Narmadha Subramaniyam
Well-known member

அத்தியாயம் 19
அகிலனும் ஆதினியும் இரண்டாம் மாடியினை அடைந்த நேரம் இவ்வரிகள் காதினில் விழ, என்னாயிற்று என சுற்றத்தைப் பார்த்தனர்.
இரண்டாம் மாடியின் கடைசிப் படியில் இவர்கள் நின்றிருக்க, ஆதினியின் வீட்டு வாசலில் மலர் சில பெண்களுடன் கோபமாய் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
மாணிக்கம் சற்று கவலையாய் அவரை நோக்கியவாறு நின்றிருந்தார்.
சுற்றத்தார் அனைவரும் அவரவர்களின் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
"எல்லாருக்கும் கேட்கனும்னு தான் இங்க நின்னு பேசிட்டிருக்கேன்! என் புருஷன் செக்யூரிட்டிக்கிட்ட க்ளோஸா பேசினா இவங்களுக்கு என்ன வந்துச்சு? வாடகை வீட்டுல இருக்கிறவன்ட்ட பேச கூடாது.. வாட்ச்மேன்ட்ட பேச கூடாது.. நம்ம கௌரவம் குறைஞ்சிடுமாம்! எங்க எப்ப இருந்துமா இந்தக் கௌரவம்னு ஒன்னு வந்து உங்கட்ட ஒட்டிக்கிது? இந்த வாட்ச்மேன் இல்லைனா நைட் நீங்க நிம்மதியா தூங்க முடியுமா? நமக்காகத் தூங்காம முழிச்சு காவல் காக்கிறவர்கிட்ட பேசினா கௌரவக் குறைச்சல்னு எப்படி உங்களுக்குச் சொல்ல தோணுது? நம்ம எல்லாரும் வானத்துல இருந்தா குதிச்சோம்? எல்லாரும் அவங்கவங்க அப்பா அம்மாட்ட கேட்டு பாருங்க வாழ்க்கைல என்னிக்காவது ஒரு தடவை ஒரு நேரம் வாடகை வீட்டுல இருந்திருப்பாங்க! எல்லாரும் எப்பவுமே பணக்காரங்களாவே இருந்துடுறதில்லை! கௌரவங்கிறது குணத்துல வர்றது பணத்துல வர்றது இல்ல! நம்மளோட நல்ல குணத்தைப் பார்த்து நன்நடத்தை பார்த்து மக்கள் கொடுக்கிற மரியாதை தான் கௌரவம்! இனி யாராவது அறிவுரை சொல்றேன்ற பேர்ல வந்து என் புருஷனை பத்தி என்கிட்ட குறை சொன்னீங்கனா ஒரு வழி ஆக்கிடுவேன்! என் புருஷன் எல்லார்கிட்டயும் சரிசமமா தான் பேசுவாரு. உங்களுக்குப் பிடிக்கலைனா நீங்க அவர் கிட்ட பேசுறதை நிறுத்திக்கோங்க. இப்படிப் பொண்டாட்டி கிட்டயே வந்து புருஷனை பத்தி குறை சொல்லி குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க! உங்களை அனுப்பின உங்க புருஷங்களுக்கும் இது கேட்கட்டும்னு தான் இங்க நின்னு பேசுறேன். அப்படிக் கேட்கலைனா நீங்களே போய்ச் சொல்லிடுங்க"
மலர் பேசி முடிக்கவும் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.
அவரின் பேச்சிலேயே அங்கு என்ன நடந்திருக்கும் என யூகித்துப் புரிந்து கொண்டான் அகிலன்.
சில காலமாய் அந்தக் குடியிருப்பில் நிகழும் பிரச்சனை தான் இது. சொந்த வீட்டினர் மட்டுமே அசோசியேஷன் மீட்டிங்கிற்கு அழைக்கப் பட்டனர். செக்யூரிட்டியை இவர்களின் அடிமை ஆட்களைப் போல் நடத்தினர்.
இதற்கெல்லாம் மாணிக்கம் அவர்களோடு சண்டையிட, மாணிக்கத்திற்கு ஆதரவாய் ஒரு கும்பலும், அதற்கு எதிர்ப்பாய் ஒரு கும்பலும் உருவானது.
தற்போது அசோசியேஷன் பிரசிடெண்ட்டுக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், மலரின் மூலமாய் மாணிக்கத்தைத் தங்கள் வசம் வர வைக்கலாம் என எண்ணிய எதிரணி கும்பல் செய்த திட்டமே தற்போது அவர்களுக்கு ஆப்பாய் அமைந்திருக்கிறது.
