• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

முள்ளில் பூத்த மலரே 5 & 6

Narmadha Subramaniyam

Well-known member
வாசகத் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம் 🙏

மன்னிக்கவும் அவசர வேலை காரணமாக இரண்டு நாள்களாக பதிவிட முடியவில்லை.

இன்று அதற்கும் சேர்த்து இரண்டு அத்தியாயமாகப் பதிவிடுகிறேன்.


தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பேரன்புகளோடு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 🩷

1000257750.jpg


அத்தியாயம் 5

ஆதினியின் தந்தையிடம் பேச வேண்டுமென முடிவு செய்த பிறகு தான், தனது குடும்பத்துடன் அவளின் குடும்பத்தை ஒப்பிட்டு பார்த்திருந்தான் அகிலன்.

ஆதினியின் குடும்பம் தற்போது இருப்பது சொந்த வீடு. இன்னொரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்களெனக் கேள்விபட்டிருந்தான். மதுரனும் ஆதினியும் நன்றாகவே சம்பாதிக்கின்றனர். ஆதினியின் தந்தையும் மகிழுந்து வாங்கி விற்கும் தொழிலைச் செய்வதாய் அறிந்திருந்தான். ஆக எவ்வகையில் பார்த்தாலும் அவர்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என்று நன்றாய்ப் புரிந்தது அகிலனுக்கு.

அகிலனின் குடும்பத்தில் அவன் ஒருவனே சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். சிறு தொழில் செய்து கொண்டிருந்த அவனின் தந்தை உடல்நிலை காரணமாய் வேலையை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.

அவனின் தங்கை மீனாள் ஆடை வடிவமைப்பாளர் படிப்புப் படித்து விட்டு ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மீனாளும் அகிலனும் இணைந்து அவர்களின் கனவான சொந்த இல்லத்தை வடிவமைத்துக் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மீனாளின் திருமணம் நிச்சயிக்கப்பட, அந்த வேலை அப்படியே நின்று விட்டது. மீனாளின் திருமணக் கடன்களை அடைத்து, தற்பொழுது தான் சிறுக சிறுக சேர்த்து அவ்வீட்டு வேலையை மீண்டுமாய்த் தொடங்கி இருக்கிறான் அகிலன். எவ்வகையில் பார்த்தாலும் அகிலனின் குடும்பம் ஆதினியின் குடும்பத்தை விடப் பொருளாதாரத்தில் குறைந்த குடும்பம். இதுவே பெரும் பயத்தை உருவாக்கியது அகிலனுக்கு.

"என் பொண்ணைத் திருமணம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு" என்று அவர் கேட்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் வந்தது அவனுக்கு.

வீட்டு வேலையேனும் சற்று முடித்துவிட்டு இதைப் பற்றி ஆதினியின் தந்தையிடம் பேசலாமென எண்ணினான்.

இவ்வாறாய் இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் வரவேற்பறையில் மத்தியமாய் ஆதினியின் அன்னை, தந்தை மற்றும் மதுரன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"ஆதுமா எவ்வளவு நேரமாமா டீ போடுவ?" வரவேற்பறையிலிருந்து குரல் கொடுத்தான் மதுரன்.

"இதோ வந்துட்டேண்ணா" என்றவள் கையில் ஒரு பெரிய தட்டுடன் வந்து நின்றாள். நால்வருக்குமாய் இஞ்சி டீயும் பக்கோடாவும் தயார் செய்திருந்தவள், அவர்களுக்குப் பரிமாறிவிட்டு அவளும் உடன் அமர்ந்தாள்.

"சூப்பரா இருக்குமா டீயும் பக்கோடாவும்" ருசித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஆதினியின் தந்தை.

"ஆது, மேரேஜ்க்கு உனக்கு எந்த மாதிரி பையன் பார்க்கனும்? உனக்கு மனசுல எதுவும் ஆசை கனவு இருக்கா?" மதுரன் கேட்டதும், திருதிருவென விழித்தாள் ஆதினி.

இருபத்தைந்து வயதான போதிலும் இவளுக்கென்று தனிப்பட்ட ஆசைகளென இதுவரை எதுவும் இருந்ததில்லை. அவளின் ஆசைகள் கனவுகள் அனைத்தும் அந்தக் குடும்பத்திலுள்ள நால்வரைச் சுற்றி மட்டுமே சுழன்றிருந்தன.

இதை மற்றைய மூவரும் அறிந்திருந்த போதும், ஏன் தனது அண்ணன் இவ்வாறு கேட்கிறானென எண்ணியே அவ்வாறு விழித்தாள் ஆதினி.

"ஏன் அண்ணா திடீர்னு இப்படி ஒரு கேள்வி? நான் ஏற்கனவே சொன்னது தான்! உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா அது போதும் எனக்கு" என்றவள்,

"ஆனா ஒரு ஆசை இருக்கு! எந்த மாதிரி வாழ்க்கை வாழனும்னு ஒரு ஆசை இருக்குண்ணா"

"நம்ம அப்பா அம்மா போல ஆதர்ச தம்பதிகளாய் வாழனும்! அப்பா அம்மாவை அன்பா பாசமா காதலா பார்த்துக்கிறது மாதிரி என்னையும் அன்பா காதலா பாதுக்காப்பாய் பார்த்துக்கனும்! அப்பா அம்மாவோட காதலான வாழ்வு போல நம்மளோட வாழ்வும் அமையனும். நீ உன் பொண்டாட்டி, நான் என் புருஷன்… அப்படியே நம்ம குழந்தைகள், அவங்களுக்குள்ள வர்ற பாசம்னு காலங்காலமா தொன்று தொட்டு தொடர்ந்து வரனும்" கண்களில் கனவுகள் மின்ன ஆசை ஆசையாய் ஆதினி கூறிக் கொண்டிருக்க, அவளின் தலையை ஆதூரமாய் வருடினான் மதுரன்.

அவளின் பேச்சைக் கேட்டு அவளின் தாய் மென்மையாய்ச் சிரித்திருக்க, வாய்விட்டுச் சிரித்த அவளின் தந்தை, "என் செல்லம் இவ்ளோ பேசுற அளவுக்கு வளர்ந்துட்டாளானு தோணுது" அவள் கன்னத்தைக் கிள்ளிச் செல்லம் கொஞ்சினார்.

அச்சமயம் அவ்வீட்டின் அழைப்பொலியின் ஓசைக் கேட்க, மதுரன் சென்று கதவைத் திறந்தான்.

