• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

காவல் நான் காதல் நீயடி 1

kodi sundar

Well-known member
1000081174.jpg

1. காவல் நான்
காதல் நீயடி.


"ஜெயிச்சிட்ட தினேஷா"

அந்தப் பெரிய விளையாட்டு அரங்கம் முழுவதும் கைத்தட்டலிலும், விசில் சத்தத்திலும் அதிர்ந்து கொண்டிருக்க.. ஒரு ரசிகனின் இந்த கூக்குரலில் புன்னகை செய்தான் தினேஷ்.

இத்தனை ஆர்ப்பரிப்பும் யாருக்காக? இவன்
ஒருவனுக்காக. அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் தன் ஹெல்மெட்டைக் கழட்டி உயர்த்தி நாலா புறத்திலும் காட்டினான் தினேஷ்.

அதற்கும் 'ஹேய்" என்ற உற்சாகக் கூச்சல் நிரம்பி வழிந்தது அரங்கம் முழுதும்.

சற்றுமுன் கூட இந்த அரங்கம் இப்படியா இருந்தது? இல்லையில்லை. பின்'சைலெண்ட் என்பார்களே.. அப்படியிருந்தது. இத்தனைக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கே.

அப்போது தினேஷ் தன் பேட்'டினால் மண்ணில் தட்டிக் கொண்டிருந்தான். இரண்டு பந்தில் ஆறு ரன் அடிக்க வேண்டும். அடித்து விட்டால் இந்திய அணி அந்தத் தொடரை வென்று விடும். இத்தனைக்கும் இவன் பௌலர் மட்டுமே. எப்படியிருக்கும்? தூரயிருந்து கேப்டன் மொஹிந்தர் சிங் கட்டைவிரலைத் தூக்கிக் காட்டினான். இவன் மேல் நம்பிக்கை உண்டு கேப்டனுக்கு.

பௌலர் பந்தோடு ஓடிவந்த நேரம் பார்வையாளர்கள் ஒரே ரிதமாய் கைதட்டியபடி இப்படிக் கூவினார்கள்...

"தின் தின் தினேஷ்
தின் தின் தினேஷ்
தின் தின் தினேஷ்"

ஒரு பேட்டியில் தினேஷ் சொல்லியிருந்தான்.. நான் ஜெயித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், எனக்குள் உற்சாகமாய் சொல்லிக் கொள்வது...

"தின் தின் தினேஷ் என்றுதான்" என்று.

அதை டிவியில் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் அவனை இப்படி உற்சாகப்படுத்துவது வழக்கமாயிற்று.

எதிரணிக்காரன் பந்தை வீச அவன் சுழற்றினான் தன் பேட்டை. "ட்டக்" ஒலியுடன் பந்து பேட்டில் பட்டுப் பறந்தது.

அது எங்கேப் போனது என்று எல்லோரும் உயரே பார்க்க... அம்பயர் அது சிக்ஸர் என்பதை ஊர்ஜிதப்படுத்த தினேஷ் இப்போது கேப்டனைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தினான்.

அவ்வளவு தான்.. சக ஆட்டக்காரர்கள் உள்ளே ஓடி வந்து அவனைத் தூக்கிக் கொண்டார்கள். கொஞ்ச நேரம் சந்தோஷக் கூச்சல், ஒரு குட்டி நடனம், என்று பார்வையாளர்களின் கண்ணுக்கு விருந்து வைத்தார்கள் இந்திய அணியினர்.

இதோ.. ஆட்ட நாயகன் பரிசு. யாருக்கு என்பதில் எல்லாம் தினேஷுக்கு பொருட்டில்லை. ஜெயித்தாயிற்று அவ்வளவே. ஆனால் அங்கே அழைத்ததென்னவோ இவன் பெயரைத் தான். நாலு விக்கெட்டும் எடுத்திருக்கிறான். வெற்றிக்குக் காரணமான கடைசி ஆறு ரன்னையும் எடுத்திருக்கிறான். எனவே, அறிவிப்பு வந்தது...