மலரின் பேச்சில் அகிலனின் மனம் ஆரவாரமாய் ஆர்பரித்துத் துள்ளிக் குதிக்க, ஆதினியோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
இதை உணராத அகிலனோ, "ப்பாஆஆஆ என்னா பேச்சு! செம்ம! இன்னிக்கு காலைல நான் பார்த்த ஆன்ட்டிக்கும், இப்ப பார்க்கிற ஆன்ட்டிக்கும் என்னவொரு வேரியேஷன். செம்ம கெத்துப்பா உங்க அம்மா" மலரை பார்த்துக் கொண்டே ஆதினியிடம் கூற, அவளோ வலிந்து வரவழைக்கப்பட்ட தைரியத்துடன், ஆமெனக் கூறி சிரித்திருந்தாள்.
சட்டென ஆதினி பக்கம் திரும்பியவனோ அவளின் பயத்தைக் கண்டு நகைத்தவனாய், "அப்படித் தைரியசாலி அம்மாக்கு இப்படிப் பயந்தாங்கொள்ளி பொண்ணா" எனக் கிண்டல் செய்ய,
அதில் அவளுக்குக் கோபமேறி கண்கள் கலங்கவாரம்பிக்க, அதே சமயம் ஆதினியைப் பார்த்த மாணிக்கம், "மலர் உள்ள போ! பாப்பா வந்துட்டா பாரு" என மலரை உள்ளே அனுப்பியவராய் அகிலனை நோக்கி வர, அங்குச் சுற்றியிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.
அவளின் கண்களைக் கண்ட அகிலனோ பதறி, "அச்சோ விளையாட்டா தான்டா சொன்னேன்" எனக் கூறிக் கொண்டிருந்த சமயம் மாணிக்கம் அருகில் வரவும், அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை இயல்பாக்கிக் கொண்டவளை கண்டவனின் மனம் சற்றுச் சமன்பட்டது.
தன்னை அவளின் தந்தை ஏதும் கூறிவிடக் கூடாதெனத் தானே அவள் இவ்வாறு தன்னை இயல்பாய் காட்டி கொண்டாள் என்றொரு புரிதல் அவள் செயலில் இவனுக்குப் புரிபட மனம் மகிழ்ந்தது.
தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாலும் இவன் மேலுள்ள கோபத்தை முறைப்பில் காண்பித்துக் கொண்டு தானிருந்தாள் ஆதினி.
"என்ன அங்கிள் ஆன்டியை வெறுப்பேத்திட்டாங்களா?" என அகிலன் கேட்க,
"என்னை பத்தி அவகிட்ட போய்க் கம்பிளைண்ட் பண்ணா இப்படித் தான் அவ ரியாக்ட் பண்ணுவானு தெரியாம வந்து சிக்கிட்டாங்கப்பா" எனக் கூறி சத்தமாய் அவர் சிரிக்க, அகிலனும் ஆதினியுமே சிரித்திருந்தனர்.
அகிலன் சிரித்துக் கொண்டே மேலே நோக்க, அவனின் தாய் சத்யா உக்கிரமாய் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதைக் கண்டவனின் மனத்தில் கிலிப் பிடிக்க, "அங்கிள் நான் ரிப்ரெஷ் ஆகிட்டு வரேன்" எனக் கூறி இரண்டு படிக்கட்டுகளாய் தாவி தனது இல்லத்திற்குச் சென்றான்.
அந்நேரம் மதுரன் வரவும் அவனிடம் நடந்ததை உரைத்தாள் ஆதினி.
"அம்மாட்ட சொல்லுடா கண்ணா! இப்படிப் பேசினா அம்மாவைத் தானே எல்லாரும் தப்பாப் பேசுவாங்க! இன்னிக்கு எல்லார் வீட்டுலையும் அம்மாவைத் தான் அவலாக்கி பொறிச்சிட்டு இருப்பாங்க" வருத்தமாய் உரைத்தார் மாணிக்கம்.
"அம்மா பேசினது தப்பில்லையே! மத்தவங்க உங்களைக் குறையா பேசுறதை ஆமானு சொல்லி அம்மா கேட்டுட்டு இருந்தா தான்ப்பா தப்பு! பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க! அதுக்காக நாம அமைதியா போகக் கூடாது! பொறுத்து பொறுத்து பார்த்து இந்தப் பிரச்சனை முத்தின பிறகு, அம்மாகிட்டேயே நேரடியா உங்களைப் பத்தி குறை சொன்ன பிறகு தானே அம்மா பேசியிருக்காங்க! அதனால தப்பில்லைப்பா" அம்மாவுக்கு ஆதரவாய் பேசி அப்பாவைச் சமாதானம் செய்தான் மதுரன்.
"அப்படிச் சொல்லுடா என் தங்கக் கட்டி" கூறிக் கொண்டே முறுவலுடன் அனைவருக்குமாய் தேநீரை எடுத்து வந்து கொடுத்தார் மலர்.
