Narmadha Subramaniyam
Well-known member

ஆதினி அகிலன் திருமணம் வரையில் பதிவிட்டு விடலாம் என்று இரு அத்தியாயங்களையும் சேர்த்துப் பதிவிட்டிருக்கிறேன்.
வாசித்து மகிழுங்கள்.
அத்தியாயம் 20
"கிளம்பிட்டியா ஆது" வீட்டின் முகப்பறையில் அமர்ந்து ஆதினியின் அறை நோக்கி குரல் கொடுத்தான் மதுரன்.
"இதோ வந்துட்டேன்" எனக் கூறி லெகின்ஸ் டாப் அணிந்து, நீள முடியை பின்னலிட்டு வந்திருந்தாள் ஆதினி.
தாய் தந்தையரிடம் போய் வருவதாய் கூறி சென்றனர் இருவரும்.
மதுரனின் யமாஹா இரு சக்கர வாகனத்தில் ஏறிய ஆதினி, "டேய் அண்ணா வேற வண்டி வாங்க கூடாது! உன் வண்டில பின்னாடி உட்காரவே பயமா இருக்கு! நீ சடன் ப்ரேக் போட்டா நான் சடன்னா தூக்கி போட படுவேன். எவன் தான் இந்த வண்டியோட பின் சீட்டை டிசைன் செஞ்சானோ! அப்பா புல்லட் இருக்கே... அது வண்டி.. பின்னாடி உட்கார அவ்ளோ கம்ஃப்ர்ட்டபிளா இருக்கும்" வண்டியிலேறும் நேரமெல்லாம் கூறும் அதே வசனத்தை எழுத்து மாறாது அப்படியே அவள் கூறவும் வாய் விட்டு சிரித்தான் மதுரன்.
"சரி எங்க போய்ட்டு இருக்கோம்னு சொல்லு?" ஆதினி கேட்க,
"இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே பார்க்க தானே போற" என்றவன் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் வண்டியை நிறுத்தினான்.
இது அவர்கள் வழமையாய் செல்லும் ஐஸ்க்ரீம் பார்லர்.
"ஹய்யா! இங்க வர தான் இவ்ளோ பில்டப் கொடுத்தியா? நான் கூட ஐஸ்க்ரீம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு யோசிச்சிட்டு இருந்தேன். நீயே கூட்டிட்டு வந்துட்ட மை ஸ்வீட் அண்ணா" வண்டியிலிருந்து இறங்கியவள் அவன் கன்னம் கிள்ளிக் கொஞ்சினாள்.
அக்கடையினுள் நுழைந்து இவர்கள் வழமையாய் அமரும் இருக்கையை அவள் பார்க்க, அங்கே ஏற்கனவே ஒரு ஆடவன் அமர்ந்திருப்பதை கண்டவள், "அண்ணா! சீட் போச்சே" என மதுரனின் காதினுள் முனகினாள்.
"நமக்கு தெரிஞ்சவர் தான் அவரு" எனக் கூறி கொண்டே அங்கு அமர்ந்திருந்தவனின் முன்னே சென்று மதுரன் கை குலுக்க, அங்கே அகிலனை கண்டு திகைத்து விழித்தாள் ஆதினி.
அன்றைய நாளிற்குப் பிறகு அகிலனிடம் இவள் பேசாது இருந்ததால், அவன் மேல் இவளுக்கு கோபமென தவறாய் புரிந்து கொண்ட அகிலன், தனது மனத்தின் சங்கடத்தை நண்பனான மதுரனிடம் பகிர்ந்தான். அப்போது மதுரன் தனது தாய் உரைத்ததைக் கூறினான். இருப்பினும் ஆதினியிடம் சில முக்கியமான விஷயங்கள் நிச்சயத்திற்கு முன் பேச வேண்டுமென எண்ணிய அகிலன் மதுரனிடம் ஆதினியைச் சந்திக்க வேண்டுமென்ற தனது எண்ணத்தை கூறவும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தான் மதுரன்.
"டேய் அண்ணா! அம்மாக்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்! கிளம்பு நீ முதல்ல" அகிலனிடம் தன் பார்வையையும் செலுத்தாது மதுரனின் காதில் கூறிக் கொண்டே அவன் கை பற்றி அவள் இழுக்க,
"என் அறிவாளி தங்கச்சி! அம்மாக்கு தெரியாம உன்னை கூட்டிட்டு வருவேனா? நான் கூட இருக்கேன்றனால தான் ஒத்துக்கிட்டாங்க" மதுரன் விளக்கி கூறவும்,
சரியென தலை அசைத்து மதுரன் அருகில் அமர்ந்து கொண்டாள் ஆதினி.
அவளால் அகிலனின் முன்பு இயல்பாய் இருக்க முடியவில்லை. அவனின் முகத்தைக் காணவும் நாணம் தடுக்க, அவனிடம் பேசவும் வழியறியாது அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
அகிலன் அவளை மட்டுமே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, தனக்கு அழைப்பு வந்திருப்பதாய் கூறி கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் மதுரன்.
அவன் சென்றது இவளை இன்னும் பதட்டமடைய செய்ய, "என் கிட்ட என்ன பயம் கண்ணுமா" என்றான் அகிலன்.
சட்டென நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவளின் கண்கள், இத்தனை நாட்களாய் அவனிடம் கூறாமல், கூற முடியாமல் மனதில் அவனுக்காக தேக்கி வைத்திருந்த நேசத்தை சொல்லாமல் சொல்ல, அதை கண்டு கொண்ட அகிலனின் கண்களோ அவனின் காதலை எடுத்தியம்பியது.
அவளை இயல்பாக்கும் பொருட்டு அலுவல் நிகழ்வுகளைப் பேசலானான்.
அவள் அலுவல் செய்திகளை வெகு ஆர்வமாய் கூறி கொண்டிருக்க, ஆனால் அவனோ தன் காதினுள் ரீங்காரமிடும் இளையராஜா இசையுடன், அவளின் இதழசைவையும், பேசும் போது அவளின் முகம் காட்டும் பாவனைகளையும், அவள் கண்களின் அசைவுகளையும், பூரித்திருக்கும் கன்னங்களையுமென அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான். அவள் கூறிய விஷயங்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை.
தன்னவள், தனக்கானவள், தனக்காய் இப்பூமியில் பிறப்பெடுத்தவள் என்றெல்லாம் எண்ணங்கள் தோன்ற, பூரிப்பின் விளிம்பில் காதல் பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.
அந்நேரம் ஏனோ ஓர் ஆவல் தோன்ற, அவனது அலைபேசியிலிருந்து அவளுடைய எண்ணிற்கு அழைப்பு விடுக்க, மேஜை மீது வைத்திருந்த அவளது கைப்பேசி, "கண்ணை காட்டு போதும் நிழலாக கூட வாரேன்" என்ற பாட்டைப் பாடி அழைப்பைத் தெரிவித்த நொடி, பதட்டமாய் பட்டென கைப்பேசியை கையினில் எடுத்து அதை ஒலியற்ற நிலைக்கு மாற்றினாள் ஆதினி. ஆனால் அவள் கையினில் எடுத்த நேரத்திற்குள் அவனின் பெயரை என்னதாய் அவள் சேமித்து வைத்திருக்கிறாளென கண்டு கொண்டான் அவன்.
அவன் கண்டு கொண்டதில், 'அய்யோ அவன் தன்னை என்ன நினைப்பானோ' மனம் படபடக்க, முகத்தில் வெட்கம் பரவ தனது பார்வையை அவனது முகத்தினிலிருந்து திருப்பிக் கொண்டாள் ஆதினி.
ஆனால் அவனோ குழம்பிய நிலையில், அதென்ன SR எனக் கேட்டான்.
அவன் அவளது கைப்பேசிக்கு அழைத்த நொடி "SR" என்ற பெயரே கைப்பேசியில் ஒளிர்ந்தது.
அப்பொழுது தான், 'அட ஆமால ஷார்ட் ஃபாரம்ல தானே அந்த பெயரை சேவ் செஞ்சிருக்கோம்' ஞாபகம் வந்த நொடி, 'ச்சே இவர் கூட இருந்தா மூளை வேலை செய்றத நிறுத்திடுதே' தனக்குத் தானே பேசிக் கொண்டவள்,
"அதெல்லாம் சொல்ல முடியாது. நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க" அவனைக் குழப்பி விட்ட குதூகலத்தில் சிரித்துக் கொண்டே உரைத்தாள்.
அவளின் கண்களோ முழுவதுமாய் அவனை தான் முழுங்குவதாய் பார்த்து கொண்டிருந்தன.
அவனை எண்ணும் நேரமெல்லாம், இப்பெயரை மனத்தோடு கூறி கொஞ்சிக் கொள்ளும் நிகழ்வுகளெல்லாம் அவள் நினைவலையில் ஊர்வலம் போக, அவளையும் மீறி அவனை மட்டுமே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் ஆதினி.
அவனோ தனது பெயரை சுருக்கிப் பார்த்து, தமிழில் இருக்கின்ற செல்ல பெயரைலாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து என அந்த SRஐ கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்க,
அவன் செய்த அதே வேலையை இப்பொது அவள் செய்தாள். அவனின் கைப்பேசிக்கு இவள் அழைப்பு விடுத்தாள்.
"கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" என்ற அழைப்பொலியுடன் அவனின் கைப்பேசி அதிர, இப்போது அதிர்ந்து படபடத்து நாணங் கொள்வது அவனின் முறையாயிற்று.