"ஆட்டநாயகன் தினேஷ்கார்த்திக்"

கைத்தட்டல் விண்ணை முட்ட ஒரு அழகு சிரிப்புடன் போய் பெற்றுக்கொண்டு வந்தவன், அதை அப்படியே கேப்டனிடம் கொண்டு வந்து நீட்டினான்.

கேப்டன் சிரித்தான்.

'தினேஷ்' என்னும் இந்த இருபத்து ஆறு வயது வாலிபனை மிகவும் பிடிக்கும் அந்த முப்பத்து மூன்று வயது கேப்டனுக்கு. தினேஷ் தொடர்ந்து இந்திய அணியில் இருந்ததில்லை. அவன் தமிழ்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைவன். அவ்வப்போது இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் சென்று விளையாடுவான். ஒருநாளும் சோடை போனதில்லை. மொஹிந்தரின் சிபாரிசில் தான் அவனை டீமில் சேர்ப்பதாக ஒரு பேச்சுண்டு. அதற்காக கவலைப் படமாட்டான் கேப்டன். திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காதது அவன் குற்றமில்லையே!!

அடுத்து, விளையாட்டு வீரர்கள் அனைவரும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கள் அணியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இரவு முழுவதும். தினேஷுக்கு தான் அத்தனை பாராட்டும். நான்கு மணிக்கு மேல் ஒவ்வொருவராக தூங்கி விழ, தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் தினேஷ். அவனுக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும்போல இருந்தது.

போட்டி நடந்தது சென்னை என்பதால், அது அவன் ஹோம் கிரௌண்ட் என்பதால் தன் பைக்கை வரவழைத்திருந்தான். கேப்டனுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பிவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்து, தன் பைக்கில் ஏறி, ஹெல்மெட்டை மாட்டித் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, வீடு போய் சேர்ந்தவன், நேராய் மாடிக்கு ஏறினபோது,

"தினேஷ்"

என்று அவன் அம்மாவின் குரல் கேட்க திரும்பிப் பார்த்தான். அவரின் அறைவாசலில் நின்றிருந்தார் மங்கை என்று அழைக்கப்படும் மங்கையர்க்கரசி. ஐம்பதை நெருங்கும் வயதுதான் என்றாலும் அப்படித் தெரியாது. இவனுக்கு அக்கா என்றால் நம்பும்படி இருந்தார்.

"ம்மா.. மேட்ச் பாத்தீங்களா?"

"பார்க்காம இருப்பேனா. என் பிள்ளை ஆட்டத்துல டீமே ஜெயிச்சிடுச்சே"

"ம்ம்ம்" என்றான் பெருமைமாய்.

"சரி போய் பல் துலக்கிட்டு வா, காஃபி போட்டுத்தரேன்"

"ம்மா... பல் துலக்கி, காஃபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்? நான் தூங்கப் போறேன் மாம் ப்ளீஸ்"

சரி என்று தலையாட்டிய மங்கை,

"தினேஷ்.. மணி ஐந்தாகப் போகுது. அப்படியே அவன கொஞ்சம் எழுப்பி விட்டுட்றியா?"

"மா....ம்"
கத்தினான் தினேஷ்.

"என் தங்கம்'ல? எனக்காக செய்யேன். நைட் அவன் வீட்டுக்கு வரவே மணி ஒன்னு ஆகிடுச்சி. இல்லை'னா இந்நேரம் அவனே எழுந்திரிச்சிருப்பான்'பா"

ஷூவால் காலைப் படியில் உதைத்தவன்..

"எழுப்புறேன்"

என்றபடி மேலேறினான்.

கொண்டு வந்த பேகை தன்னறையில் தூக்கி எறிந்துவிட்டு, அவன் அறைக்கு நேர் எதிரேயிருந்த இன்னொருவன் அறையைத் தோளால் தள்ளித் திறந்து உள்ளே சென்றவன் கட்டிலைப் பார்த்தான்.

ஆறடி கட்டிலையும் மீறி கால்கள் வெளியே கிடக்க கவிழ்ந்து படுத்துக் கிடந்தான் அவன். நைட்பேன்ட் மட்டும் அணிந்த சட்டையில்லாத அவன் பொன்தேகம் வலுவான இளைஞன் நான் என்றது. ஒட்ட வெட்டிய தலைமுடி.