அங்கு அகிலனின் வீட்டிலோ நிலைமை தலைகீழாக இருந்தது.
"நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் இருக்கேன்! ஓவரா தான் அந்தக் குடும்பத்தோட ஒட்டி உறவாடிட்டு இருக்க நீ! அப்பாவும் பையனும் வேற அடிக்கடி என்னமோ ரகசியம் பேசிக்கிறீங்க!" கோபமாய் அகிலனை முறைத்துக் கொண்டே சத்யா கேட்க,
"அம்மா முதல்ல நான் ரிப்ரெஷ் ஆகிட்டு வரேன்! அதுக்கப்புறம் டீ குடிச்சிட்டே பேசலாம்" அவரின் கோபம் மட்டுபடச் சற்று நேரத்திற்கு அந்த விஷயத்தை ஆறப்போட்டான்.
ரிப்ரெஷ் ஆகி வந்தவன் டீ குடித்துக் கொண்டே பேசினான்.
"அம்மா நான் அந்த மாணிக்கம் அங்கிள் பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்க விரும்புறேன்!" என்றான்.
"என்னது அந்த வீட்டு பொண்ணையா? இவ்ளோ நேரம் எல்லாரையும் திட்டிட்டு இருந்தாங்களே அவங்க பொண்ணையாடா கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுற? அம்மாவே இவ்ளோ சண்டைக்காரியா இருந்தா.... பொண்ணு எப்படி இருக்குமோ?" சத்யா குறையாய் கூறவும் கோபம் கொண்ட அகிலன்,
"அம்மா, அவங்க அங்க சண்டை போட்டதே நமக்காகத் தான். நீ என்னடானா அவங்களைக் குறை சொல்லிட்டு இருக்க?"
"நமக்காகவா.. என்னடா உளர்ற?"
"ஆமா மா.. வாடகை வீட்டுல இருக்கோம்னு இங்க எல்லாரும் நம்மளை ஒதுக்கி தானே வைக்கிறாங்க. இது வரைக்கும் யாராவது உன்கிட்ட வந்து நட்பா பேசிருப்பாங்களா?" அவன் கேட்க,
"இல்லடா பக்கத்து வீட்டுல நானே தேடி போய்ப் பேசியும் கண்டுக்கலைடா" என்றார் சத்யா.
"அதுக்குத் தான் ஆண்டி எல்லார்கிட்டயும் சண்டை போட்டதே" என்றவன்,
"அதுவுமில்லாம மலர் ஆண்டி பொண்ணு ஆதினி ஒன்னும் அவங்களை மாதிரி கிடையாது. ரொம்பச் சாஃப்ட் பயந்த சுபாவமுள்ள பொண்ணு. ஆதினியை நான் கட்டிக்க விரும்புறது அந்த வீட்டுல எல்லாருக்கும் தெரியும்! நம்ம வீட்டுல அப்பாக்கும் மீனுக்கும் தெரியும்" சற்று தயங்கியவாறே கூறினான்.
"அப்படியே போய்க் கல்யாணம் செஞ்சிக்க வேண்டியது தானே! இப்ப மட்டும் எதுக்கு என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க" மகன் தன்னிடம் மட்டுமாய் இதைக் கூறவில்லையே என்கின்ற ஆதங்கம் விளைவித்த கண்ணீருடன் கோபமாய் உரைத்தார் சத்யா.
அவரின் கண்ணீரில் மனம் வலிக்க,
"நீ தானே அப்பாகிட்ட சண்டை போடும் போதெல்லாம் சொல்லுவ! உங்களைக் கட்டிக்கிட்டதுல லவ் மேரேஜ்ல இருந்த மரியாதையே போய்டுச்சு! இந்த வீட்டுல இனி லவ் மேரேஜை நான் ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லுவலமா! அதான் ஆதினி வீட்டுல கேட்டு ஒத்துக்காம போய்ட்டா அப்படியே விட்டுடலாம்... இல்ல ஒத்துக்கிட்டா உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்" தன் பக்க நியாயத்தைக் கூறினான்.
"இப்ப நான் ஒத்துக்கலைனா என்ன செய்வ" கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் முகம் நோக்கி அவர் கேட்ட தருணம் அகிலனின் தந்தை தர்மன் உள்ளே நுழைந்தார்.
இக்கேள்விக்கு என்ன பதில் கூறுவது எனத் தடுமாறிய நேரம் வந்த தந்தையைக் காணவும் மனம் ஆசுவாசம் கொள்ள, அவன் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் இத்திருமணத்திற்காக இவனுக்கு உதவி புரிவதாய்த் தோன்றியது.
Last edited: