எபி 19

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

அத்தியாயம் 19



தனதறையின் பால்கனியில், வானத்தில் தெரிந்த பௌர்ணமி நிலவை வெறித்தபடி நின்றிருந்தாள் சிவரஞ்சனி. அவள் பட்டுக் கன்னங்களில் லேசாய் கண்ணீர் கோடுகள். உள்ளக் கிடங்கில் ஏதேதோ எண்ணங்கள்.

‘அழ வேண்டியது நானில்லை! இத்தனை நாளா என்னை அழ வச்சவங்கத்தான் அழனும்! இனி நான் சிரிக்கற காலம் வந்திடுச்சு!’ என மனதைச் சுயபச்சாதாபத்தில் இருந்து மீட்டுக் கொண்டவள், அழுத்தமாகக் கண்ணீரைத் துடைத்தாள்.

நீண்ட நேரமாக அங்கே நின்றிருக்கவும் குளிர் காற்று உடலை ஊடுறுவி, மேனி நடுங்க ஆரம்பித்தது ரஞ்சனிக்கு. பால்கனி கதவை அடைத்து விட்டு உள்ளே வந்தவள், மேசையோரம் வைத்திருந்த ஆல்பத்தைக் கைகளில் எடுத்தபடி கட்டிலில் அமர்ந்தாள். ஐந்து வயது வரை எடுக்கப்பட்டிருந்த அவளின் சிறு வயது போட்டோக்கள் அடங்கிய கலேக்‌ஷன் அது. ஒவ்வொரு பக்கமாய் ஆல்பத்தைப் புரட்டினாள் ரஞ்சனி. பிறந்த கைக் குழந்தையான இவளை ஏந்தியபடி முகம் மத்தாப்பாய் ஒளி விட சிரித்திருக்கும் தில்லை. அவர் பக்கத்தில் புன்னகை முகமாய் நின்றிருக்கும் இவள் அப்பா சுப்பு ரத்தினம். ஒவ்வொரு வயது கூடும் போதும் கேக்கை அருகில் வைத்து இவளை ஒரு கூடை நாற்காலியில் அமர்த்தி வைத்து எடுக்கப் பட்டப் போட்டோக்கள். ஒவ்வொரு போட்டோவிலும் கண்கள் மின்ன கியூட்டாய் இருந்தாள் குட்டி ரஞ்சனி. சிறு வயதில் நடந்த பெரும்பான்மையான விஷயங்கள் இவளுக்கு ஞாபகம் இல்லை. ஆனால் சிலது மற்றும் பசுமரத்தாணிப் போல மனதில் பதிந்திருந்தன.

ஒரு போட்டோவின் மேல் இவள் பார்வை ரசனையாய் பதிந்தது. அதில் ரஞ்சனியின் கையை வலது கையால் பற்றியபடி, இடது கையில் ஸ்பைடர்மென் பொம்மையுடன் நின்றிருந்தான் ஒரு சிறுவன். அவன் அருகே சிரித்த முகத்துடன் சங்கரி. இவள் அருகே மகிழ்ச்சியாய் தில்லை. ஹோட்டல் ஒன்றின் வளாகத்தில் இருந்த குழந்தைகள் விளையாடும் பார்க்கில் அந்தப் போட்டோ எடுக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுவனின் முகத்தைத் தடவிக் கொடுத்த ரஞ்சனி,

“அம்ரு!” என முணுமுணுத்தாள்.

கைகள் தாமாக கழுத்தில் கிடந்த தாலியைத் தடவிக் கொடுத்தன.

கட்டிலின் மேலே கிடத்தி இருந்த அந்த ஸ்பைடர்மென் பொம்மையை வாரி எடுத்தவள், அப்படியே அதை நெஞ்சில் வைத்து அணைத்துக் கொண்டாள். சிறு வயதில் இவள் அம்மாவும், அவன் அம்மாவும் சந்தித்துப் பேசிக் கொள்ளும் சில சமயங்களில் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து விளையாடி இருக்கிறார்கள். போட்டோவில் அவன் கையில் இருக்கும் ஸ்பைடர்மென் பொம்மை இவள் கைக்கு வந்த நாள் இன்னும் கூட சிவரஞ்சனிக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

“சக்தி! இவ சீனிக்குட்டி!” எனச் சங்கரியும்,

“ரஞ்சும்மா! இவன் அம்ருக்குட்டி” எனத் தில்லையும் இவர்களுக்கு அறிமுகம் செய்வித்தது அன்றைய தினம்தான்.

அலுவலகம், பிள்ளை வளர்ப்பு, உடல் நலக் குறைவு என பிசியாக இருந்தாள் தில்லை. அதே நேரம் கணவனுக்கு வியாபாரத்தில் கை கொடுத்துப் பக்கபலமாய் இருந்தாள் சங்கரி. ஆகவே தோழிகள் இருவரும் சந்தித்துக் கொள்வது மிகவும் குறைவுதான். அப்படிச் சந்தித்துக் கொள்ளும் போது சில சமயம் குழந்தைகளையும் உடன் அழைத்து வருவார்கள். போட்டோ எடுத்தத் தினத்தன்று இரு பிள்ளைகளும் தத்தம் தாயுடன் வந்திருந்தனர்.

இவர்கள் இருவரும் காபி, டிபன் எனச் சாப்பிட, பிள்ளைகள் இருவரும் ஊஞ்சல், சறுக்கு மரம் என விளையாடினார்கள்.

“அம்ரு!”

“ஹ்ம்ம்” எனப் பதில் சொன்ன சக்தி மும்முரமாய் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தான்.

“நானும் ஊஞ்சல் ஆடனும்”

“நீ குட்டிப் பாப்பா! ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துடுவ! கீழ விழுந்தா கால்ல, கைல எல்லாம் காயம் படும்! ரத்தம் நெறையா வரும்! அப்புறம் நீ அழுவ! நீ அழுதா எனக்கும் அழுகை வரும்! அதனால நான் மட்டும் ஆடறேன்! நீ பார்த்துட்டே இரு!” எனச் சொன்னவன் ஊஞ்சலை அவளுக்கு விட்டே கொடுக்கவில்லை.

அந்த வயதிலேயே கேப்மாரித்தனம் விளைந்து நின்றிருந்தது இந்தச் சக்தி அமரனுக்கு.

“அப்போ உன் பொம்மையக் குடு! நீ விளையடற வரைக்கும் நான் கையில வச்சிருக்கேன்” எனக் கேட்டாள் இவள்.

“நோ சீனி! இது எங்கப்பா வாங்கிக் குடுத்தாரு எனக்கு! கட்டில் கீழ பேய் படுத்திருந்தா, இல்ல ஃபேன் மேல பேய் தொங்கிட்டு இருந்தா, இந்த ஸ்பைடர்மேன் பொம்மைய காட்டுனா, அது பயந்துட்டு ஓடிடும்! இதுக்கு ரொம்பப் பவர் இருக்கு! நம்மள பாதுகாப்பா வச்சிக்கும்! முன்னெல்லாம் நான் பயந்துட்டு எங்கப்பா அம்மா ரூமுக்கு அடிக்கடி ஓடிப் போய் படுத்துப்பேன்! இந்தப் பொம்மைய எங்கப்பா வாங்கிட்டு வந்து குடுத்ததுல இருந்து நான் என் ரூம்லயே தூங்கறேன்! நான் ப்ரேவ் அண்ட் குட் பாய்னு எங்கப்பா சொன்னாரு தெரியுமா! எங்க வீட்டுல இதை வச்சித்தான் நான் ஒவ்வொரு ரூம்லயும் இருக்கற பேய்லாம் ஓட்டுவேன். உன் ரூம்ல பேய் இருக்கா சீனி?”

முகம் வெளிற இல்லையெனத் தலையாட்டினாள் இவள்.

“அதெப்படி இல்லாம போகும்? எல்லார் வீட்டுலயும் பேய் இருக்கும் சீனி! நீ சரியா பார்த்திருக்க மாட்ட! இன்னிக்கு வீட்டுக்குப் போனதும் கட்டிலுக்கு அடில குனிஞ்சு பாரு! உன்னை மாதிரியே பெரிய கண்ணு வச்சு, நீள நீளமா முடி வச்சு, பல்லு ரெண்டு துருத்திட்டு, ஊ, ஊன்னு மூச்சு விட்டுட்டு ஒரு பேய் படுத்திருக்கும்! அப்படி இல்லைனா என் பேர நான் சக்தி அமரன்ல இருந்து பக்தி குமரன்னு மாத்தி வச்சிக்கறேன்” எனக் கண்களை உருட்டிச் சொல்ல, இவள் அம்மாவெனக் கத்தியபடி தில்லையிடம் ஓடினாள்.