அவனே தனது கைப்பேசியை எடுத்து அதில் மின்னிய பெயரை அவளிடம் காண்பிக்க, இல்லாள் என ஒளிர்ந்தது அங்கே.
அதை பார்த்தவளின் கண்களோ இன்பமாய் அதிர்ந்து விரிய, மனம் பூரிப்பில் நெகிழ, "என்ன நடந்தாலும் என்னை தான் கல்யாணம் செஞ்சிப்பீங்கன்றதுல முடிவா இருக்கீங்களா அகிலன்" எனக் கேட்டாள்.
அவள் கேள்வியில் அதிர்ந்தவன், "என்ன கண்ணுமா இப்படி கேட்டுட்ட? சும்மா டைம் பாஸுக்கு உன்கிட்ட பேசுற மாதிரியா தோணுது உனக்கு" சற்று கோபமாய் கேட்டான்.
"அய்யோ அப்படி இல்லங்க. நான் கேட்க வந்த அர்த்தம் வேற" தவறாய் புரிந்து கொண்டானே என்ற பதைபதைப்புடன் கூறியவள்,
"மனசுல ஆசையை வளர்த்த பிறகு இது நடக்காம போய்ட்டா கஷ்டமாயிடுமேனு தான் அம்மா உங்ககிட்ட பேச கூடாதுனு சொல்லியிருந்தாங்க. ஆனாலும்" என்றவள் மனம் படபடக்க சற்றாய் நிறுத்தினாள்.
"ஆனாலும்?" சுவாரசியமாய் அவள் முகத்தை பார்ததுக் கொண்டே அவன் கேட்டான்.
மேஜையில் கை வைத்திருந்தவள் தனது கையை நோக்கிக் கொண்டே, "ஆனாலும் என்னை மீறி உங்ககிட்ட ஓடிப் போகுற மனசைக் கட்டுபடுத்த முடியலை. எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கு. இது காதலானுலாம் தெரியலை. ஆனா உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்காக நீங்க செய்ற குட்டி குட்டி விஷயத்தையும் மனசு ரொம்ப ரசிக்குது" என உரைத்தவள் சற்றாய் நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தவளாய்,
"என்னை விட்டுட்டு போய்ட மாட்டீங்கல? நம்ம கல்யாணத்துல எந்த பிரச்சனை வந்தாலும் எனக்காக நின்னு போராடுவீங்களா? நீங்க இல்லமா வாழ முடியாதுனுலாம் இல்ல. ஆனா நீங்க வேணும். என் வாழ்க்கை முழுதும் வேணும்னு மனசு சொல்லுது" என்றவள் கூறிய நொடி,
இத்தனை நேரமாய் அவள் கூறிய சொற்களில் சந்தோஷத்தின் விளிம்பில் இருந்தவன், அவள் கடைசியாய் "நீங்க வேணும்" எனக் கூறியதை கேட்ட நொடி, "ஐ ப்ராமிஸ் யூ கண்ணுமா! இந்த ஜென்மத்துல என்னோட மனைவினா அது நீ மட்டும் தான்" என்றான்.
"என் அப்பா மாதிரி என்னை அன்பா கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பீங்களா? என் அண்ணா மாதிரி என்கிட்ட பாசமா விட்டு கொடுத்து போவீங்களா?" தனது ஆசைகளையெல்லாம் கேள்வியாய் கேட்டாள்.
"அந்தளவுக்கு நான் இருப்பேனானு எனக்குத் தெரியலை. ஆனா நமக்குள்ள சண்டை வந்தா மன்னிப்பு கேட்குற முதல் ஆளு நானா தான் இருப்பேன். என்னிக்குமே நமக்குள்ள ஈகோ வராம பார்த்துப்பேன். உன் மனசு கஷ்டபடாம பார்த்துப்பேன். இது எல்லாத்துக்கும் மேல" என உரைத்து அவளின் கைகளைப் பற்றியவன்,
"என் ஆயுசு முழுக்க உன்னை காதலிச்சிட்டே இருப்பேன்" அவளின் விழி நோக்கி உரைத்தான்.
அவன் கூறியவற்றில் பரசவத்தின் உச்சத்தில் இருந்தாலும் அவன் மீது பார்வைப் பதித்துக் கொண்டே அவனது கரத்திலிருந்து தனது கைகளை உருவிக் கொண்டாள்.
சுற்றம் மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் இமை சிமிட்டாது விழிகளுக்குள் விழுங்கி கொண்டு அமைதியாய் அந்நொடியினை சுகித்திருந்தனர்.
"என்னடா அகி பேச வேண்டியதுலாம் பேசியாச்சா" என கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தான் மதுரன்.