தினேஷ் அவன் அருகில் சென்றான். ஆழ்ந்து தூங்கும் அடையாளமாக அவன் தோள்கள் ஏறி இறங்க, அவனைத் தொட்டுப் பேசும் பழக்கம் இல்லாத இவன் பாடினான்...

"வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்"

அவன் லேசாய் அசைய, தினேஷ் பின்வாங்கி கதவருகே போய் நின்று கொண்டான். ஆனால் அவன் மீண்டும் தூங்கிவிட, இவன் கதவிடம் இருந்தபடியே மீண்டும் வெற்றிமீது வெற்றி வந்து என்று சத்தமாகப் பாட...

"அடிங்...க"

என்றபடி அவன் திரும்ப, தினேஷ் ஓடியேப் போய்விட்டான் தன் அறைக்கு.

எழுந்து அமர்ந்த அவன் மணி பார்த்தான்.. ஐந்து. இது அவன் ஜாகிங் செல்லும் நேரம். எழுந்துபோய் குளியலறை சென்று, பளிச்சென்று திரும்பி வந்தான். ஜாகிங் உடை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்து படிக்கெட்டில் இறங்கப்போனவன், சற்று நின்று, தினேஷின் அறையான எதிர் அறையைப் பார்த்தான்.

மல்லாக்கப் படுத்து தூங்க முயன்று கொண்டிருந்த தினேஷ் அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தானோ என்னவோ ரப்பராய் ஒரு சுழன்று சுழன்று கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.

கீழேயிறங்கி வந்த அவன், அந்த நீள வாசற்படிகளில் நின்றுகொண்டு,
"டைகர்"
என்று குரல்கொடுக்க, ஓடி வந்த டைகர், கேட்டருகே போய் காலால் அதன் தாளை விலக்கித் திறந்து விட்டது. இவன் தன் பல்சரில் ஏறிக் கிளம்ப அவன் பின்னே தொற்றிக் கொண்டது டைகர்.

ஒரு பெரிய பார்க்கின் முன் போய் வண்டியை நிறுத்தினான். அருகில் கற்றாழை ஜூஸ் விற்கும் வண்டி நின்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் ஜுஸ் விற்பனை அமர்க்களப்படும் அங்கு.

பார்க்கில் புல்வெளியை சுற்றியிருந்த நடைபாதையில் சிலர் ஓடிக்கொண்டிருக்க, ஓரிடத்தில் உடற்பயிற்சி செய்ய ஏதுவாய் இரும்பாலான உபகரணங்கள்.

இவனைப் பார்த்தவர்கள்,

"குட்மார்னிங் சார்"

என்றனர். தலையசைத்து ஏற்றவன், ஓட ஆரம்பித்தான். மூன்று சுற்றுக்கள் ஓடியவன், ஓரிடத்தில் எதையோ கணித்து ஷூலேஸை சரி செய்வது போல் குனிய, செடிக்குள்ளே சின்ன முணங்கல் சத்தம்.

கூர்மையாய் சில வினாடிகள் கவனித்தவன், தன் கையை செடிக்குள் நுழைத்து, எதையோ இறுக்கமாய் பற்றி, இழுக்க, ஒருவன் அவன் கையோடு வந்திருந்தான். நல்ல போதை போலும். நிற்கமுடியாமல் தள்ளாடிக் கொண்டு, யாரோ தன்னைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல், தூங்கி வழிந்தான்.

இரவு எட்டு மணிக்கு முழுக்க சோதித்தபின் தான் பூங்கா மூடுவார்கள். எனில் இவன் அதன்பிறகு சுவரேறி குதித்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் நின்று வியந்து பார்க்க, அவனைத் தரதரவென இழுத்துச் சென்றவன் பார்க்கை விட்டு வெளியே வந்து கண்களை சுழற்றினான். கண்ணில் பட்டது எதிரே குடிசைப் பகுதி. நிச்சயம் அங்கிருப்பவனாய் தான் இருக்க வேண்டும். தன் பைக்கிலிருந்து ஒரு சங்கிலியை எடுத்தவன், அந்தக் குடிகாரனை அங்கு இழுத்துச் சென்றான். கூடவே ஓடியது டைகர்.

குடிசைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தன. போதையில் இருந்தவனை, அங்கிருக்கும் விளக்குக் கம்பத்தில் சாய்த்து, அதோடு சேர்த்து சங்கிலியால் அவன் வயிற்றை சுற்றிக்கட்டி, சின்னப் பூட்டு நம்பர் லாக் உள்ளது. அதனால் பூட்டி, கைகளை தூசித் தட்டிவிட்டு, தன் பைக்கை நோக்கி நடந்தான்.

வீடு வந்தவன், ஹால் மேஜையில் கிடந்த அரசியல் பத்திரிக்கைகளை ரோபோ வேகத்தில் நின்றபடி
படித்து முடித்து தன் அறைக்கு செல்லப்போக, மங்கை காஃபியுடன் வந்தார். காஃபியின் நிறம், சுவை அவனுக்கு ஏற்றபடியிருக்க, நின்று நிதானமாய் ரசித்துக் குடித்து விட்டு, கப்பை வைக்கத் திரும்ப, மங்கை இன்னும் அவனருகே தான் நின்றிருந்தார். ஒன்றும் பேசாமல் அவரிடம் கொடுத்து விட்டு மேலே மூன்று மூன்று படிகளாக தாவி ஏறியவன், கொஞ்ச நேரத்தில் குளித்துக் கிளம்பி மீண்டும் கீழே வந்தபோது, காவல்துறை அதிகாரியாய் மாறியிருந்தான்.

ஹாலில் நந்தகுமார் அமர்ந்திருந்தார். மங்கையர்க்கரசியின் கணவர். அவரைக் கண்டு கொள்ளாமல் வாசல் நோக்கி நடந்தான். அவன் சென்றதை மங்கை அறியவில்லை. அவனுக்காக வேகவேகமாக சமைத்துக் கொண்டிருந்தார் அவர்.

வெளியே அவனுக்காக காவல்துறை வாகனம் காத்திருக்க, டிரைவரும், கூடயிருந்த பஷரும் அவனுக்கு சல்யூட் வைத்தார்கள்.

பின்புறம் அமர்ந்தவன்,

"பூங்கா கிட்ட போ"

என்றான். இப்போது அந்த குடிசைப்பகுதி களேபரமாக இருந்தது. யார் அவனைக் கட்டி வைத்தது என்று தெரியாமல், கூச்சலிட்டபடி அந்தப் பூட்டை உடைக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

இவன் அங்கே போய் நின்ற விதத்திலேயே அவர்களுக்குப் புரிந்துவிட்டது அதைச் செய்தது இவன்தான் என்று. எனவே அவனிடம் ஓடிவந்து நின்றனர் ஒரு தம்பதியினர்.

"அய்யா"

"இவன் யாரு?"

"எங்க பையன் தான்யா"

"என்ன வயசு இவனுக்கு?"

"இருபத்தி இரண்டு'யா"

"இந்த வயசுல இன்னும் கூட தெளியாத போதையில இருக்கான். முப்பது வயசுல இவன் எப்படி இருப்பான், ஆன்?"

"இந்தாள்'தாங்க, எந்நேரமும் பையனை சரக்கு வாங்கிட்டு வர சொல்லி, கடைக்கு அனுப்பி அவனும் இதை பழகிட்டான்"

என்று அந்தப் பெண்மணி தன் கணவனைக் குறைசொல்ல, அந்தப் பெண்ணின் கணவன் தலைகுனிந்தார்.

இத்தனைக்குப் பின்னும் அந்தப் பையனுக்கு இன்னும் முழுதாய் போதை தீரவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கிடக்க.. இவனோ சுற்றிலும் பார்வையை ஓட்டினான். அங்கே ஒரு சுவரில் திரைப்பட போஸ்டர். அதில் ஹீரோ தன் நண்பனுடன் குடித்துக் கொண்டிருக்கும் காட்சி.

நின்றிருந்த ஒரு வாலிபனை அழைத்து அந்தப் போஸ்டரை கிழிக்கும்படி சொல்ல, அவன் ஓடிப்போய் கிழித்தான்.