"வாங்க அகிலன்" மதுரன் வாசலில் நின்றிருந்த அகிலனைப் பார்த்து மென்னகையுடன் உள்ளே அழைக்க, அனைவருக்கும் வணக்கம் கூறி வந்தமர்ந்தான் அகிலன்.

"நீங்க என்னை தேடி வீட்டிக்கு வந்ததா அப்பா சொன்னாங்க!" மதுரனிடம் அகிலன் கூற,

"ஆமா அகிலன்! ஒரு விஷயம் பேச வந்தேன்" என்ற மதுரன், "ஆதுமா அகிலனுக்கு டீ போட்டு எடுத்துட்டு வா" எனக் கூறி அவளை அனுப்பி விட்டு, அகிலனிடம் பக்கோடாவைக் கொடுத்து, "ஆது செஞ்ச பக்கோடா. நல்லா இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க" எனக் கொடுத்தான்.

ஆதினி கைப்பக்குவம் அறிந்து கொள்ளவே ஆசையாய் எடுத்து உண்டவன், 'வாவ் செம்ம டேஸ்ட்டா தான் சமைக்கிறா! ஹப்பாடா தப்பிச்சோம்! சாப்பாட்டுக்குப் பிரச்சனை இருக்காது' மனத்திற்குள்ளாக எண்ணிக் கொண்டான் அகிலன்.

"நம்ம அப்பார்ட்மெண்ட்ல நாளைக்கு ஒரு இன்ட்ரொடக்ஷன் ஃபங்ஷன் வைக்கலாம்னு ப்ளான். எல்லா வீட்டுக்காரங்கக் கிட்டயும் நாளைக்குப் ஃபங்ஷன்ல கலந்துக்கச் சொல்லி இன்வைட் செஞ்சாச்சு. நம்ம இரண்டு பேரும் தான் ஹோஸ்ட் பண்றோம் ஓகேவா" என்று மதுரன் கேட்கவும்,
"ஓ சூப்பர் செஞ்சிடலாம்" ஆர்வமாய்ப் பதிலுரைத்தான் அகிலன்.

ஆதினி தேநீர்க் கோப்பையினை அகிலனிடம் கொடுக்க, பெண் பார்க்கும் நேரம் அவள் தன் கையில் தரும் தேநீர்க் கோப்பையாய் அவனின் மனம் அதைப் பாவிக்க, லேசான வெட்கத்துடன் கூடிய புன்சிரிப்புடன் அவளிடம் இருந்து வாங்கியவன் ரசித்து ருசித்துக் குடித்தான்.

அகிலனின் முகப் பாவனையில் கண்டு கொண்ட மதுரன், "அகிலன், நம்ம ஆதினிக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம்! உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லுங்களேன்" வேண்டுமென்றே கேட்டான்.

மதுரனின் இவ்வார்த்தையில், அருந்திய தேநீர் புரைக்கேற இருமினான் அகிலன்.

'அய்யோ நம்ம வீடு கட்டுறதுக்குள்ளே இந்தப் பொண்ணுக்கு கல்யாணமே செஞ்சி வச்சிடுவாங்க போலயே' அகிலனின் மைண்ட் வாய்ஸில் கதறிக் கொண்டிருக்க,

"என்ன அகிலன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?" அவனை வம்பிழுக்கவென்றே மீண்டுமாய் கேட்டான் மதுரன்.

"அப்பா அவசரமா வரச் சொன்னாங்க! நான் அப்புறமா வந்து பேசுறேன்" எனக் கூறி அனைவரிடமும் விடைப்பெற்று சென்று விட்டான் அகிலன்.

இவர்கள் இருவரின் பேச்சிலும் பார்வையிலும் பாவனையிலும் ஆதினியின் தாய்க்கு அகிலனின் மனம் நன்றாய் புரிந்து போனது.

ஆதினிக்கு ஐம்பது சதவீதம் இப்படி இருக்குமோவென்ற சந்தேகம் வந்திருந்தது. ஆயினும் வீட்டினர் யாரிடமும் அதைப் பற்றி அவள் கேட்கவில்லை. அதைப் பெரிதாய் அவள் கண்டு கொள்ளவுமில்லை. ஆனால் மறுநாள் அவளுக்கு அதை நூறு சதவீதம் உண்மையென ஊர்ஜிதம் செய்தான் அகிலன்.

அன்றைய இரவு அகிலனுக்கு மனத்தின் குழப்பத்தினால் உறங்கா இரவானது.

படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன், 'ஆதினிக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே! அவளை வேறொருத்தர் பொண்டாட்டியா பார்க்க முடியுமா என்னால' நினைக்கும் போதே நெஞ்சு பாரமானது போல் உணர்ந்தவன், சட்டென எழுந்து அமர்ந்து விட்டான்.

'ம்ப்ச், இருபத்தேழு வயசுக்கு மேல இந்தக் காதல் வரலைனு யாரு அழுதா? இப்ப இது ஒன் சைட் லவ் ஆச்சுனா லவ் ஃபெய்லியர்னால எப்படியும் ஒன் இயர்க்கு மேரேஜ் பத்தியே மனசு யோசிக்காதே! இவளை மறந்துட்டு வாழ முடியும் தான்! ஆனா அதுக்கு நாள் ஆகுமே! மனசு வலிச்சுப் பைத்தியமா கொஞ்ச நாள் சுத்த வைக்குமே! இதெல்லாம் தாண்டி வரனுமே' மனம் வலிக்க வலிக்கத் தான் இத்தனையும் யோசித்துக் கொண்டிருந்தான் அகிலன்.

என்ன தான் நாம் ஆசைப்பட்டாலும், ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும் பட்சத்தில் தனது வாழ்வின் நிலை என்னவாகுமென்ற வருங்காலத்திற்கான சிந்தனையும் திட்டமிடலும் தான், வாழ்வில் எத்தகைய தோல்வியைச் சந்தித்த பின்னும், பெரும் ஏமாற்றத்தை சந்தித்த பின்னும், வாழ்வில் தொடர்ந்து பயணிக்கப் பேருதவியாய் இருக்கும்.