“என்னம்மா! என்ன?”

“பேய்! பேய்! கட்டில்லுக்கு அடில பேய் இருக்குமாம்மா” எனத் தேம்பியவளை அணைத்துக் கொண்டார் தில்லை.

அவர்கள் அருகே தலையைக் கோதியபடி ஸ்டைலாக வந்து நின்றான் சக்தி.

“சீனிக்குட்டி கிட்ட என்னடா சொன்ன?” எனக் காட்டமாகக் கேட்டார் சங்கரி.

நல்லப் பிள்ளைப் போல முகத்தை வைத்திருந்தவன்,

“ப்ராமிஸா நான் ஒன்னும் சொல்லல மம்மி! தூங்கறப்ப சாமி சரணம் சொன்னா பேய் வராதுன்னு சொல்லிக் குடுத்தேன்! அவ்ளோதான்! அதுக்கே இந்தப் பாப்பா அழுகறா!” என்றவன் அழுது கொண்டிருக்கும் சின்னவளைக் குதூகலமாகப் பார்த்தான்.

சக்தியின் பார்வையை வைத்தே அவன் சேஷ்டையைக் கண்டுக் கொண்ட சங்கரி, நொட்டெனத் தலையில் ஒரு கொட்டு வைத்தார்.

“வீட்டுக்குப் போனதும் மம்மி கொட்டுனாங்க, சக்தி மண்டை வீங்கிப் போச்சுன்னு அப்பாட்ட சொல்வேன்! பேட் மம்மி” என முறைத்தவனைச் சிரிப்புடன் பார்த்திருந்தார் தில்லை.

“சரியான வாலுடா நீ” என அவனை இழுத்துக் கன்னத்தில் முத்தம் வைத்தத் தில்லை, தன் அருகிலேயே அவனை அமர்த்திக் கொண்டார்.

ஐஸ்க்ரிம் ஆர்டர் செய்யவும், ரஞ்சனியின் அழுகையும் நின்றது! சின்னவனின் கோபமும் காணாமல் போனது! இருவரும் மீண்டும் பேசிச் சிரித்தபடி ஐஸ்க்ரீம் உண்டார்கள். அன்றைய தினம் அந்த ஸ்பைடர்மென் பொம்மையை சிவரஞ்சனியிடம் மனமுவந்து கொடுத்தான் சக்தி அமரன்.

“நீ ஊன்னு அழுதது பாவமா இருக்கு சீனி! இந்தப் பொம்மையை நீயே வச்சிக்கோ! பேய் வந்தா இது உன்னைக் காப்பாத்தும்!” எனச் சொன்னவனைப் பிடித்துப் போனது குட்டிக்கு.

அந்தப் பொம்மையைத் தனக்குப் பாதுக்காப்பாக வைத்துக் கொண்ட ரஞ்சனி, அதற்கு அதன் முதலாளியின் பெயரையே சூட்டினாள். பேய் பயம் வரும் போதெல்லாம் அந்த அம்ருவைக் கட்டிக் கொண்டுப் படுத்துக் கொள்வாள். பயம் என்பது காணாமல் போய் விடும். அதற்குப் பிறகு சந்திக்கும் போதெல்லாம் இருவரும் சந்தோஷமாக விளையாடுவார்கள். இவன் அவளை வம்பிழுத்து அழ வைத்தாலும், கிளம்பும் முன் எப்படியாவது சமாதானம் செய்து விடுவான். பள்ளிக்கு இன்னும் சென்றிராத ரஞ்சனியின் முதல் நட்பு என அமைந்தவன் சக்தி அமரன்தான்.

அவள் தாய் இறந்த போது, இரவெல்லாம் பல பயங்கரக் கனவுகள் இவளை அலைக்கழிக்கும்! தூங்க முடியாமல் அழுதபடி புரண்டுக் கொண்டே இருப்பாள். அப்படி மீறி தூங்கினாலும், கரிக்கட்டையாய் ஆகிப் போன தாயின் உருவமே கண் முன் வந்து நிற்கும். சில சமயங்களில் எதுவோ முதுகை அழுத்துவது போல இருக்கும். கத்தக் கூடத் தெம்பில்லாமல் கண்ணீர் வடித்தப்படியே படுத்துக் கிடப்பாள் குட்டி ரஞ்சனி. அந்த நேரங்களில் அவளுக்குத் துணையாய் இருந்தது அந்த அம்ருதான்! அம்ருவை அணைத்தபடி இரவெல்லாம் விழித்துக் கிடப்பாள். அம்ருவிடம்தான் தன் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வாள். அம்ருவின் மூலம் அதை கொடுத்தவனும் இவள் மனதில் பசுமரத்தாணிப் போல பதிந்து நின்றான்.