"எவனாவது இங்க வந்து சினிமா போஸ்டர் ஒட்டினான்'னா கல்லால அடிச்சி விரட்டுங்க. இதை இளைஞர்கள் நீங்கதான் செய்யணும். மீறி சண்டைக்கு வந்தா என்கிட்ட வந்து சொல்லுங்க"

என்று சொல்ல அங்கிருந்த அத்தனை இளைஞர்களும் ஆர்வமாய் தலையாட்டினர்.

"இவன் இரண்டுநாள் முழுக்க இப்படியே கிடக்கட்டும். அப்புறம் ஸ்டேஷனுக்கு அனுப்புங்க" என்றவன்,

"பஷர், இரண்டுநாள் கழிச்சி வந்துப் பூட்டைக் கழட்டி விடுங்க"

என்றுவிட பஷர் தலையாட்டினான்.
 
Last edited:
திரும்ப வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, அவன் முகத்தில் கடுமை கண்டு,
"சார்"

என்று அழைத்தான் பஷர்.

"பாருங்க பஷர், சின்னப் பசங்களை கூட கெடுத்து வச்சிருக்கு இந்த சினிமா. சந்தோஷம்'னா சரக்கு, காதல் தோல்வின்னா சரக்கு, வேலை கிடைச்சா சரக்கு, போனா சரக்கு. மொத்தத்தில் குடிச்சா தப்பேயில்லைனு சொல்லிக் குடுக்குது"

பஷர் சிரித்தான்.

"அப்போதான சார் கவர்மென்ட்டோட சரக்கு நிறைய விக்கும்?

ஆம்! பின்னணியில் இருப்பது மிகப்பெரிய அரசியல். ஒரு சமுதாயத்தை சீரழிக்கிறோம் என்ற குறைந்தபட்ச யோசனை கூட இல்லாமல் வருமானத்தை மட்டுமே கணக்கில் வைத்து செய்யும் தரம்கெட்ட அரசியல். சுய ஒழுக்கம் உள்ளவனைக் கூட சீண்டிப் பார்க்கும் அரசியல்.

யோசனையாய் அவனிருக்க, பஷர் அவனையே பார்த்து வந்தவன்,

"சார், வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கலாம்"

என்றான். அவன் அமைதியாய் இருக்க, டிரைவரிடம் கண்காட்டினான் பஷர். அவனை சாப்பிட அழைத்து வரும்படடி,
மங்கை பஷரிடம் ஃபோனில் சொல்லியிருந்தார்.

வீடு வந்துவிட, உள்ளே சென்றவன், நேராய் சாப்பாட்டு மேஜை அருகே செல்ல, அங்கே நந்தகுமாரும், தினேஷும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் எதிரே போய் அமர, மங்கை அவனுக்கு இட்லியும், பொங்கலும் வைத்தார். அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் நந்தகுமார் கேட்டார்...

"எங்கப்பா போய்ட்டு வந்த?"

பதில் சொல்லவில்லை அவன். அதில் தினேஷிற்கு கோவம் வர அவன் இவனை முறைத்தான். தினேஷை தட்டிக்கொடுத்து அமைதிப்படுத்திய நந்தகுமார் தனக்குள் சிரித்துக் கொண்டார். கேட்கவேண்டிய இடத்தில இருந்துகிட்டு கேட்டா, தானா பதில் சொல்லுவான். சொல்லவும் வைப்பேன், என்று நினைத்தவருக்கு லேசாய் சிரிப்புவர அடக்கிக் கொண்டார்.

இப்போது மங்கை பேசினார்...

"எப்பவும் வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்க. நேத்து நைட் ஒருமணிக்கு வர. நான் சொன்னாலும் கேட்க மாட்ற. கல்யாணத்தைப் பண்ணி வச்சாலாவது இதெல்லாம் சரியாகும்'னு தோணுது. நீ சம்மதிச்சா உனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுவோம் தான?"

"இப்போதைக்கு வேண்டாம். வேணும்போது சொல்றேன்"

என்றான் மெதுவான குரலில் ஆனால் உறுதியாக.