'ஏன் அகி நெகடிவ்வாவே யோசிக்கிற' அவனின் மூளை இடித்துரைக்க,

'ஆமா ஏன் முயற்சியே செய்யாம நெகடிவ்வா யோசிச்சிட்டு இருக்கோம்! கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிட்டு போய் அவங்க அப்பாகிட்ட முதல்ல பேசுவோம். என்ன தான் நடக்குதுனு பார்த்துடலாம்' மனத்திற்குள் எண்ணிக் கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.


மறுநாள் பரபரப்பாய் விடிந்தது அந்தக் காலை. அக்குடியிருப்பு வளாகத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தமையால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர் தன்னார்வ இளையோர்கள்.
 
விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பினை மதுரனே வைத்திருந்தான்.‌ யார் யார் என்ன செய்யப் பேகிறார்கள் என அவனே அறிந்து வைத்திருந்தான். அகிலனும் மதுரனும் எவ்வாறு இந்நிகழ்வினைச் சலிப்பில்லாமல் கொண்டு செல்வது எனத் திட்டமிட்டு ஒத்திகைப் பார்த்திருந்தனர்.

வளாகத்தினுள்ளே இருந்த பூங்காவில் சிறிதாய் மேடை அமைத்து நாற்காலிகள், ஒலி ஒளி அமைத்து என மாலை வேளையில் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

நிகழ்ச்சி துவங்கிய பிறகு அவ்வளாகத்தினுள் தங்கியிருந்த குடியிருப்போர் அனைவரும் ஒவ்வொருவராய் நிகழ்ச்சித் திடலுக்கு வர ஆரம்பித்தனர்.

வான் நீல வண்ண காக்ரா சோலி ஆடையில் தேவதையாய் வந்தாள் ஆதினி. அவளைக் கண்ட நொடி இமைச் சிமிட்டாது அவளையே பார்த்திருந்தான் அகிலன். அவனின் நிலை அறியாது, நேராய் அவனிடமே வந்த ஆதினி, "அகிலன், அண்ணா எங்க?" எனக் கேட்க,

திக்பிரம்மையிலிருந்து விடுபட்டவன் போல் தலையை உலுக்கியவன், "அந்த ரூம்குள்ள சவுண்ட் அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க" என்றான்.

மியூசிக் ப்ளேயர் செட்டை குனிந்து நோண்டிக் கொண்டிருந்த மதுரன் அருகே சென்றவள், "அண்ணா இங்க பாரு" என அவனின் முதுகில் தட்டினாள்.

"இரு ஆதுமா! வரேன்" அவனின் முழுக் கவனமும் அந்த ப்ளேயர் செட்டிலேயே இருக்க, "டேய் அண்ணா! இப்ப திரும்புறியா இல்லையா" அவனின் சட்டையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

"முடியாது போடி!" அவளுக்கு டி போடுவது பிடிக்காது எனத் தெரிந்து கொண்டே அவன் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க,

"என்னது டியாஆஆஆ" உக்கிரமானவள், அவன் முகமருகில் சென்று கன்னத்தைக் கடித்து வைக்க, ஆஆஆ வென அலறினான் மதுரன்.

இவளின் செயலை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்த அகிலன், அவள் கடித்ததும் வாய் விட்டு சிரிக்க, அகிலனின் சிரிப்பு சத்ததில் சுற்றிப் பார்த்தவள், 'அய்யோ யாருமில்லைனு நினைச்சில இவன் கிட்ட விளையாண்டுகிட்டு இருந்தேன்' அகிலனை பார்த்து அசடு வழிந்தாள்.

மதுரன் அகிலனைப் பார்த்து சிரித்துவிட்டு, "எதுக்கு ராட்சசி கூப்பிட்ட"? ஆதுவின் கன்னத்தை வலிக்கக் கிள்ளியவாறு கேட்டான்.

"போ சொல்ல மாட்டேன்" என முகத்தைத் திருப்பிக் கொள்ள,

"ஹே ஆதுமா! நைஸ் டிரஸ்டா! இதுல ரொம்ப அழகா இருக்க நீ! இதைக் காமிக்கத் தானே கூப்பிட்ட" அவளின் உடையை மேலும் கீழுமாய்ப் பார்த்து மதுரன் கேட்க,

பளீரென முகத்தில் புன்னகையைச் சிந்தியவள், "ஆமாண்ணா! நல்லாயிருக்காண்ணா" தனது பாவாடையை இரு பக்கமுமாய்ப் பிடித்து இப்படி அப்படி என ஆட்டிக் கொண்டு கேட்டாள்.

"ரொம்ப அழகா இருக்குடா! என் குட்டி பாப்பாவுக்கு எந்த டிரஸ் போட்டாலும் அழகா தான் இருக்கும்!" அவளின் கன்னம் தடவி கொஞ்சியவன், "போ போய் உட்கார்! நாங்க ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ண போறோம்" என அவளை அனுப்பி வைத்தான்.

"தங்கச்சி மேல ரொம்பப் பாசமோ?" கேட்டான் அகிலன்.

புன்னகைத்த மதுரன், "எந்த அண்ணனுக்குத் தான் தங்கச்சி மேல பாசம் இருக்காது! எனக்கு இவ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்! சின்ன வயசுலேயே இவ என் பொறுப்பு, நான் தான் இவளை பாதுக்காப்பா பாத்துக்கனும்னு சொன்னதால, ஸ்கூல்க்குக் கை பிடிச்சி கூட்டிட்டு போன நாளுலருந்து என் கண்ணுக்குள்ளயே வச்சிருக்கேன்" அவன் உணர்வாய் கூற,

"எனக்கு என் தங்கச்சி ஞாபகம் வருது மது! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட் மாதிரி. எல்லாமே அவகிட்ட தான் ஷேர் செஞ்சிப்பேன். அவ மேரேஜ் ஆகி போகும் போது தான் உண்மையான பிரிவின் வலியை அனுபவிச்சேன்" அகிலன் தன் தங்கையின் நினைவில் பாசமாய்ப் பேச,

"தங்கையோட கல்யாணத்துல அவளோட பிரிவை எண்ணி அழாத அண்ணன்கள் ரொம்பவே கம்மி அகி" சிரித்துக் கொண்டே உரைத்தவன், "சரி வாங்க அகி, நம்ம வேலையை ஆரம்பிப்போம்" அவர்களின் தொகுப்பாளர் பணியைத் தொடங்கினர்.

கடவுள் வாழ்த்துப் பாடி ஆரம்பிக்கப்பட்ட அந்நிகழ்வில், சிறுவர்கள் கூடி சில பாடல்களுக்கு ஆடினர். சிறுவ சிறுமியர்கள் பாடினர். பெரியோர்களும் தங்களிடமிருந்த திறமைகளை ஆடலும் பாடலுமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இடை இடையே ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வந்து தங்களது குடும்பத்தினை அறிமுகம் செய்து கொண்டனர். இவ்வாறாய் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில்,

அடுத்ததாய் பாட வருபவர் ஆதினி என மதுரன் அறிவித்ததும், 'ஹை ஆதினி பாட போறாளா' ஆச்சரியமும் ஆர்வமும் போட்டிப் போட ஆவலாய் ஆதினியைப் பார்த்தான் அகிலன்.

மேடை ஏறி கையில் மைக்கை வாங்கிய ஆதினி தனது தந்தையையும் அண்ணனையுமே தான் பார்த்தாள், இருவரும் கை உயர்த்தி வாழ்த்துத் தெரிவிக்கப் பாட ஆரம்பித்தாள்.

உன்ன விட…. இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை


இனிமையாய் அவளின் குரல் காற்றில் கலந்து அகிலனின் செவியைத் தீண்டியிருக்க, சுற்றத்தினர் அனைவரும் மங்கலாய் அவனது கண்ணிலிருந்து மறைந்து, அவளும் அவனும் மட்டுமே அங்கே இருப்பதாய் தோன்ற அவளை மட்டுமே பார்த்திருந்தான் அகிலன்.

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

இந்த வரியை அவள் பாடி முடித்த நொடி,

நூறு சென்மம் நமக்குப் போதுமா வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்தச் சாமிய அந்தச் சாமிய


அகிலன் அவனையும் மீறி மைக்கில் இவ்வரிகளைப் பாடியிருந்தான்.

அகிலனின் குரலில் அனைவரும் அவனைத் திரும்பி பார்க்க, இவள் அவனைப் பார்த்து மென்மையாய் சிரித்து,

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் எனப் பாடி, அடுத்த வரியைப் பாடும் படி கண்ணசைத்தாள்.

ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

அவன் பாடி முடிக்க, அடுத்த வரியை தன்னுடன் இணைந்து பாடுமாறு ஆதினி கை அசைக்க,

இருவருமாய்ச் சேர்ந்து,

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
என்னை விட …
அவள் பாட,
உன்னை விட … அவன் முடித்திருந்தான்.

அனைவரின் கை தட்டும் ஒலியில் குடியிருப்பே அதிர்ந்தது.

'என்னடா நடக்குது இங்க? சோலோ சாங்க பாடிட்டு இருந்தவளை டூயட் சாங்கா மாத்தி பாட வச்சிருக்க' என எண்ணியவனாய் அகிலனைப் பார்த்து மதுரன் முறைக்க,

'அய்யோ எப்படி மதுவைச் சமாளிக்கிறது?' அகிலனின் மனத்தில் கிலி உண்டானது.

ஆதினியின் தாயாருக்கு இந்நிகழ்வினால் பெருங்கோபம் வந்தது. அவர் அவ்விடத்தை விட்டு அகன்று செல்ல, அவரின் பின்னேயே சென்றார் அவளின் தந்தை.

அகிலன் தன்னை விரும்புவது ஆதினிக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி நூறு சதவீதம் நிரூபனமானது. ஆனால் தாயின் கோபத்தைப் போக்குவது தான் தற்போது முக்கியமென எண்ணியவள், என்ன சொல்லிச் சமாளிப்பதென அறியாது குழம்பிக் கொண்டே அவளின் தாய் தந்தையர் பின்னேயே வீட்டை நோக்கிச் செ
ன்றாள்.

இது ஏதும் அறியாது மதுரன் அகிலனுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தான்.
 
அத்தியாயம் 6

வாரயிறுதி நாளை தனது பெற்றோர்களுடன் ஊரில் கழித்து விட்டு, வழமை போல் திங்கட்கிழமை காலை ஆறரை மணியளவில் வீட்டை வந்தடைந்தாள் பொன்மலர்.

மலர் வீட்டின் கதவைத் தட்டியதும், கதவை வந்து திறந்த ஆயாவிடம், "பிள்ளைங்க எப்படி இருக்காங்க ஆயா? இரண்டு நாளா எதுவும் சேட்டைச் செய்யலையே?" கேட்டுக் கொண்டே கையிலிருந்த பையை அங்கிருந்த மெத்தை மீது வைத்து விட்டு, படுக்கையறைச் சென்று பிள்ளைகளைப் பார்த்தவள், கண்ணம்மாவின் காயம் பார்த்துப் பதறிப் போனாள்.

"ஆயா" எனத் தன்னை மீறிக் கத்தியவள், பின் அவர்களின் தூக்கம் கலைந்துவிடுமெனத் தனது குரலைத் தாழ்த்தி, இவளின் சத்தத்தில் அசைந்த கண்ணம்மாவையும் கண்ணாவையும் மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டே, "பாப்பாக்கு என்னாச்சு ஆயா? ஏன் இவ்ளோ பெரிய பேண்ட்எய்ட் போட்டுறுக்காங்க" கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்க, நடந்ததைக் கூறினார் ஆயா.

இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஓர் ஆணைத் துணைக்கு அழைத்து மருத்துவமனைக்குச் சென்றதாய் தான் ஆயா கூறினார்.

"பாப்பாக்கு ரொம்ப வலிச்சிருக்குமே! என்னை ரொம்பத் தேடிருப்பாளே! சும்மாவே அம்மா அம்மானு பின்னாடியே சுத்துமே என் செல்லம்" அவளின் வலியை எண்ணி அழுதிருந்தாள்.

யாருக்காகவும் எதற்காகவும் கலங்காத பொன்மலரின் கண்களில் ஒரு துளி நீர் வழிந்தாலும், அது அவளின் பிள்ளைகளுக்காய் மட்டுமாய்த் தான் இருக்கும். இரும்பு மனுஷியையும் உருக்கிக் கரைக்கும் விந்தை தாய்மைக்கு மட்டுமே உரியது.

இவர்களின் பேச்சுச் சத்தத்தில் விழித்த கண்ணம்மா, மலரைக் கண்ட உற்சாகத்தில், "ம்மாஆஆஆ" என அழைத்து எழுந்து அவளின் கழுத்தினைக் கட்டிக் கொண்டாள்.

அவளை அணைத்து முதுகை ஆதூரமாய் மலர் தடவிக் கொண்டிருந்த சமயம் வெளியிலிருந்து வந்த கண்ணம்மா வென்ற அழைப்பில், யாரென்று பார்க்க ஆயா செல்ல, கண்ணம்மாவைத் தூக்கி கொண்டு சென்றாள் பொன்மலர்.

அங்கே மாணிக்கத்தைப் பார்க்கவும், 'இந்தப் பஞ்சாயத்துக்காரர் இங்க எதுக்கு வந்திருக்காரு?' என மலர் நினைக்க,

'இந்தச் சண்டி ராணி மிஸ் இங்க என்ன பண்றாங்க?' திகைத்து விழித்தவனாய் மலரையும் கண்ணம்மாவையும் மாறி மாறிப் பார்த்திருந்தான் மாணிக்கம்.

மாணிக்கத்தைக் கண்டதும், மலர் கையிலிருந்து இறங்கி, "மாணிக்கம்" என அழைத்துத் துள்ளி ஓடி அவனை நாடி கண்ணம்மா செல்ல, அவளைக் கைகளில் தூக்கியிருந்தான் மாணிக்கம்.

இமை கொட்டாமல் இதனைப் பார்த்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானவள், "உங்களுக்கு எப்படிப் பாப்பாவை தெரியும்?" எனக் கேட்டாள்.

அவளது மூளையோ, 'ஓ இவர் பேரு மாணிக்கமா?' என அதையும் சேர்த்துக் குறித்துக் கொண்டது.

மாணிக்கம் தான் மருத்துவமனை செல்ல உதவி செய்தது என மலரிடம் கூறிய ஆயா, மாணிக்கத்திடம் மலரை அவர்களின் அம்மா என அறிமுகம் செய்து வைத்தார்.

'என்னது அம்மாவா' வியப்பின் விளிம்பிற்கே சென்றவன்,

"உங்களுக்குக் கல்யாணமாகி குழந்தைங்களே இருக்கா?" ஆச்சரியத்தில் வாய் திறந்தே கேட்டான்.

அவனின் கேள்வியில் வாய்க்குள்ளேயே சிரித்தவள், "நான் பெத்து வளர்த்த என் சொந்த பசங்க ரெண்டு பேரும்" என்றாள்.

"தாடைல வலி இருக்கா பாப்பா?" கண்ணம்மாவின் கன்னம் தடவி அவன் கேட்க, "இல்ல மாணிக்கம்" அவள் கூற,

"பாப்பா என்னது இது? பெரியவங்களைப் பேரு சொல்லி கூப்பிடுறது" கண்டித்தாள் மலர்.

"அட இருக்கட்டும் மேடம்! ஆயா என்னை அப்படிக் கூப்பிடுறது பார்த்து பிள்ளைகளும் அப்படிக் கூப்பிடுறாங்க" என்று சொன்னவன்,

"என்ன இருந்தாலும் குழந்தைகளைத் தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு உங்க வேலை தான் முக்கியம்னு ஊருக்குப் போறதெல்லாம் சரி இல்லைங்க" மனத்தில் பட்டதை வெளிப்படையாய் கூறியிருந்தான்.

அவனின் கூற்றில் தீயாய் அவனை அவள் முறைத்திருந்த சமயம், அவளின் பார்வை அவனையும் தாண்டி, மாணிக்கத்தின் பின்னால் வீட்டினுள் நுழைந்தவனிடம் படிந்தது.

அவளின் பார்வை போகும் திசை நோக்கி திரும்பிய மாணிக்கம், வீட்டினுள் நுழைந்தவனையும் மலரையும் மாறி மாறிப் பார்க்க, "பாப்பாவோட அப்பா" என்றாள்.

உள்ளே நுழைந்த கண்ணம்மாவின் தந்தை ரவியின் முகம் இறுக்கமாய் இருந்தது.

இவன் யாரு என்பது போல் மாணிக்கத்தை அவன் பார்க்க, ஆயா நடந்ததைக் கூறினார்.
 
"ஓ தேங்க் யூ சார்" இறுக்கமான முகத்துடனேயே மாணிக்கத்திடம் உரைத்தவன், அங்கு நிற்கவும் பொறுமையற்று, "எனக்கு அவசரமா ஆபிஸ்க்குக் கிளம்பனும்" எனக் கூறி மற்றொரு தனிப் படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனின் செயலை விசித்திரமாய்ப் பார்த்த மாணிக்கம், "கண்ணம்மா சாப்பிட்டு சமத்தா ரெஸ்ட் எடுக்கனும்! நான் வரேன்ங்க" என விடைபெற்று சென்று விட்டான்.

அதன் பின் ஒரு மணி நேரத்தில் ரவி கிளம்பி வெளியில் சென்று விட்டான்.

மலர் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனும் குழந்தைகள் பற்றி ஒரு வார்த்தை நலன் விசாரிக்கவில்லை. அவர்களிடமும் பேசவில்லை.

தனது வீட்டிற்குச் சென்ற மாணிக்கத்திற்கு ரவியின் மீது கோபம் கோபமாய் வந்தது. நிறைய குழப்பமாகவும் இருந்தது.

கண்ணம்மாவை கைகளில் தானே வைத்திருந்தான் மாணிக்கம். ரவி வந்ததும், கண்ணம்மா மாணிக்கத்தை இன்னும் நெருங்கிக் கட்டிக் கொண்டு முதுகில் அவனது சட்டையைக் கொத்தாய்ப் பற்றி இருந்தாள்.

ரவியைப் பார்த்ததும் கண்ணம்மாவின் கண்களில் மிரட்சியைக் கண்டான் மாணிக்கம். பயந்து தான் அவள் அவ்வாறு தன்னிடம் ஒட்டிக் கொண்டாள் என நன்றாகவே புரிந்தது மாணிக்கத்திற்கு.

'ஆனா ஏன் பயப்படுறா? அந்தாளும் இந்தப் பொண்ணுக்கு என்னாச்சுனு கூடப் பார்க்கலை! என்ன அப்பன் இவனெல்லாம்' மனத்திற்குள் பல கேள்விகள் எழ, வழமைப்போல் 'நமக்கெதுக்கு மத்தவங்க வீட்டுக் கதை' என்று மனத்தில் எண்ணிக் கொண்டு தனது ஆட்டோ சவாரி வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

அன்று பொன்மலர் விடுப்பு எடுத்துக் கொண்டு கண்ணம்மா உடனேயே இருந்தாள். கண்ணம்மா கண்ணா இருவரையும் அன்றைக்குப் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஐந்து வயதான கண்ணம்மாவும், எட்டு வயதான கண்ணாவும் அவர்கள் வயதிற்கேற்ற வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர். ஆனால் தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவர்களை அவள் படிக்க வைக்கவில்லை.

காலை தனது இரு சக்கர வாகனத்தில் பிள்ளைகளைப் பள்ளியில் இறக்கி விட்டு, தனது பள்ளிக்குச் சென்றிடுவாள் மலர். மாலை வேளையில் ஆயா ஆட்டோவில் சென்று அவர்களை அழைத்து வந்து தேநீரும் திண்பண்டங்களும் செய்து வழங்குவார். அச்சமயம் மலரும் வந்து இவர்களுடன் இணைந்து கொள்வாள். பின் இவர்களுக்குப் பள்ளிப் பாடம் சொல்லிக் கொடுப்பதோடு அன்றைய நாள் நிறைவு பெறும்.

அந்த நாளிற்குப் பிறகு மாணிக்கம் அந்த வீட்டுக்குச் செல்லவில்லை. என்ன தான் கண்ணம்மாவைப் பார்க்க வேண்டுமென அவன் மனம் துடித்தாலும், ரவியையும் மலரையும் பார்த்த பிறகு அவ்வீட்டிற்குச் செல்ல அவன் மனம் ஒப்பவில்லை.

மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், இடையில் ஒரு நாள் மருத்துவரைப் பார்த்து வந்த பிறகு, அவளின் காயம் வெகுவாய் ஆறியிருந்தது. ஆயினும் தினமும் மாணிக்கத்தைப் பார்க்க வேண்டுமென்ற கண்ணம்மாவின் அழுகையும் பிடிவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

நான்காம் நாள் மாலை வேளையில் சமையலறையில் ஆயாவின் உதவியுடன் சமையல் செய்திருந்த மலரின் புடவையைப் பிடித்து இழுத்தாள் கண்ணம்மா.

"என்னடா பாப்பா? சாப்பிட ஏதாவது வேணுமா?" இடுப்பில் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு, கடாயில் கிண்டிக் கொண்டே மலர் கேட்க,

"மாணிக்கம் வேணும். அவர்கிட்ட கூட்டிட்டு போம்மா" கண்ணம்மா அழத் தொடங்கினாள்.

மலருக்கு வந்த கோபத்தில், இடையிலிருந்து அவளைக் கீழிறக்கியவள் கோபமாய், "அந்தாளை எதுக்கு நீ பார்க்கனும்? ஒழுங்கா போய்ப் படி போ" முதுகில் லேசாய் அடி வைக்க, ஆவென அலறி அழவாரம்பித்தாள் கண்ணம்மா.

"அய்யே இதுக்கு எதுக்குப் பாப்பாவை அடிக்கிற நீ! வர வர உனக்கு ரொம்பக் கோபம் வருது" மலரிடம் கடிந்து கொண்ட ஆயா, கண்ணம்மாவைத் தூக்கி கொண்டு படுக்கையறைக்குச் சென்றார்.

"பாப்பா ஏன் அழுகுறா?" வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருந்த கண்ணா கேட்டுக் கொண்டே தங்கையிடம் ஓடி வந்தான்.

அவளின் கண்களைத் துடைத்து, "அழ கூடாது.‌ அழ கூடாது! என் செல்லம்ல" கண்ணம்மாவின் அழுகையைத் தேற்றும் கண்ணனை ரசனையாய் ஆயா பார்த்திருக்க, இவர்களறியாமல் மறைந்திருந்து இவனின் செயலைப் பார்த்த மலருக்கோ கண்ணீர் தளும்ப, கட்டுப்படுத்த முடியாமல் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

கண்ணாவின் செயலில் கண்ணம்மாவின் அழுகை குறைந்திருந்தாலும், மாணிக்கத்தைப் பார்க்க வேண்டுமென்ற பிடிவாதம் குறையவில்லை.

மறுநாள் தான் கண்டிப்பாய் மாணிக்கத்திடம் அழைத்துச் செல்வதாய்க் கூறி அவளைச் சமாதானம் செய்தார் ஆயா.

அதன் பின் சமையலறை சென்றவரின் கண்கள் மலரை ஆதூரமாய் நோக்கியது.

"எனக்குத் தெரியும். பிள்ளையை அடிச்சிட்டு இப்படித் தான் நீ அழுதுட்டு இருப்பனு தெரியும்" என்றவர்,

"எதுக்கு அடிக்கனும்? எதுக்கு இப்படி அழனும்" எனக் கேட்க,

"யாரோ ஒருத்தரை பார்க்கனும்னு இவ அடம் பிடிக்கிறது மட்டும் சரியா ஆயா? அவர் யாரு என்னனு தெரியாம பிள்ளைங்களை எப்படிப் பழக விடுறது? என் பிள்ளைங்க யாருமில்லாமலேயே வளரட்டும்! அவங்களுக்கு நான் போதும்! வேற யாரும் வேண்டாம்" விரக்தியாய் கூறினான்.

"மாணிக்கம் ரொம்ப நல்லவன்ம்மா உன்னை மாதிரியே" என்ற ஆயா அவனின் வாழ்க்கைக் கதையைக் கூறினார்.

'இந்த முரட்டு ஆளுக்கு இவ்ளோ மென்மையான இதயமா' என்று தான் மலருக்குத் தோன்றியது. அவன் மீது பரிதாபம் உண்டானது.

"ஏன் நல்லவங்களை ஆண்டவன் ரொம்பச் சோதிக்கிறான்" சுயபட்சாதபமும் எழுந்தது அவளுக்கு.

காரணமான மாயன். காரணமின்றி எதையும் நிகழ்த்த மாட்டான். காரணம் புரியும் போது நிகழ்வின் செயல் யாவும் விளங்கும். இக்காரணத்தின் செயலை எப்பொழுதோ தொடங்கியிருந்தான் ஆண்டவன்.

அந்த வாரயிறுதி நாளில் மாணிக்கத்தின் வீட்டிற்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டுமென மனத்தினுள் எண்ணிக் கொண்டாள் மலர்.

அவர்கள் பயிலும் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்குப் பெற்றோர்கள் வந்திருந்து உணவு பரிமாறி உண்ண வைத்துப் போகலாம்.