தில்லை இறந்ததும் பேத்தியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் சபேசன். துக்கத்தை மறக்க முழு மூச்சாகக் கட்சி வேலைகளில் சுப்பு ரத்தினம் மூழ்கி விட, பேத்தியைத் தாங்களே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார் இவர். முதலில் தயங்கினாலும், மகளுக்கு இதுவே நல்லது என விட்டுக் கொடுத்து விட்டார் சுப்பு ரத்தினம். சில மாதங்கள் கழித்து சபேசனின் வற்புறுத்தலில் ரங்க நாயகியை மணந்து கொண்ட சுப்பு ரத்தினம், மகளைத் தங்களிடம் விட்டு விடச் சொல்லிக் கேட்டார்.

“ஒருத்திய காலனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டோம்! இன்னொருத்திய உங்களுக்குக் கட்டி வச்சிட்டோம்! இனி நாங்க தனியாத்தானே இருப்போம்! எங்க துக்கத்தைக் தீர்க்க, எங்களுக்கு ஆதரவா இருக்க, இந்தப் பிள்ளையக் குடுத்திடுங்களேன் மாப்பிள்ளை! அடிக்கடி நைட்டுல அலறித் துடிக்கறா! கத்தி ஆர்ப்பாட்டம் செய்யறா! நாங்கன்னா கரேக்டா பார்த்துப்போம்! நீங்க உங்க வாழ்க்கைய வாழ ஆரம்பிங்க! ரங்காவ சந்தோஷமா வச்சிக்கோங்க!” எனத் தளுதளுத்தவரிடம் கட் அண்ட் ரைட்டாக பேச முடியவில்லை சுப்பு ரத்தினத்தால்.

ஆகவே சிவரஞ்சனி பாட்டி, தாத்தாவிடம் வளர ஆரம்பித்தாள். தாத்தாவுக்கு மகள் இல்லாது போக தொழிலைக் கட்டிக் காக்க வேண்டிய நிர்ப்பந்தம். பாட்டிக்கோ மூப்பினால் வந்த உடல் உபாதைகள். பாசமாய் பேசிப் பழகினாலும், அவர்களால் ஒரு குட்டிக் குழந்தைக்கு ஏற்றது போல ஓடியாட முடியவில்லை. அதனாலேயே குட்டி ரஞ்சனி தன் தாயை அதிகமாய் தேடினாள். அம்மா வரவே மாட்டாள் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த நேரத்தில் சுப்பு ரத்தினத்தின் ஆதரவும், அன்பும் இருந்திருந்தால் கூட ஓரளவு தேறி வந்திருப்பாள். தாயும் இல்லாமல், தந்தையும் இருந்தும் இல்லாமல் போக, மிகவும் மூர்க்கமானக் குழந்தையாய் வளர்ந்தாள் அவள். பேத்தியின் கோபத்தைக் குறைக்கக் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் பெரியவர்கள்.

போகப் போக, வயதும் ஏற, கூடா நட்பு வேறு சேர்ந்து கொண்டது! குடி, சிகரேட், போதைப் பழக்கம் எனக் குட்டிச் சுவராகிப் போனாள் பெண். சில சமயம் வந்து பார்த்துப் போகும் அப்பாவையும் சித்தியையும், அவர்களின் பிள்ளைகளையும் மொத்தமாய் தள்ளி வைத்தாள் சிவரஞ்சனி. மகளின் போக்குப் பயத்தைக் கொடுக்க, மாமனாரிடம் சண்டைப் போட்டு அவளைத் தன்னுடன் அழைத்துப் போக முனைந்தார் சுப்பு ரத்தினம்.