அந்தக்குரல் எதிரேயிருந்த மூவரையும் கட்டிப்போட்டது. தினேஷ் நினைத்தான்..
"ப்பா.. என்ன குரல் டா சாமி. பேசினாலே இப்டி இருக்கே, இவன் பாடினா எப்படியிருக்கும்?

என்று. அவன் பாடுவான் தான். ஆனால் தனிமையில்.

நந்தகுமாரோ அந்தக் குரலில் எப்போதும் போல் மெய்மறந்து அமர்ந்திருந்தார். மங்கைக்கும் கூட பழைய நினைவு.

மூவரும் அவன் குரலில் மயங்குவது தெரியாமல் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நந்தகுமார் சொன்னார்...

"எங்கப் பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்'னு எங்களுக்கும் ஆசையிருக்கும்'ல?"

"அப்போ உங்கப் பையனுக்குப் பண்ணுங்க"

என்று தினேஷைக் கைக்காட்டி விட்டு அவன் எழ, அதனால் அவர் முகம் கொஞ்சம் சுருங்கியது கண்டு, தினேஷிற்குக் கோவம் வந்து அவனை மீண்டும் முறைக்க..

"என்னடா முறைக்குற?" என்று அவனை அதட்டினான்.

"முறைச்சா என்ன பண்ணுவ? உனக்கு நான் பயப்படணுமா? என்னையும் என்ன உன் ஸ்டேஷன்ல அடைச்சி வச்சிருக்க குற்றவாளின்னு நினைச்சியா?"

என்றான் தினேஷ்.

"இல்லையா பின்ன? உன் பேர் என்னடா?"

என்றான் மிரட்டலாக.

"தினேஷ்"

என்றான் முணங்கலாய்.

"அப்புறம் தினேஷ்கார்த்திக்'னு சொல்லிட்டுத் திரியுற? உன் பேர் கார்த்திக்'னா அப்போ என் பேர் என்னடா?"

தினேஷ் அவனையேப் பார்த்தான். உண்மையில் இவன் பெயர் தினேஷ் மட்டும் தான். ஆனால் சிறுவயதிலிருந்து.. "கார்த்திக், கார்த்திக்" என்று அம்மாவும், அப்பாவும் இவனையும் தான் அழைத்தார்கள். இந்த கார்த்திக்கிற்கு எங்கே அது தெரியப் போகிறது? பெரியவன் ஆனதும் தினேஷும் கூட அண்ணனின் பெயரைத் தன் பெயரோடு சந்தோசமாகத்தானே இணைத்துக் கொண்டான்? இப்போது இவனுடைய வீட்டிற்கு வந்த பிறகு மாற்றிக்கொள்ள வேண்டுமா என்ன?

தினேஷ், கார்த்திக்கை முறைக்க, கார்த்திக், தினேஷை முறைக்க.. இருவரும் முறைத்து நின்றதை உணராமல், நந்தகுமார் வேறு உலகில் இருந்தார். சொல்லப் போனால் கார்த்திக் பேசும் போதெல்லாம் அவர் இப்படித்தான் ஆகிவிடுகிறார்.

பின்னே!! கார்த்திக்கின் அந்தக் குரல்.. நந்தகுமாரின் ஆருயிர் நண்பன் வெற்றியின் குரல் அல்லவா!!

தாயிருந்தும்,
தந்தையிருந்தும்,
தம்பியிருந்தும்,
தங்கையிருந்தும்,
தனித்திருந்தான்..
காவலன் கார்த்திக்.

தொடரும்...
 
வாவ்🥳 ஒருவன் பந்தை வைத்து ஆடுபவன்😜, இன்னொருவன் குற்றவாளிகளைப் பந்தாடுபவன்😜

அருமையான ஆரம்பம் கொடி சிஸ்டர் 👏 👏 👏
 
வாவ்🥳 ஒருவன் பந்தை வைத்து ஆடுபவன்😜, இன்னொருவன் குற்றவாளிகளைப் பந்தாடுபவன்😜

அருமையான ஆரம்பம் கொடி சிஸ்டர் 👏 👏 👏
நன்றி சிஸ்டர் 💜
 
Back
Top