அவ்வாறாய் பலருக்கு அவர்களின் அம்மாவும் சிலருக்கு அப்பாவும் தவறாமல் மதிய வேளையில் வரும் போது, கண்ணம்மா, கண்ணாவிற்கு எவரும் வர மாட்டார்கள்.

அந்தப் பள்ளியில் உணவு உண்ணும் இடம் விஸ்தாரமாய் மரம் செடிகளுக்கிடையே இயற்கையோட இயைந்த பூங்காவை போன்று இருக்கும். அதனருகே இருக்கும் இரும்புக் கதவருகே வந்தால் உணவுண்ணும் குழந்தைகளை வெளியிருந்துமே காணலாம். அங்கு எப்பொழுதும் உணவுண்ணும் வேளையில் முதன்மை காவலாளி இருப்பார். பெற்றோர்களே ஆயினும் அவர் அனுமதி இல்லாமல் எவரும் உள்ளே நுழைய முடியாது. ஆக அவருக்கு அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களும், சில வீடுகளில் இப்பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள வைத்திருக்கும் வேலையாளையும் இக்காவலாளி அறிவார்.

அன்றைய மதிய வேளையில் வழமைப் போல் தனது தங்கை வகுப்பறை நோக்கி சென்று அவளை உணவு உண்ண அழைத்து வந்தான் கண்ணா.

கண்ணம்மாவின் மடியில் துண்டு விரித்து விட்டு, அவளின் டிபன் ஃபாக்ஸை திறந்து ஸ்பூன் வைத்து அவளிடம் கொடுத்தான் கண்ணா. தனக்குமாய் எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

தூரமாய் யாரோ ஒருவரின் தந்தை தனது குழந்தைக்கு உணவு ஊட்டுவதை ஏக்கமாய்ப் பார்த்த கண்ணம்மா, மீதமிருந்த உணவை சாப்பிட அடம் பிடிக்க, அவளைக் கெஞ்சிக் கொஞ்சி ஊட்டி உண்ண வைத்திருந்தான் கண்ணா.

அப்பொழுது அங்கு வந்து நின்றான் மாணிக்கம்.

மாணிக்கத்தைக் கண்டதும், மடியிலிருந்த துணியையும் மறந்து விடுக்கென எழுந்து அவனிடம் ஓடிச் சென்றாள் கண்ணம்மா.

"குட்டிம்மா" எனக் கூறி அவளைக் கைகளில் தூக்கி இருந்தான் மாணிக்கம்.

"மாணிக்கம்" எனக் கூறி கண்ணாவும் மாணிக்கத்திடம் செல்ல, அவனையும் கைகளில் தூக்கியவன், இருவரின் கன்னங்களிலும் முத்தம் பதித்திருந்தான்.

அவர்களைத் தனது இரு பக்கமும் மடியினில் அமர வைத்து கொஞ்சிக் கொண்டும் பேசி கொண்டும் இருந்தவன், அவர்களுக்கு உணவை ஊட்டி விட்டான்.

இதனை நிறைந்த மனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆயா.

அன்றைய நாள் காலை மாணிக்கத்திடம் கண்ணம்மா அவனைக் கேட்டு அழுததைக் கூறியிருந்தார் ஆயா. அதனால் ஆயாவையும் அழைந்து வந்து காவலாளியிடம் உத்தரவு பெற்றே உள்ளே வந்தான் மாணிக்கம்.

"பேசாம நீ இந்தப் பிள்ளைகளைத் தத்து எடுத்துக்கோயேன்! பிள்ளைகளோட அருமை தெரியாதவருக்குலாம் எதுக்கு ஆண்டவன் பிள்ளை வரம் கொடுக்குறாரோ?" ஆற்றாமையில் கூறினார் ஆயா.

"ம்ப்ச் ஆயா பசங்க முன்னாடி என்ன பேச்சு இது" அவரைக் கண்டித்தவன்,

"ஆண்டவன் இந்தப் பொக்கிஷங்களை அவருக்காகக் கொடுக்கலை ஆயா. மேடமுக்காகக் கொடுத்திருக்கான். அன்னிக்கு காலைல அவங்க கையில கண்ணம்மாவைப் பார்த்ததுமே, என் கண்ணம்மா ரொம்ப அன்பான பண்பான பாதுகாப்பான ஒருத்தங்ககிட்ட தான் இருக்கான்ற நிம்மதி தான் வந்துச்சு. இவளை என் அம்மாவா தான் பார்க்கிறேன் ஆயா" என்றவன்,

"கண்ணா, பாப்பாவை இப்படிலாம் பார்த்துக்கனும்னு உனக்கு யாருடா சொல்லிக் கொடுத்தது" எனக் கேட்டான்.

"பாப்பா பிறந்ததும் செம்ம சாஃப்ட்டா குட்டியா அழகா இருந்துச்சு. எனக்குத் தூக்கி வச்சிக்கனும்னு ஆசையா இருக்கும். அப்ப என் கையில பாப்பாவை கொடுத்துட்டு அம்மா சொல்லும், எப்பவுமே நான் பாப்பாவை அன்பா பார்த்துக்கனும்னு. அப்புறம் ஸ்கூல் சேர்க்கும் போது, பாப்பா என் பொறுப்புனு அம்மா சொன்னிச்சு! நான் பாப்பா கை பிடிச்சி கூட்டி போகனும், சாப்பிடும் போது பாப்பா அடம் பிடிச்சா ஊட்டி விடனும். அம்மா இப்படி நிறையச் சொல்லும். எனக்குப் பாப்பாவை ரொம்பப் பிடிக்குமே" ஆசை ஆசையாய் கண்ணா கூற,

அவனை இழுத்தணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான் மாணிக்கம்.

மேடமோட வளர்ப்புக்கு இது ஒன்னு போதும் சாட்சி ஆயா. நல்ல பிள்ளைங்களை நல்லவங்களுக்குக் கொடுத்திருக்கான் ஆண்டவன்.

அத்துடன் அப்பிள்ளைகளிடம் விடை பெற்று கிளம்பி விட்டான் மாணிக்கம்.

அன்று மாலையே பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததும் மதியம் மாணிக்கத்தைப் பார்த்ததை உரைத்து விட்டனர். அதைக் கேட்டுக் கொண்டே ஆயாவை முறைத்த மலர், மாணிக்கத்திடம் சில விஷயங்கள் பேச வேண்டுமென மனத்திற்குள் குறித்துக் கொண்டாள்.

