா ? ரஞ்சனியா ?
ரஞ்சனியா ? மஞ்சரியா ? ஒரேயடியா குழப்புறாங்களே.
குடிகாரன் பேச்சு மட்டுமா பொழுது விடிஞ்சா போச்சு..?
இந்த ரஞ்சனியோட பேச்சு கூடத்தான் காலையில கஞ்சா தெளிஞ்சா போயிடறது. போதையில இருந்தாத்தான்
காதலோட பேசறா, போதை தெளிஞ்சிட்டா வில்லங்கமாவே பேசறா.


எனக்கென்னவோ, அந்த ஜட்டி இன்சூவை கொன்னது கூட ரஞ்சனியா இருக்குமோன்னு இப்ப டவுட் வருது. இருக்குமோ ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
என்ன நடக்குதோ
எங்க போய் முடியுமோ
யப்பா சக்தி நீ யாருக்கு டா
மாப்பிள்ளை
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சேலை தானா மாறுச்சா இல்லை நம்மாளு மாத்துனாளா?🙄🙄.
என்ன எவிடன்ஸ் கிடைச்சிருக்கும் இவுனுக்கு.
ஒரே மர்மமா போகுது ப்பா.
 
ஒரே குழப்பம்... சங்கரி ஏன் தில்லை மேல பாசமா இருக்காங்க... ரங்க நாயகிய பிடிக்கல போல.. என்னமோ நடந்து இருக்கு.. இந்த ரஞ்சனி அதான் இப்பிடி இருக்காளோ 🤷 ஒன்னும் புரியல... 🙄😴
 
சங்கரி தில்லை friends போல.....
ரங்கநாயகிகிட்ட எதுவும் தப்பு இருக்குமோ ரஞ்சனி இப்படி இருக்குறதுக்கு அவங்க காரணமா இருப்பாங்களோ 🤔

புடவை மட்டுமா இல்லை எனர்ஜியும் மாறிடுவானா 😂
 
😍😍😍

எனக்கு என்னமோ சக்திக்கு சிவரஞ்சனி தான் ஜோடியா இருக்குமோன்னு தோணுது... அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த பாட்டை பாட போறான்..😁😁😁

 
Back
Top