அவருடன் போக மாட்டேன் எனக் கையை அறுத்துக் கொள்ள முயன்று எல்லோருக்கும் மரணப் பயத்தைக் காட்டிய சிவரஞ்சனி ஒரு நாள் தானாகவே தந்தையின் வீட்டில் போய் அடைக்கலமானாள். அன்றைய நாள், அவளது டிசோசியேட்டிவ் அம்னேசியா(dissociative amnesia) குணமான நாள்!

போட்டோ ஆல்பத்தில் ஐந்து வயது பிறந்தநாளின் போது அவளைத் தூக்கி வைத்திருந்த சுப்புவும், அவர் அருகே இடம், வலமென நின்றிருந்த ரங்க நாயகியும் தில்லையும் இவள் கவனத்தை மீண்டும் நிகழ் காலத்துக்கு இட்டு வந்தார்கள். ஆட் காட்டி விரலைச் சுப்பு ரத்தினத்தின் மேலும், ரங்க நாயகியின் மேலும் மாற்றி மாற்றி வைத்த சிவரஞ்சனி,

“நீயா இல்ல நீயா? யார் அந்தக் கொலையாளி?” என முணுமுணுத்தாள்.
 
கண்கள் ரத்தமெனச் சிவந்து கிடந்தது அவளுக்கு!

அந்த நேரம், அவள் ரகசியமாய் உபயோகிக்கும் பர்னர்(burner- பேசிக் மாடல் போன்! இதை டெம்ப்ரவரியாக உபயோகித்து விட்டுத் தூக்கிப் போட்டு விடுவார்கள். இதை ட்ரேக் செய்ய முடியாது) போனுக்கு அழைப்பு வந்தது.

“ஹலோ!”

“சீனி! சக்தி பேசறேன்”

“சொல்லுடா”

“உன் வீட்டுல வேலைப் பார்த்து எஸ்ஸான அந்த சமையல்கார அம்மாவ கண்டுப் புடிச்சிட்டேன்!”

“ல்வ யூடா அம்ரூ!!!!!”



(உயிரானாய்!!!)
 
ரெண்டும் முதல்ல இருந்தே ஒன்னா தான் வேலை பார்க்குதுங்களா

அப்புறம் ஏன் அவ தங்கச்சியை லவ் பண்றா மாதிரி நடிச்சான்

சூப்பர் எபி
 
Thillai ya kandippa murder thaan pannitanga. Prayer room velila lock panni irundhadhu accident appo. Thanni kudichuttu varen nu veetuku ulla pona ranganayagi thaan konnutta. Subbu ku idhila pangu irukkanu therilayae.
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 19)


எனக்கென்னவோ, சுப்பு & ரங்கநாயகி ரெண்டு பேருமே திட்டம் போட்டுத்தான் இந்த கொலையை பண்ணி இருக்கனும்ன்னு தோணுது சரியான கூட்டு களவாணிங்க. அந்த மட்டுக்கு சக்தி அமரானாவது சிவரஞ்சனிக்கு துணையா இருக்கிறானே.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இரண்டு பேருமே சேந்து தான் ஆரம்பத்துல இருந்து பிளான் போட்டு செய்யுதுங்களா,?.
திடீர்னு எப்படி அம்னீஷியா குணமாச்சு? சீனிக்கு.
வனிம்மா எபி கொஞ்சம் சிறிசா இருக்குப்பா. யானை பசிக்கு சோள பொரி 1000015497.jpg
 
Adei.. rendu perum apo irunndhey friends ahh🧐 ennaaaas acting rendum😱 pesama cinema ku poidunga da.. Oscar kidaikkum🤷🤷🤷

Thillai and sankari marriage aanathum friendship vittu pochhunu thana munna vandhuchu...🤔🤔 Ipo ena apo apo meet pannadhu pola varudhu🙄🙄🙄

Enakkum antha samayal amma ninaippu vandhuchu... Avangaluku ethadhu theriyutha papoam🤷 ennadhu amnesia ya va😲😲😲 ithu epo irundhu🙄🙄🙄

Paathavey maattudhu evlo epi poattalum☹️☹️☹️
 
என்னம்மா இது?? Epiல கதையை தேட வேண்டி இருக்கு.....🧐🧐

ஆரம்பத்தில் இருந்து இரண்டும் பார்ட்னர்ஸ் தானா?🤔🤔 எப்போதான் சஸ்பென்ஸ் ரிலீஸ் பண்ணுவீங்க 🙄🤔???
 
Back
Top