அந்த வாரயிறுதியில் பிள்ளைகளுடன் மாணிக்கத்தின் வீட்டிற்குச் சென்று அவனிடம் நன்றி உரைத்தாள் பொன்மலர்.

மாணிக்கத்தைக் கண்டதும் பிள்ளைகள் இருவரின் உற்சாகமும் சந்தோஷமும், அவர்கள் முகத்திலிருக்கும் பூரிப்பும் என அனைத்தையும் பார்த்திருந்தாள் பொன்மலர்.

"இந்த தேங்க்ஸ் சொல்லவா இவ்ளோ தூரம் மூனு வீடு தள்ளி நடந்து வந்தீங்க" மலரை அவன் கிண்டல் செய்ய,

"இத்தனை நாளா வராம இருந்தேனேனு கிண்டல் பண்றீங்களா?" அவனை முறைத்த மலர்,

"உதவி செஞ்சவங்க வீட்டுக்குப் போய் நன்றி சொல்றது தான்ங்க மரபு" கூறிய மலர்,


"ஒரு விஷயம் உங்களுக்கு விளக்கிட்டு போகலாம்னும் வந்தேன்" என்றாள்.

---தொடரும்

வாசிப்பவர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏

அடுத்த பதிவு புதன் கிழமை அன்று வரும் மக்களே.
 
முள்ளில் பூத்த மலரே !
எழுத்தாளர்: நர்மதா சுப்ரமணியம்
(அத்தியாயம் - 5 & 6)


ரொம்ப அழகா அந்த குழந்தைங்க மேல அன்பு செலுத்துறான் மாணிக்கம்.
அதுலயும் அந்த ஏழு வயசு கண்ணன் தன் தங்கையிடம் காட்டும் அன்பு இன்னும் சிறந்தது. அதுசரி, இந்த மலருக்கும் ரவிக்கும் இடையில் அப்படி என்ன தான் கருத்து வேறுபாடுன்னு தெரியலையே..? புருசன் பொஞ்சாதிக்குள்ள ஒட்டுதல் இல்லைன்னாலும், புள்ளைங்களையும் ஏன் வெறுக்கிறான் அந்த ரவி.?
அப்படி வெறுக்கிறவன் எதுக்கு புள்ளை பெத்துக்கணுமாம் ?


அகிலன் ஆதினி காதல் மிகவும் சிறப்பு.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
முள்ளில் பூத்த மலரே !
எழுத்தாளர்: நர்மதா சுப்ரமணியம்
(அத்தியாயம் - 5 & 6)


ரொம்ப அழகா அந்த குழந்தைங்க மேல அன்பு செலுத்துறான் மாணிக்கம்.
அதுலயும் அந்த ஏழு வயசு கண்ணன் தன் தங்கையிடம் காட்டும் அன்பு இன்னும் சிறந்தது. அதுசரி, இந்த மலருக்கும் ரவிக்கும் இடையில் அப்படி என்ன தான் கருத்து வேறுபாடுன்னு தெரியலையே..? புருசன் பொஞ்சாதிக்குள்ள ஒட்டுதல் இல்லைன்னாலும், புள்ளைங்களையும் ஏன் வெறுக்கிறான் அந்த ரவி.?
அப்படி வெறுக்கிறவன் எதுக்கு புள்ளை பெத்துக்கணுமாம் ?


அகிலன் ஆதினி காதல் மிகவும் சிறப்பு.


😀😀😀
CRVS (or) CRVS 2797
மிக்க நன்றி மா ❤️
 
அகிலன் எப்படியோ தன் மனதை வெளிக் காட்டி விட்டான். ஆதினியின் தாய்க்குத்தான் பிடிக்கவில்லை போல. ஆனாலும் மதுரன் சமாளிப்பான்.🥰🥰🥰

இந்த மாணிக்கம் மலர் கதைதான் கொஞ்சம் குழப்புது. குழப்புறதெல்லாம் இந்த ரைட்டர், இதுல மாயன் பெயரைச் சொல்லி நம்ம கண்ணை மறைக்குது. 😜😄😄

பொன்மலராவது நமக்குக் கொஞ்சம் போட்டுக் கொடுக்கும்னு பார்த்தா, "நான் பெத்து வளர்த்த சொந்தக் குழந்தைகள்", "பாப்பாவோட அப்பா" என்று சொல்லி fill in the blanks மாதிரி நமக்கு தகவல் கொடுக்குது. 😜😂😂😂

ஆனாலும் மாயனை வைத்து இந்த நிம்மி பண்ற மாயம் இருக்கு பாருங்க, எல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க 😜 😜 😂😂🤣🤣🤣🤣🤣
 
அகிலன் எப்படியோ தன் மனதை வெளிக் காட்டி விட்டான். ஆதினியின் தாய்க்குத்தான் பிடிக்கவில்லை போல. ஆனாலும் மதுரன் சமாளிப்பான்.🥰🥰🥰

இந்த மாணிக்கம் மலர் கதைதான் கொஞ்சம் குழப்புது. குழப்புறதெல்லாம் இந்த ரைட்டர், இதுல மாயன் பெயரைச் சொல்லி நம்ம கண்ணை மறைக்குது. 😜😄😄

பொன்மலராவது நமக்குக் கொஞ்சம் போட்டுக் கொடுக்கும்னு பார்த்தா, "நான் பெத்து வளர்த்த சொந்தக் குழந்தைகள்", "பாப்பாவோட அப்பா" என்று சொல்லி fill in the blanks மாதிரி நமக்கு தகவல் கொடுக்குது. 😜😂😂😂

ஆனாலும் மாயனை வைத்து இந்த நிம்மி பண்ற மாயம் இருக்கு பாருங்க, எல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க 😜 😜 😂😂🤣🤣🤣🤣🤣
ஹா ஹா ஹா.. இந்தக் கதையை இப்ப படிக்கும் போது இப்பலாம் இப்படிக் குழப்பாம ஈசியா எழுதுறோமோனு தோணுச்சு 😂 😂 😂 அப்ப எப்படி குழப்பி வச்சிருக்கேன்னு எனக்கே சிரிப்பு 🫢🫢🫢

பார்ப்போம் யாரிந்த மலரும் மாணிக்கமும். மிக்க நன்றி சிஸ் ❤️
 
Back
Top